25 நாட்களில் வீதி விபத்துகளில் சிக்கி 155 பேர் உயிரிழப்பு
கடந்த வாரம் 403 விபத்துக்கள் பதிவாகியுள்ளதுடன், 35 பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 25 நாட்களில் மாத்திரம் நாடளாவிய ரீதியில் 1,375 விபத்துக்கள் பதிவாகியுள்ளதுடன், அவற்றில் பாரிய விபத்துகளில் சிக்கி சுமார் 155 பேர் உயிரிழந்துள்ளதாக போக்குவரத்து கட்டுப்பாட்டு மற்றும் வீதி பாதுகாப்புப் பிரிவுக்குப் பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் டப்ளியு.பி.ஜே. சேனாதீர தெரிவித்தார்.
பொலிஸ் ஊடகப் பிரிவில் 26-01-2026 அன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில், இவ்வாண்டு ஜனவரி 1 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் மாத்திரம் நாடளாவிய ரீதியில் 1,375 விபத்துக்கள் பதிவாகியுள்ளன. இந்த விபத்துக்களில் சிக்கி 155 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த வாரம் 403 விபத்துக்கள் பதிவாகியுள்ளதுடன், 35 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் உயிரிழந்தவர்களில் 12 பாதசாரிகள், 10 மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள், 2 பின்னால் அமர்ந்து பயணித்தவர்கள், 3 துவிச்சக்கர வண்டி சாரதிகள், 5 ஏனைய வாகன சாரதிகள் மற்றும் 3 பயணிகள் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபகாலமாக இடம்பெறும் விபத்துக்களுக்குப் போதைப்பொருள் பாவனை மற்றும் அதிவேகம் ஆகியவையே பிரதான காரணம் என இனங்காணப்பட்டுள்ளன.
வரகாபொல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த இரு இளைஞர்களும் ஹெரோயின் போதைப்பொருள் பயன்படுத்தியிருந்தமை கண்டறியப்பட்டுள்ளது. அதேபோல், நீர்கொழும்பு - பெரியமுல்ல பகுதியில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநரை மோதிவிட்டுத் தப்பிச் சென்ற சொகுசு வாகனத்தை 600 மேற்பட்ட சிசிரிவி கமராக்களை பொலிஸார் ஆய்வு செய்துள்ளனர். விபத்து ஏற்படுத்திவிட்டுத் தப்பிச் செல்வோருக்கு எதிராக இனிவரும் காலங்களில் கொலைக் குற்றச்சாட்டின் கீழ் வழக்குத் தொடரப்படும். அதற்குத் தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
வவுனியா - பெரியகுளம் பகுதியில் கடமையில் இருந்த போக்குவரத்துப் பொலிஸார் இருவரை வேண்டுமென்றே மோதித் தள்ளிய லொறி சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு வாகனங்களில் மோதிவிட்டுச் செல்லும் சாரதிகளுக்கு எதிராகக் கொலை முயற்சி மற்றும் மோட்டார் வாகன சட்டங்களின் கீழ் பாரிய தண்டனைகள் வழங்கப்படும். இதேவேளை, அதிவேக நெடுஞ்சாலைகளில் இருக்கைப்பட்டி அணியாத 1,900-க்கும் மேற்பட்டோருக்கு எதிராக இந்த மாதத்தில் மாத்திரம் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதிக சத்தத்துடன் கூடிய எஞ்சின்களைக் கொண்ட மோட்டார் சைக்கிள்கள் மற்றும் பயணிகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் அதிக ஒலியுடன் இசை ஒளிபரப்பும் பேருந்து சாரதிகளுக்கு எதிராகவும் நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்புகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. சட்டவிரோத மோட்டார் சைக்கிள்களை விடுவிக்கப் பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். வீதி ஒழுங்குமுறைகளைப் பேணுவது பொதுமக்களின் உயிரைப் பாதுகாப்பதற்கே ஆகையால் சகல சாரதிகளும் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்றார்.





