சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ளோர் எண்ணிக்கை 31 000ஆக உயர்வு
ஞாயிற்றுக்கிழமை காலை 5.30 மணிக்கு அதே பிராந்தியத்தில், திருகோணமலைக்கு வடகிழக்கே சுமார் 720 கி.மீ தூரத்தில் மையம் கொண்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
 
        
தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வு நிலையானது, நேற்று மாலை 6 மணியுடனான கடந்த 6 மணித்தியாலங்களில் மணிக்கு 10 கி.மீ வேகத்தில் மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து, வலுவடைந்து ஆழ்கடல் காற்றழுத்தத் தாழ்வு நிலையாக மாறியுள்ளது. இது 26-10-2025 அன்று ஞாயிற்றுக்கிழமை காலை 5.30 மணிக்கு அதே பிராந்தியத்தில், திருகோணமலைக்கு வடகிழக்கே சுமார் 720 கி.மீ தூரத்தில் மையம் கொண்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இது மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த 24 மணித்தியாலங்களில் தென்மேற்கு மற்றும் அண்மைய மேற்கு - மத்திய வங்காள விரிகுடாவில் புயலாக மேலும் வலுவடைய வாய்ப்புள்ளதாகவும், அதன் பின்னர், இது வடமேற்கு நோக்கி நகர்ந்து நாளை செவ்வாய்கிழமைக்குள் தீவிர புயலாக வலுவடையக் கூடும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. தொடர்ந்து வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை ஆந்திரப் பிரதேச கடற்கரையை கடக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் காற்றழுத்த தாழ்வு நிலையால் கடந்த 17ஆம் திகதி முதல் நாட்டின் பல மாவட்டங்களிலும் கடும் காற்றுடனான மழை பெய்து வருகிறது. இதனால் குருணாகல், புத்தளம், அநுராதபுரம், பதுளை, மொனராகலை, காலி, அம்பாந்தோட்டை, களுத்துறை, கொழும்பு, கம்பஹா, கேகாலை, இரத்தினபுரி, நுவரெலியா, கண்டி, வவுனியா, யாழ்ப்பாணம், திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஆகிய 18 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
இம்மாவட்டங்களில் 7944 குடும்பங்களைச் சேர்ந்த 31 623 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மேலும் 5 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதோடு, 847 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. அத்தோடு 132 குடும்பங்களைச் சேர்ந்த 544 பேர் 4 பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
கொழும்பில் சீதாவாக்கை பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட பிரதேசத்துக்கும், காலியில் யக்கலமுல்ல, நெலுவ, நாகொட, பத்தேகம, எல்பிட்டிய பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட பிரதேசங்களுக்கும், களுத்துறையில் ஹொரண, வலல்லாவிட்ட மற்றும் இங்கிரிய பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட பிரதேசங்களுக்கும், கண்டியில் உடுநுவர, தொலுவ, பஹததும்பர, பஸ்பாகே கோரள, கங்கா இஹல கோரள, பஹதஹேவாஹெட்ட, உடபலாத்த, தெல்தோட்டை, உடதும்பர மற்றும் யட்டிநுவர பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட பிரதேசங்களுக்கும் விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நடைமுறையிலுள்ளது.





 
  
