முன்னாள் ஜனாதிபதி ரணிலுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு
குறித்த வழக்கில் ஆஜராவதற்காக ரணில் விக்ரமசிங்க 29-10-2025 அன்று பிற்பகல் நீதிமன்றத்திற்கு பிரவேசித்திருந்தார்.
 
        
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக பொது சொத்துச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை எதிர்வரும் ஜனவரி மாதம் 28 ஆம் திகதி மீண்டும் அழைக்குமாறு கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. 
குறித்த வழக்கில் ஆஜராவதற்காக ரணில் விக்ரமசிங்க 29-10-2025 அன்று பிற்பகல் நீதிமன்றத்திற்கு பிரவேசித்திருந்தார். 
இதன்போது முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தொடர்பான விசாரணையை துரிதமாக நிறைவுசெய்து, அது தொடர்பில் சந்தேகநபர்கள் எவரேனும் இருப்பின் அவர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு கோட்டை நீதவான் இசுரு நெத்திகுமார இன்று (29) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு உத்தரவிட்டார். 
கடந்த வழக்கு தினத்தில் நீதிமன்றம் சார்ந்து இடம்பெற்ற சம்பவங்களால் நீதிமன்றத்திற்கு அவமதிப்பு ஏதும் ஏற்பட்டுள்ளதா? என்பது குறித்து விசாரணை நடத்தி, அதற்குப் பொறுப்பான நபர்கள் யார், அவர்கள் தொடர்பில் எடுக்கப்படும் நடவடிக்கைகள் என்ன என்பது குறித்தும் அடுத்த வழக்குத் திகதியன்று நீதிமன்றத்திற்கு அறிவிக்குமாறும் நீதவான் இதன்போது பணிப்புரை விடுத்தார். 
இதனையடுத்து, இந்த வழக்கை எதிர்வரும் ஜனவரி மாதம் 28 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு அழைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.





 
  
