அரசியல் பழிவாங்கல்களையும் இனியும் பார்த்துக் கொண்டிருக்க போவதில்லை: ஐக்கிய தேசியக் கட்சி
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்டுள்ளமையானது இலங்கையில் ஜனநாயகத்தில் ஏற்பட்டுள்ள பெரும் கரும்புள்ளியாகும்.
நாட்டில் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் ஜனநாயக மீறல்களையும், அரசியல் பழிவாங்கல்களையும் இனியும் பார்த்துக் கொண்டிருக்க போவதில்லை. சகல கட்சிகளுடனும் இணைந்து ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கான போராட்டத்தை ஆரம்பிப்போம் என ஐக்கிய தேசிய கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் கூட்டாகத் தெரிவித்தனர்.
கொழும்பு – பிளவர் வீதியில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதியின் அரசியல் அலுவலகத்தில் 23-08-2025 அன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட ஊடகவியலாளர் மாநாட்டில் அவர்கள் இதனைத் தெரிவித்தனர்.
ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன, பொதுச் செயலாளர் தலதா அத்துகோரள, பிரதி தலைவர் ருவான் விஜேவர்தன, சிரேஷ்ட உப தலைவர் அகிலவிராஜ் காரியவசம், தேசிய ஒருங்கிணைப்பாளர் சாகல ரத்நாயக்க, நவீன் திஸாநாயக்க, ஹரின் பெர்னாண்டோ உள்ளிட்டோர் இவ் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டிருந்தனர்.
இதன் போது கருத்து வெளியிட்ட ஐ.தே.க. பொதுச் செயலாளர் தலதா அத்துகோரள,
ரணில் விக்கிரமசிங்கவின் வரலாற்றை எவருக்கும் புதிதாக தெளிவுபடுத்த வேண்டியதில்லை. 2022 நெருக்கடியில் நாட்டைப் பொறுப்பேற்று அவர் அந்த சவாலில் வெற்றி கொண்டமை அதற்கு சிறந்த உதாரணமாகும். கடந்த ஆண்டு இரு தேர்தல்களை நடத்தக் கூடிய சூழலை ரணில் விக்கிரமசிங்க உருவாக்கியதன் காரணமாகவே இன்று தேசிய மக்கள் சக்தி ஆட்சியிலிருக்கிறது. முன்னாள் ஜனாதிபதியொருவரைக் கண்டு அரசாங்கம் ஏன் இவ்வாறு அச்சப்படுகிறது?
ஊழல் காரணிகளால் அவர் கைது செய்யப்பட்டுள்ளாரெனக் கூறுவதை ஏற்றுக் கொண்டாலும், இலங்கையில் இதற்கு முன்னர் இந்த ஊழல் மாத்திரம் தான் பதிவாகியுள்ளதா? இது மக்கள் சிந்திக்க வேண்டிய ஒரு விடயமாகும். அரச சொத்துக்கள், நிதி என்பன முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதாக இதற்கு முன்னர் பல வழக்குகள் இடம்பெற்றிருக்கின்றன. அவ்வாறான குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளானவர்கள் நாட்டில் ஆட்சியமைத்திருக்கின்றனர்.
ஆனால் அவர்களை விடுத்து நாட்டைக் கட்டியெழுப்பியவர்கள் தண்டிக்கப்படுவது தான் சட்டத்தின் ஆட்சியா? ஜீ.77 மாநாட்டில் கலந்து கொண்ட போது கிடைக்கப் பெற்ற அழைப்பிற்கமையவே முன்னாள் ஜனாதிபதி லண்டன் சென்றிருந்தார். அது எவ்வாறு தனிப்பட்ட விஜயமாகக் கருதப்படும்? அவ்வாறெனில் தற்போதைய ஜனாதிபதி தனது குடும்பத்தினரைப் பார்க்கச் செல்லும் போது தனக்கான வாகனங்களில் அன்றி பொது போக்குவரத்திலா செல்கின்றார்?
2023 வரவு – செலவு திட்டத்தில் ஜனாதிபதிக்கான நிதி ஒதுக்கீட்டில் ஒதுக்கப்பட் நிதியே இதற்காக பயன்படுத்தப்பட்டுள்ளது. அவ்வாறில்லை எனில் ஜே.வி.பி. அன்றே இது குறித்து கேள்வியெழுப்பியிருக்க முடியுமல்லவா? எமக்கு ஆலோசனைகளை வழங்கிக் கொண்டு அவர் அரசியலிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார். ஓய்வு பெற்றுள்ள முன்னாள் ஜனாதிபதியைக் கண்டு அச்சப்பட வேண்டாம் என அரசாங்கத்திடம் கூறுகின்றோம் என்றார்.
இதன் போது கருத்து தெரிவித்த ஐ.தே.க. சிரேஷ்ட உப தலைவர் அகிலவிராஜ் காரியவசம் ,
நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு நாம் மதிப்பளிக்கின்றோம். ஆனால் அண்மைக்காலமாக நீதித்துறை சார் தீர்மானங்கள், நடவடிக்கைகள் முன்கூட்டியே சமூக வலைத்தளங்களில் வெளியாவது எமக்கு பெரும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
முன்னாள் அரச தலைவர்கள் திட்டமிட்டு அரசியல் பழிவாங்கல்களுக்கு உட்படுத்தப்படுகின்றனரா? நாட்டில் நீதித்துறையின் சுயாதீனத்தன்மையை உறுதிப்படுத்துவதற்காக சகல துறைகளிலும் சுயாதீன ஆணைக்குழுக்களை அறிமுகப்படுத்தியதோடு, ஊழல் ஒழிப்பு சட்டத்தையும் ரணில் விக்கிரமசிங்கவே முன்வைத்தார்.
ஜனாதிபதிகளுக்கு அளவுகடந்த சிறப்புரிமைகள் காணப்பட்ட போதிலும், அவர் அவற்றை எந்த சந்தர்ப்பத்திலும் முறைகேடாகப் பயன்படுத்தவில்லை. எனவே எவ்வித அரசியல் கட்சி பேதங்களும் இன்றி நாம் ஒன்றிணைய வேண்டும்.
ஆளுந்தரப்பல்லாத அரசியல் குழுக்களை ஒடுக்குவதற்கு அரசாங்கம் முயற்சித்தால் நாம் அதற்கெதிராக ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும். ரணில் விக்கிரமசிங்கவின் சில அரசியல் நடவடிக்கைகள் தொடர்பில் எமக்கு அதிருப்தி காணப்பட்டது. அதன் காரணமாகவே நாம் செயற்பாட்டு அரசியலிலிருந்து விலகியிருந்தோம்.
ஆனால் அவரை அரசியல் பழிவாங்கல்களுக்கு உட்படுத்தும் இவ்வாறான சந்தர்ப்பத்தில் எம்மால் ஒதுங்கியிருக்க முடியாது. நாட்டைக் கட்டியெழுப்பிய ஒரு தலைவருக்கு இவ்வாறானதொரு நிலைமை ஏற்படக் கூடாது. அதற்கு இடமளிக்கவும் முடியாது. எனவே சகல எதிர்க்கட்சிகளும் இணைந்து ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்காகவும், அரசியல் பழிவாங்கல்களை தடுப்பதற்குமான போராட்டத்தை ஆரம்பிப்போம் என்றார்.
பிரதி தலைவர் ருவான் விஜேவர்தன தெரிவிக்கையில்,
2022 நெருக்கடியின் போது பிரதமராக பதவியேற்ற போது தனது இல்லம் தீக்கிரையாக்கப்பட்ட போது கூட அச்சமின்றி சவாலை ஏற்று இரண்டு ஆண்டுகளில் நாட்டைக் கட்டியெழுப்பினார். அவரால் ஆரம்பிக்கப்பட்ட வேலைத்திட்டங்களையே இன்று இந்த அரசாங்கமும் முன்னெடுத்துச் செல்கிறது. அவ்வாறான ஒருவருக்கு இவ்வாறானதொரு துரதிஷ்டவசமான நிலைமை ஏற்பட்டுள்ளமை உண்மையில் கவலைக்குரியது. அரச நிறுவனங்களும், திணைக்களங்களும் அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளதா என்ற சந்தேகம் எழுகிறது.
அவ்வாறு இடம்பெற்றிருந்தால் அது மிகவும் அச்சுறுத்தல் மிக்க சூழலாகும். இவ்வாறானதொரு முறைமை மாற்றத்தை நாட்டு மக்கள் எதிர்பார்க்கவில்லை. எனவே ஏனைய கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து இந்த பிரச்சினைகளுக்கான தீர்வினைக் காண நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறில்லை எனில் நாட்டின் ஜனநாயகத்துக்கு அது பாரிய அச்சுறுத்தலாக அமையும். நாட்டுக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்ட ரணில் விக்கிரமசிங்க நிச்சயம் இந்த சவாலை வெற்றி கொள்வார். கட்சி என்ற ரீதியில் நாம் அனைவரும் அவருடன் இருப்போம் என்றார்.
நவீன் திஸாநாயக்க தெரிவிக்கையில்,
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்டுள்ளமையானது இலங்கையில் ஜனநாயகத்தில் ஏற்பட்டுள்ள பெரும் கரும்புள்ளியாகும். இது அரசியல் பழிவாங்கல் என்பது தெளிவாகத் தெரிகிறது. எவ்வாறிருப்பினும் எமது தலைவரைப் பாதுகாத்துக் கொண்டு நாம் சவால்களை வெற்றி கொள்வோம். இது தற்போது அனைத்து கட்சிகளும் ஒன்றிணைவதற்கு உருவாகியுள்ள சிறந்த சந்தர்ப்பமாகும். இந்த தன்னிச்சையான சர்வாதிகார ஆட்சியை நிறைவுக்கு கொண்டு வர சகலரும் ஒன்றிணைய வேண்டும்.
முன்னாள் ஜனாதிபதியின் லண்டன் விஜயம் உத்தியோகபூர்வ விஜயமாகவே கருதப்படுகிறது. அதற்கான ஆவணங்கள் எம்மிடம் உள்ளன. அவை நீதிமன்றத்திலும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. அரசியல் பழிவாங்கல்களை முன்னெடுத்துக் கொண்டிருக்கும் இந்த சிறுபிள்ளைத் தனமான அரசியல் முடிவுக்கு வர வேண்டும். இவ்வாறான செயற்பாடுகள் எமது தலைவரை மேலும் பலப்படுத்தும். இந்த சதியை எவ்வாறேனும் தோற்கடிப்போம். அச்சமின்றி அனைவரும் எம்முடன் இணையுங்கள் என அழைப்பு விடுகின்றோம் என்றார்.





