கிளிநொச்சியில் 'தமிழர் தேசத்தின் கரிநாள்' கவனயீர்ப்பு போராட்டம்
தமிழர் தாயகப்பரப்பில் இடம்பெறும் நில ஆக்கிரமிப்புக்களை நிறுத்துமாறு வலியுறுத்தியும் கோஷங்களை எழுப்பியவாறும், பதாதைகளைத் தாங்கியவாறும் ஆர்ப்பாட்டப்பேரணியில் ஈடுபட்டிருந்தனர்.
இலங்கையின் 78ஆவது சுதந்திரனமானது 'தமிழர் தேசத்தின் கரிநாள்' எனப் பிரகடனப்படுத்தி வடக்கிலும், கிழக்கிலும் பாரிய கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் பல்கலைகமகழக சமூகம், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், சிவில் சமூக அமைப்புக்கள், தமிழ் அரசியல் பிரமுகர்களின் பங்கற்புடன் முன்னெடுக்கப்பட்ட மாபெரும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டப் பேரணியானது 04-02-2026அன்று கிளிநொச்சி கந்தசுவாமிகோவில் முன்றலில் இருந்து ஆரம்பித்து, பசுமைப்பூங்கா வரையில் சென்றிருந்தது.
இந்த பேரணியில் பங்குபற்றியோர் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கான நீதி, வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதி எனபவற்றைக் கோரி கோசங்களை எழுப்பியதுடன், தமிழ் இனப்பிரச்சினைக்கான தீர்வை வலியுத்தியும், தமிழர் தாயகப்பரப்பில் இடம்பெறும் நில ஆக்கிரமிப்புக்களை நிறுத்துமாறு வலியுறுத்தியும் கோஷங்களை எழுப்பியவாறும், பதாதைகளைத் தாங்கியவாறும் ஆர்ப்பாட்டப்பேரணியில் ஈடுபட்டிருந்தனர்.
அதேவேளை பங்கேற்பாளர்கள் தமிழர்கள் இந்த நாட்டில் அடிமைப்படுத்தப்படுவதையும், கொடுமைப்படுத்தப்படுவதையும் வெளிப்படுத்தும் வகையிலான காட்சிப் பொருட்களைத் தாங்கியவாறு 'சிங்ககொடி அவமானச் சின்னம், இலங்கையின் சுதந்திரநாள் தமிழர்களுக்கு கரிநாள்' எனக்கோசங்களை எழுப்பியவாறும் இருந்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான துரைராசா ரவிகரன், சிவஞானம் சிறீதரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ஆகியோர்பங்கேற்றிருந்ததுடன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள், வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், உள்ளுராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள், சிவில் சமூகசெயற்பாட்டாளர்கள், மதத்தலைவர்கள் எனப் பெருந்திரளானவர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் குறித்த ஆர்ப்பாட்டப்பேரணி ஏ-09வீதியில் நகர்ந்தபோது, பிரதானவீதியின் ஒருபக்க வழித்தடத்தில் வீதி போக்குவரத்து தடைப்பட்டது. இதனைக் காரணம் காண்பித்து பொலிஸார் போராட்டக்காரர்களை தடுத்த நிறுத்த முற்பட்டபோதும், பங்கேற்பாளர்கள் அதற்கு எதிர்ப்பு வெளியிடடவும் வாதப்பிரதவாதங்கள் ஏற்பட்டன. எனினும் போராட்ட ஏற்பாட்டுக் குழுவினரின் பொலிஸாருடன் தொடர்ச்சியாக உரையாடியதையடுத்து பொது அமைதிக்கு பங்கம் ஏற்படாது பேரணியினர் எதிர்ப்புக்களை வெளியிட்டவாறு சென்றிருந்தனர்.
எதிர்ப்பு போராட்டம் நகர்ந்து சென்றுகொண்டிருந்தபோது அதில் கலந்து கொண்ட தாயார் ஒருவர் திடீரென மயங்கி விழுந்துள்ளார். அதிக வெப்பம் மற்றும் வயது மூப்பு காரணமாக அவர் மயங்கி வீழ்ந்ததாக தெரிவிக்கப்படுவதோடு குறித்த தாயாருக்கு அவசர உதவி வழங்கப்பட்டு வைத்தியசாலைக்கு பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டார்.
இதேவேளை, 78ஆவது சுதந்திர தினத்துக்கு எதிர்ப்பு வெளியிடும் வகையில் யாழ். பல்கலைக்கழகத்தில் கறுப்புக்கொடி ஏற்றப்பட்டது. குறித்த தினத்தினை தமிழ் மக்கள் இன்னமும் கரிநாளாகவே கருதுகின்றார்கள் என்பதை வெளிப்படுத்தும் வகையில் தான் இந்தக் கறுப்புக்கொடி ஏற்பட்டதாக பல்கலைக்கழக மாணவர்கள் தெரிவித்தனர்.
வவுனியாவில் தொடர்ச்சியாக போராடி வரும் வலிந்து காணமாலாக்கப்பட்ட உறவுகள் தமது போராட்ட பந்தலில் கவனயீர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்தனர்.
இதன்போது. காலனித்துவ முடிவில் ஏற்பட்ட அரசியலமைப்பு தோல்வியை இலங்கை அரசு சுதந்திர தினமாக கொண்டாடும் இந்த நாளை, காணாமல் ஆக்கப்பட்ட தமிழ் குழந்தைகளின் தாய்மார்கள் கரி நாளாக நினைவுகூருகிறோம் என்று குறிப்பிட்டனர்.
சுதந்திரம் எங்களுக்கு கிடைக்கும் நாள், எங்கள் குழந்தைகளின் உண்மை வெளிவரும் நாளே. இது சுதந்திர தினம் அல்ல. இது எங்கள் குழந்தைகள் காணாமல் ஆக்கப்பட்ட கரிநாள் என்றும் அவர்கள் மேலும்தெரிவித்தனர்.





