முன்னாள் அமைச்சர் பியசேன கமகே கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிப்பு
சந்தேகநபரின் வெளிநாட்டுப் பயணங்களுக்கு தடை விதித்த நீதிமன்றம், வழக்கின் சாட்சியாளர்களுக்கு அழுத்தம் கொடுப்பதிலிருந்து விலகியிருக்குமாறும் உத்தரவு பிறப்பித்திருந்தார்.
திறன் அபிவிருத்தி மற்றும் தொழில் பயிற்சி அமைச்சராக கடமையாற்றிய காலப்பகுதியில், உரிய சட்ட விதிமுறைகளை மீறி தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி காலி மாவட்டத்தில் 134 பேரைச் சாதாரண சேவையாளர்களாகத் தமக்கு நெருக்கமான முறையில் இணைத்துக்கொண்டமை உள்ளிட்ட ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் பியசேன கமகே, கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
அதற்கமைய சந்தேகநபரை தலா 20 இலட்சம் ரூபா பெறுமதியான இரு சரீரப் பிணைகளில் விடுவிக்க நீதிவான் நேற்றைய தினம் உத்தரவிட்டிருந்தார்.
இதுதொடர்பான வழக்கு 20-04-2026 அன்று கொழும்பு பிரதான நீதிவான் அஸங்க எஸ். போதரகம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
நிர்வாகச் சேவைத் திணைக்களத்தின் அங்கீகரிக்கப்பட்ட ஆட்சேர்ப்பு நடைமுறைகளை மீறி, காலி மாவட்டத்தைச் சேர்ந்த 134 பேரைத் தொழிநுட்பக் கல்வி மற்றும் பயிற்சித் திணைக்களத்தில் சாதாரண சேவையாளர்களாக இணைத்துக் கொண்டதன் மூலம் அவர் ஊழல் புரிந்துள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு நீதிமன்றில் தெரிவித்தது.
அத்துடன், ஒழுக்காற்று காரணங்களுக்காக இடமாற்றம் செய்யப்பட்டிருந்த யாழ்ப்பாணம் தொழிநுட்பக் கல்லூரியின் பணிப்பாளர் என். யோகராஜாவின் இடமாற்றத்தை இரத்துச் செய்யுமாறு, தொழிநுட்பக் கல்வி மற்றும் பயிற்சித் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்துக்குப் பலமுறை அழுத்தம் கொடுத்து அவருக்குச் சாதகமாகச் செயற்பட்டதன் மூலம் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியதாகவும் சந்தேகநபரான முன்னாள் அமைச்சர் பியசேன கமகே மீது குற்றம் சுமத்தப்பட்டது.
இந்நிலையில் நேற்றைய தினம் வழக்கு விசாரணையின் போது மன்றில் முன்வைக்கப்பட்ட இரு தரப்பு சாட்சியங்களையும் பரிசீலித்த நீதிவான், முன்னாள் அமைச்சரை தலா 20 இலட்சம் ரூபா பெறுமதியான இரு சரீரப் பிணைகளில் விடுவிக்க உத்தரவிட்டார்.
அத்துடன், சந்தேகநபரின் வெளிநாட்டுப் பயணங்களுக்கு தடை விதித்த நீதிமன்றம், வழக்கின் சாட்சியாளர்களுக்கு அழுத்தம் கொடுப்பதிலிருந்து விலகியிருக்குமாறும் உத்தரவு பிறப்பித்திருந்தார்.
இவ்வழக்கு மீண்டும் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 21 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதுடன், அன்றைய தினம் விசாரணைகளின் முன்னேற்றத்தை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறும் இலஞ்ச ஊழல்விசாரணை ஆணைக்குழுவை நீதிவான் பணித்திருந்தார்.





