அரசியலமைப்பு பேரவையிருந்து விலகுவதற்கு சிறிதரன் எம்.பிக்கு ஒருவார காலஅவகாசம்
அரசியலமைப்புப்பேரவையின் உறுப்பினர் பதவியிலிருந்து இராஜினாமா செய்யுமாறு கோரி சிறிதரனுக்குக் கடிதம் அனுப்புவதற்கு அக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்றக்குழுத் தலைவர் எஸ்.சிறிதரன் அரசியலமைப்புப்பேரiவியன் உறுப்பினராகத் தொடர்ந்து செயற்படுவது தம்மையும், தமது கட்சியையும் மேலும் சங்கடத்துக்கு உட்படுத்தும் என்பதனால் கட்சியின் அரசியல் குழுவில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்துக்கு அமைய, கடிதம் கிடைக்கப்பெற்று ஒரு வாரத்துக்குள் அரசியலமைப்புப்பேரவையில் இருந்து இராஜினாமா செய்யுமாறு கோரி தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் எம்.சு.சுமந்திரன் சிறிதரனுக்குக் கடிதம் அனுப்பியுள்ளார்.
வவுனியாவில் கடந்த 3 ஆம் திகதி நடைபெற்ற இலங்கைத் தமிழரசுக்கட்சியின் அரசியல் குழுக்கூட்டத்தில், சிறிய மற்றும் சிறுபான்மைக் கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி அரசியலமைப்புப்பேரவையில் அங்கம் வகிக்கும் கட்சியின் பாராளுமன்றக்குழுத்தலைவர் சிறிதரன், பேரவையில் செயற்படும் விதம் குறித்து அண்மையில் சர்ச்சைக்குள்ளான விடயங்கள் பற்றிய ஆராயப்பட்டது.
அதன்படி மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் பதில் தலைவர் நியமனம், இழப்பீட்டுக்கான அலுவலக உறுப்பினர் நியமனம், கணக்காய்வாளர் நாயகம் பதவிக்கான நியமனம், பொலிஸ் ஆணைக்குழு உறுப்பினர் நியமனம் என்பன உள்ளடங்கலாக இதுவரையில் இடம்பெற்ற 8 நியமனங்கள் தொடர்பான வாக்களிப்பின்போது சிறிதரன் அரசாங்கத்தரப்புடன் இணைந்து வாக்களித்திருப்பதாகவும், அவர்களில் சிலர் முன்னாள் இராணுவ மற்றும் பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகள் எனவும் இக்கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டது. அதனையடுத்து அரசியலமைப்புப்பேரவையின் உறுப்பினர் பதவியிலிருந்து இராஜினாமா செய்யுமாறு கோரி சிறிதரனுக்குக் கடிதம் அனுப்புவதற்கு அக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
இவ்வாறானதொரு பின்னணியிலேயே கடிதம் கிடைக்கப்பெற்று ஒரு வாரத்துக்குள் அரசியலமைப்பு பேரவையின் உறுப்பினர் பதவியிலிருந்து இராஜினாமா செய்யுமாறு கோரி 07.01.2026 எனும் திகதியிடப்பட்ட கடிதம் தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரனால் பாராளுமன்றக்குழுத் தலைவர் சிறிதரனுக்கு அனுப்பிவைக்கப்பட்டிருப்பதாக அறியமுடிகின்றது.





