பொலிஸ் மா அதிபரிடம் நாமல் எம்.பி. விடுத்துள்ள கோரிக்கை
பொலிஸ் மா அதிபர் , இந்த அளவுக்கு அரசியல்வாதிகளுக்கு முட்டுக் கொடுக்க வேண்டாமென கேட்டுக்கொள்கிறேன்.
பொலிஸ் திணைக்களத்தின் கௌரவத்தைப் பாதுகாப்பதை விடுத்து, பொலிஸ் மா அதிபரும் பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் தற்போதைய அரசாங்கத்தினதும் ஜே.வி.பி கட்சியினதும் ஊடகப் பேச்சாளர்கள் போன்று செயற்படுவதாக பொதுஜனபெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ குற்றம் சுமத்தியுள்ளார்.
கொழும்பில் 27-12-2025அன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்: பொலிஸ் துறையின் கௌரவம் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது. ஒரு தனியார் ஊடக நிறுவனம் பொலிஸாரின் நடவடிக்கையை நேரடி ஒளிபரப்பு செய்ததற்காக, அந்த ஊடகத்தை முடக்குவதற்கு அரசாங்கம் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவை பயன்படுத்துகிறது. ஊடகங்களை ஒடுக்கும் இந்த நடவடிக்கையில் பொலிஸ் மா அதிபர் முன்னின்று செயற்படுவது கவலைக்குரிய விடயமாகும்.
பொலிஸ் மா அதிபர் , இந்த அளவுக்கு அரசியல்வாதிகளுக்கு முட்டுக் கொடுக்க வேண்டாமென கேட்டுக்கொள்கிறேன். உங்கள் கீழ் பணியாற்றும் ஒரு பொலிஸ் அதிகாரி தாக்குதலுக்கு உள்ளாகி சிறையில் இருக்கும் நிலையில், அவரது கௌரவத்தைப் பாதுகாக்க நீங்கள் முன்வரவில்லை.
எங்களை 'திருடர்கள்' என்றும் 'போதைப்பொருள் வியாபாரிகள்' என்றும் விமர்சித்த இந்த அரசாங்கத்தின் பாராளுமன்ற உறுப்பினர்களே கஞ்சா தோட்டம் வைத்திருந்து அகப்பட்டுள்ளனர். இவர்களது ஆதரவாளர்களும், ஆசிரியர் சங்க பிரதிநிதிகளுமே பாடசாலை மாணவர்களுக்குப் போதைப்பொருள் விற்பனை செய்து கைதாகிறார்கள். சட்டத்தை பாரபட்சமின்றி நடைமுறைப்படுத்துவதை விடுத்து, ஆளும் தரப்பினரைக் காப்பாற்றுவதிலும் ஊடகங்களை அச்சுறுத்துவதிலும் பொலிஸார் கவனம் செலுத்துவது ஜனநாயகத்திற்கு ஆபத்தானது.
நாட்டை நிமிர்த்தப் போகிறோம் என்று கூறிக்கொண்டு இவ்வாறான அடக்குமுறைகளை அரசாங்கம் முன்னெடுக்குமானால், அதன் இறுதிப் பாதிப்பை நாட்டு மக்களே எதிர்கொள்ள நேரிடும் என்பதை ஆட்சியாளர்கள் நினைவில் கொள்ள வேண்டும் என்றார்.





