வெளிநாடுகளுக்கு டொலர்களை அனுப்பிய வர்த்தகருக்கு ஜுலை 9 வரை விளக்கமறியல்
சந்தேகநபர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி நீதிமன்றத்தில் சமர்ப்பணங்களை முன்வைக்கையில், தனது கட்சிக்காரரை எந்தவொரு நிபந்தனையுடனான பிணையிலாவது விடுவிக்குமாறு நீதிமன்றத்திடம் கோரினார்.
வெளிநாடுகளில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்யும் போர்வையில் சுமார் 190 பில்லியன் ரூபா பணத்தை நாட்டிலிருந்து வெளியேற்றிய சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள நபரை ஜூலை 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த இந்த சந்தேகநபர், 25-06-2026அன்று கொழும்பு பிரதான நீதிவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
சந்தேகநபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது, அரசாங்க சட்டத்தரணி ஒஸ்வால்ட் பெரேரா நீதிமன்றத்தில் சமர்ப்பணங்களை முன்வைக்கையில், இந்த சந்தேகநபர் வெளிநாடுகளில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்வதாகக் கூறி, சுமார் 190 பில்லியன் ரூபா பணத்தை சட்டவிரோதமான முறையில் வெளிநாடுகளுக்கு அனுப்பியுள்ளார் எனத் தெரிவித்தார்.
சந்தேகநபர் தந்தி பரிமாற்ற முறையின் மூலம் கொழும்பு கோட்டையிலுள்ள 'ஏ. வை இன்வெஸ்ட்மென்ட்' என்ற நிறுவனத்தின் ஊடாக இப்பணத்தை அமெரிக்க டொலர்களாக வெளிநாடுகளுக்கு அனுப்பியுள்ளார் என்றும் அவர் குறிப்பிட்டார்.
பொருட்களை இறக்குமதி செய்யும் போர்வையில் இவ்வாறு நாட்டின் பணத்தை வெளிநாடுகளுக்கு வௌியேற்றிய போதிலும், சந்தேகநபர் அவ்வாறு அனுப்பிய பணத்திற்கு நிகராக எவ்வித பொருட்களையும் இந்நாட்டிற்கு இறக்குமதி செய்யவில்லை என்றும் அரசாங்க சட்டத்தரணி சுட்டிக்காட்டினார்.
இப்பணம் எவ்வாறு உழைக்கப்பட்டது அல்லது எந்த நோக்கத்திற்காக சந்தேகநபரால் வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டது என்பது குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
இதற்கு மேலதிகமாக, சந்தேகநபர் போதைப்பொருள் கடத்தல்காரர்களின் பணத்தையும் தனது பெயரிலுள்ள வங்கி கணக்குகளில் வைப்புச் செய்துள்ளார் என்றும் அரசாங்க சட்டத்தரணி சுட்டிக்காட்டினார்.
சந்தேகநபர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி நீதிமன்றத்தில் சமர்ப்பணங்களை முன்வைக்கையில், தனது கட்சிக்காரரை எந்தவொரு நிபந்தனையுடனான பிணையிலாவது விடுவிக்குமாறு நீதிமன்றத்திடம் கோரினார்.
முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களை பரிசீலித்த பிரதான நீதவான், பிணைக் கோரிக்கையை நிராகரித்ததுடன் சந்தேகநபரை ஜூலை 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.





