ஆளுங்கட்சி எம்.பி.யின் கருத்துக்கு சட்டத்தரணிகள் சங்கம் கண்டனம்
எந்தவொரு அரசாங்கம் ஆட்சியில் இருந்தாலும், தனது வரலாறு முழுவதும் ஜனநாயகம், நீதித்துறை சுதந்திரம், மனித உரிமைகள் மற்றும் போராட்ட உரிமைகளுக்காக எமது சங்கம் தொடர்ந்தும் குரல்கொடுத்து வந்திருக்கிறது.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ராஜீவ் அமரசூரியவிற்கு எதிராக பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் முற்றிலும் ஆதாரமற்றவை எனத்தெரிவித்துள்ள அச்சங்கம், பாராளுமன்ற சிறப்புரிமையைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் இத்தகைய அரசியல் உள்நோக்கம் கொண்ட அவதூறுகளை வன்மையாகக் கண்டிப்பதாக வும் அறிவித்துள்ளது.
ஆளுங்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அசித நிரோஷன எகொட விதானவினால் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் வகையிலேயே, இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அறிக்கையொன்றை வெளியிட்டு இதனைத் தெரிவித்துள்ளது.
அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: பொதுமக்களை தவறாக வழிநடத்தும் நோக்கில், பாராளுமன்ற சிறப்புரிமைகளை துஷ்பிரயோகம் செய்து இத்தகைய பொய்யான கருத்துக்கள் தெரிவிக்கப்படுவது கவலைக்குரியது. இவ்வாறான அரசியல் தாக்குதல்கள் ஒருபோதும் வெற்றி பெறாது.
நீதித்துறையின் சுதந்திரத்தையும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் கௌரவத்தையும் பாதுகாப்பதில் நாட்டின் சட்டச் சமூகம் என்றும் உறுதியுடன் ஒன்றுபட்டு நிற்கும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.
உயர்நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பது தொடர்பான முன்மொழிவு குறித்து நாம் ஏற்கனவே எமது நிலைப்பாட்டை அறிவித்திருக்கின்றோம். அந்த வகையில் மேல் நீதிமன்றங்களைப் பாதிக்கும் அரசியலமைப்புத் திருத்தங்கள் தற்காலிக சூழ்நிலைகளுக்காகவோ அல்லது அவசர கோலத்திலோ மேற்கொள்ளப்படக் கூடாது என எச்சரிக்கின்றோம்.
இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த திருத்தங்கள், முறையான நிறுவனத் தேவை, வெளிப்படையான நியாயப்படுத்துதல் மற்றும் அனைத்துப் பங்குதாரர்களின் பரந்த கலந்தாய்வுகளுக்குப் பின்னரே கொண்டுவரப்பட வேண்டும். அரசியலமைப்பு ஆட்சியின் மீதான பொதுமக்களின் நம்பிக்கை, அத்திருத்தத்தின் உள்ளடக்கத்திலும் அது அறிமுகப்படுத்தப்படும் முறையிலுமே தங்கியுள்ளது.
எந்தவொரு அரசாங்கம் ஆட்சியில் இருந்தாலும், தனது வரலாறு முழுவதும் ஜனநாயகம், நீதித்துறை சுதந்திரம், மனித உரிமைகள் மற்றும் போராட்ட உரிமைகளுக்காக எமது சங்கம் தொடர்ந்தும் குரல்கொடுத்து வந்திருக்கிறது. அந்த வகையில் நாம் ஒருபோதும் அரசியல் செய்யவில்லை; இனிவருங்காலங்களிலும் செய்யப்போவதுமில்லை என்பதை திட்டவட்டமாக தெரிவித்துக் கொள்கின்றோம்.
மேலும், பாராளுமன்ற சிறப்புரிமை என்ற பாதுகாப்புக் கவசத்தைத் தவிர்த்து, இக்குற்றச்சாட்டுகளை பாராளுமன்றத்திற்கு வெளியே பகிரங்கமாகக் கூறுமாறு பாராளுமன்ற உறுப்பினர் அசித நிரோஷன எகொட விதானவிற்கு சவால் விடுக்கின்றோம். அவ்வாறு கூறும்பட்சத்தில் அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கின்றோம் என்றுள்ளது.





