பெண்கள், சிறுவர் பாதுகாப்பு குறித்து ஐ.நா. பிரதிநிதியுடன் எதிர்க்கட்சித்தலைவர் சஜித் கலந்துரையாடல்
சிவில் சமூகத்திற்கு விழிப்புணர்வு ஏற்படுத்த முக்கியய நிபுணர்களுடன் இணைந்து அறிவு சார் தகவல் பகிர்வு நிகழ்ச்சிகளை நடத்த யோசனை முன்வைத்தார்.
பெண்கள் மற்றும் சிறுவர்களின் பாதுகாப்பு, ஆரோக்கியம் மற்றும் உரிமைகளைப் பாதுகாப்பது தொடர்பாக ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியத்தின் இலங்கைப் பிரதிநிதி புன்ட்சோ வங்ஜெல்லுக்கும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித்தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது.
இச்சந்திப்பின் போது, பெண்கள் மற்றும் சிறுமிகளின் உரிமைகளைப் பாதுகாத்தல், பெண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துதல் மற்றும் பொருளாதாரத்தை வலுப்படுத்துதல் உள்ளிட்ட பல முக்கிய விவகாரங்கள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது. குறிப்பாக, இனப்பெருக்க ஆரோக்கியம், மாதவிடாய் சுகாதாரம், பாலின அடிப்படையிலான வன்முறைகள் மற்றும் பாகுபாடுகளை ஒழித்தல், தொழிலாளர் படையில் பெண்களின் பங்களிப்பை அதிகரித்தல் மற்றும் பாலின சமத்துவத்தை உறுதி செய்யும் கொள்கை வகுப்பு குறித்து இருதரப்பும் விரிவாகக் கலந்துரையாடின.
நாட்டின் அரசியலமைப்பு சட்டக் கட்டமைப்பிற்குள் பெண்கள் மற்றும் சிறுவர்களின் உரிமைகளை அங்கீகரிப்பதையும் பாதுகாப்பதையும் மேலும் வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை எதிர்க்கட்சித் தலைவர் இங்கு வலியுறுத்தினார். மேலும், பெண்கள் உரிமைகள் தொடர்பான விழிப்புணர்வை பாராளுமன்றத்துடன் மட்டும் நிறுத்திக் கொள்ளாமல், நாடு முழுவதும் உள்ள சமூகங்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் எனக் குறிப்பிட்ட அவர், சிவில் சமூகத்திற்கு விழிப்புணர்வு ஏற்படுத்த முக்கியய நிபுணர்களுடன் இணைந்து அறிவு சார் தகவல் பகிர்வு நிகழ்ச்சிகளை நடத்த யோசனை முன்வைத்தார்.
எதிர்க்கட்சித் தலைவரால் முன்வைக்கப்பட்ட யோசனையை முழுமையாக ஏற்றுக்கொண்ட ஐ.நா. பிரதிநிதி, இத்தகைய வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்குத் தேவையான தொழில்நுட்ப உதவிகள், நிபுணத்துவ வழிகாட்டல்கள் மற்றும் சர்வதேச ரீதியிலான சிறந்த நடைமுறைகளைப் பெற்றுத் தர ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியம் முழு ஒத்துழைப்பு வழங்கும் என உறுதியளித்தார்.





