இலங்கை நெருக்கடிக்கு முந்தைய நிலையை எட்டியுள்ளது - கலாநிதி நந்தலால் வீரசிங்க
விரைவில் இலங்கையின் இறையாண்மை கடன் தரவரிசை மேலும் உயர்த்தப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கை சந்தித்த மிக மோசமான பொருளாதார வீழ்ச்சியில் இருந்து மீண்டு, நாட்டின் பொருளாதாரம் தற்போது நெருக்கடிக்கு முந்தைய நிலையை எட்டியுள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
வலுவான பொது நிதி நிலைமை, மேம்படுத்தப்பட்ட நிதி சமநிலை மற்றும் கடன் நிலைத்தன்மையை நோக்கிய முன்னேற்றம் ஆகியவையே இந்த மீட்சியின் முக்கிய தூண்களாக அமைந்துள்ளன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கை 2022 ஆம் ஆண்டில் முதன்முறையாக இறையாண்மை கடன் செலுத்துதலை நிறுத்த நேரிட்ட சூழ்நிலையுடன் ஒப்பிடுகையில், மிக குறுகிய காலத்தில் அடைந்துள்ள இந்த முன்னேற்றகரமான பொருளாதார மீட்சியானது சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்படக்கூடியதொரு குறிப்பிடத்தக்க சாதனையாகும்.
அந்நியச் செலாவணி பற்றாக்குறையினால் ஏற்பட்ட இறக்குமதி மற்றும் எரிபொருள் விநியோக தடைகள், பணவீக்கம் மற்றும் நாணய வீழ்ச்சி ஆகியவற்றால் மக்கள் சந்தித்த இன்னல்களுக்கு மத்தியில், அந்நியச்செலாவணி கையிருப்பை மீண்டும் கட்டியெழுப்புதல், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துதல் மற்றும் கடன் மறுசீரமைப்பு ஆகிய நடவடிக்கைகள் மூலம் பொருளாதார நிலைத்தன்மை மீட்டெடுக்கப்பட்டது.
குறிப்பாக, கடந்த மூன்று ஆண்டுகளில் அரசாங்கத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கான வருமான வீதம் கிட்டத்தட்ட நூறு சதவீதத்தால் உயர்ந்துள்ளமை நிதி ஒழுக்கத்தைப் பேணுவதற்குப் பெரும் பக்கபலமாக அமைந்துள்ளது.
இதன் தொடர்ச்சியாக, சர்வதேச கடன் தர நிர்ணய முகவர் நிறுவனங்களுடன் பேச்சுகள் நடத்தப்பட்டு வருவதாகவும், விரைவில் இலங்கையின் இறையாண்மை கடன் தரவரிசை மேலும் உயர்த்தப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இது உலகளாவிய முதலீட்டாளர்களின் நம்பிக்கையை மீண்டும் வலுப்படுத்த உதவுவதோடு, ஒரு கடுமையான பொருளாதார நெருக்கடியிலிருந்து விரைவாக மீண்டு வரும் நாடுகளுக்கு இலங்கையை சிறந்த முன்மாதிரியாகவும் மாற்றியுள்ளது என்றார்.





