சுரேஷ் சலேவுக்கு சட்ட ரீதியான நிரபராதியென நிரூபிக்கப்படும் உரிமை கிடைக்க வேண்டும் - திலித்
வருக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படும் பட்சத்தில், இந்நாட்டின் ஒவ்வொரு பிரஜைக்கும் உரிமையுள்ள சட்ட ரீதியான நிரபராதி என்று நிரூபிக்கப்படும் உரிமை, அவருக்கும் கிடைக்க வேண்டும்.
சுரேஷ் சலேவுக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படும் பட்சத்தில், இந்நாட்டின் ஒவ்வொரு பிரஜைக்கும் உரிமையுள்ள சட்ட ரீதியான நிரபராதிஎன்று நிரூபிக்கப்படும் உரிமை, அவருக்கும் கிடைக்க வேண்டுமென சர்வஜன அதிகாரம் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர வலியுறுத்தியுள்ளார்.
இந்தியத் தூதரகத்தின் பிரதி உயர்ஸ்தானிகர் கலாநிதி சத்யாஞ்சல் பாண்டே, 05-06-2026அன்று சர்வஜன அதிகாரம் கட்சியின் தலைமையகத்து வருகை தந்து, கட்சித் தலைவர் திலித் ஜயவீர மற்றும் செயற்குழு உறுப்பினர்களைச் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தார். இச்சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போதே திலித் ஜயவீர மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே தொடர்பில் தற்போது எழுந்துள்ள நிலைமையானது, சாதாரண ஒருவருக்கு எதிராகப் பிறப்பிக்கப்படும் தடுப்புக்காவல் உத்தரவாக மாத்திரம் பார்க்கப்படக்கூடாது. இந்நாட்டின் கொடூரமான பயங்கரவாத மற்றும் பிரிவினைவாத நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டுவருவதில் முக்கிய பங்காற்றிய ஒரு வீரமிக்க அதிகாரியாகவே அவரை நாம் பார்க்கின்றோம்.
அத்தகைய ஒருவருக்கு இருக்க வேண்டிய கௌரவம் நாட்டு மக்கள் மத்தியில் இருக்க வேண்டும். அவருக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படும் பட்சத்தில், இந்நாட்டின் ஒவ்வொரு பிரஜைக்கும் உரிமையுள்ள சட்ட ரீதியான நிரபராதி என்று நிரூபிக்கப்படும் உரிமை, அவருக்கும் கிடைக்க வேண்டும்.
ஆனால், தற்போதைய நிலையில் அவர் வன்முறைக்கு உட்படுத்தப்படுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இத்தகைய செயற்பாடுகளினால் நாட்டின் சட்டக் கட்டமைப்பின் மீதுள்ள நம்பிக்கை மாத்திரமன்றி, பெரும் அர்ப்பணிப்புடன் பணியாற்றிய முப்படையினரின் மன உறுதியும் எதிர்காலச் செயற்பாடுகளும் கேள்விக்குறியாகியுள்ளன. இத்தகைய தடுப்புக்காவல் சட்டங்களை இவ்வளவு கொடூரமாகப் பயன்படுத்திய வரலாறு இதற்கு முன்னரும் இருந்ததில்லை.
தாம் ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் இச்சட்டங்களை இவ்வாறான பழிவாங்கும் நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்போவதில்லை என்று வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்தவர்கள், இன்று தமது குறுகிய அரசியல் நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்ளவும், தமக்கு ஆதரவானவர்களைத் திருப்திப்படுத்தவும் இத்தகைய அடாவடித்தனங்களில் ஈடுபடுகின்றனர்.
இதனை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம். மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேவுக்கு இழைக்கப்படும் அநீதிக்கு எதிராக தேசிய மட்டத்திலான போராட்டங்களை முன்னெடுக்க எமது கட்சி தயாராகி வருகின்றது. இதனை இப்போதே தடுக்கத் தவறினால், எமது தாய்நாட்டின் எதிர்காலம் இருண்ட பாதையிலேயே செல்லும்.
அதேவேளை, நாட்டின் உயர் நீதிமன்ற நீதிபதிகளின் பதவிக்காலத்தை அரசாங்கத்துக்குத் தேவையான வகையில் நீட்டிப்பது என்பது, நீதித்துறையின் சுதந்திரத்துக்கு விடுக்கப்பட்ட பாரிய அச்சுறுத்தலாகும். அரசாங்கம் இதனை ஒரு இலஞ்சமாகப் பயன்படுத்தி தமது குறுகிய அரசியல் நிகழ்ச்சி நிரலை நிறைவேற்ற முனைகின்றது. இத்தகைய செயற்பாடு நாட்டின் சட்டக் கட்டமைப்பின் மீதான நம்பிக்கையை முழுமையாகச் சிதைத்துவிடும். நீதிபதிகள் இத்தகைய சலுகைகளைப் பெற்றுக்கொள்ள மறுப்பார்கள் என்றே நான் நம்புகின்றேன்.
ஆனால், இந்த முன்மொழிவு சமூகத்தில் ஒரு தவறான பிம்பத்தை ஏற்படுத்தும். அதாவது, அரசாங்கம் நீதித்துறையின் சுதந்திரத்தை விலைபேச முயற்சிக்கின்றது என்ற கருத்து மக்களிடையே வேரூன்றும். இத்தகைய தன்னிச்சையான மற்றும் நியாயமற்ற பதவிக்கால நீட்டிப்பை எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது. இது குறித்து சட்டத்துறை சார்ந்த அனைவரையும் ஒன்றிணைத்து பாரிய எதிர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க நாம் திட்டமிட்டுள்ளோம் என்றார்.





