கொழும்பு மாநகரசபையின் வரவு ,செலவு திட்டம் 2மேலதிக வாக்குகளால் நிறைவேறியது
மாநகர சபையின் அனைத்து துறைகளின் தலைவர்களின் ஆலோசனைகள் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கருத்துக்களை கேட்டு தயாரித்தே சபைக்கு சமர்ப்பித்திருந்தேன்.
கொழும்பு மாநகரசபையின் அடுத்த வருடத்துக்கான வரவு ,செலவு திட்டம் 2மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. வரவு, செலவு திட்டத்துக்கு ஆதரவாக 58 வாக்குகள் அளிக்கப்பட்டதுடன் எதிராக 56 வாக்குகள் அளிக்கப்பட்டன, 3பேர் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை.
தேசிய மக்கள் சக்தி ஆட்சி அமைத்துள்ள கொழும்பு மாநகரசபையின் அடுத்த வருடத்துக்கான வரவு ,செலவு திட்டம் மாநகர மேயர் விராய் கெலி பல்தசாரினால் கடந்த 22ஆம் திகதி சபைக்கு சமர்ப்பிக்கப்பட்டு, விவாதிக்கப்பட்டது.
இதன்போது இறுதியில் வரவு,செலவு திட்டம் வாக்கெடுப்புக்கு விடப்பட்டபோது, வரவு,செலவு திட்டத்துக்கு ஆதரவாக 57 வாக்குகளும் எதிராக 60 வாக்குகளும் அளிக்கப்பட்டன. அதனடிப்படையில் 3 மேலதிக வாக்குகளால் வரவு,செலவு திட்டம் தோல்வியடைந்தது.
உள்ளூராட்சி மன்ற கட்டளைச்சட்டத்தின் பிரகாரம் வரவு,செலவு திட்டம் சபையில் முதலாவது தடவை தோல்வியடைந்தால், அதனை 14 நாட்களுக்குள் இரண்டாவது தடவை சபைக்கு சமர்ப்பித்து அனுமதித்துக்கொள்ன வேண்டும்.
அதன் பிரகாரம் இரண்டாவது தடவையாக வரவு, செலவு திட்டத்தை சமர்ப்பித்து அனுமதித்துக்கொள்வதற்காக 2025ஆம் வருடத்தின் இறுதி நாளான 31-12-2025அன்று காலை 10மணிக்கு மாநகர சபை, மேயர் விராய் கெலி பல்தசார் தலைமையில் கூடியது.
அதன்போது அவர் , வளமான நகரில் அழகான வாழ்க்கை என்ற தொனிப்பாெருளில் அடுத்த வருடத்துக்கான வரவு செலவு திட்டத்தை கடந்த பல மாதங்களாக ஆராய்ந்து, மாநகர சபையின் அனைத்து துறைகளின் தலைவர்களின் ஆலோசனைகள் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கருத்துக்களை கேட்டு தயாரித்தே சபைக்கு சமர்ப்பித்திருந்தேன்.
என்றாலும் அன்றைய தினம் வரவு ,செலவு திட்டத்தை எங்களால் அனுமதித்துக்கொள்ள முடியாமல் போனது. அதனால் இரண்டாவது தடவையாக இன்று மீண்டும் சமர்ப்பிக்கிறேன். அதனால் கொழும்பு மக்களுக்கு நாங்கள் அனைவரும் இணைந்து சேவை மேற்கொள்ள இதனை அனுமதித்து தருமாறு கேட்டுக்கொள்கிறேன் என கேட்டுக்கொண்டார்.
சபையில் ஏற்பட்ட ஒழுங்குப்பிரச்சினையால், சபை நடவடிக்கைகள் 10 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டு, மீண்டும் 11 மணிக்கு சபை நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்ட பின்னர், சபைக்கு தலைமை தாங்கிய மேயர் பல்தசார் வரவு ,செலவு திட்டத்துக்கு சபை ஆதரவா என கேட்டபோது, எதிர்க்கட்சித் தலைவர் ரிஸா சரூக் வாக்கெடுப்பை கோரினார். அதன் பின்னர் மாநகர செயலாளர் ஹசுனி லியனகேவினால் பெயர் அழைத்து வாக்கெடுப்பு பதியப்பட்டது.
அதன் பிரகாரம் மாநகர சபையின் 117 உறுப்பினர்களில் வரவு செலவு திட்டத்துக்கு ஆதரவாக 58 வாக்குகளும் எதிராக 56 வாக்குகளும் பதிவாகின 3பேர் வாக்களிப்பில் கலந்துகொண்டிருக்கவில்லை. அதன் பிரகாரம் அடுத்த வருடத்துக்கான வரவு செலவு திட்டம் 2மேலதிக வாக்குகளால் சபையில் நிறைவேற்றப்பட்டதாக மேயர் சபைக்கு அறிவித்தார்.
இதேவேளை, கடந்த 22ஆம் திகதி வரவு ,செலவு திட்டம் சமர்க்கப்பட்டு வாக்களிப்பு இடம்பெற்றபோது வரவு ,செலவு திட்டத்துக்கு ஆதரவாக 57 வாக்குகளும் எதிராக 60 வாக்குகளும் பதிவாகின. அதனடிப்படையில் 3மேலதிக வாக்குகளால் தோல்வியடைந்தது. ஆனால் இரண்டாவது தடவையாக வரவு செலவு திட்டம் வாக்கெடுப்புக்கு விடப்பட்டபோது, ஆதரவாக 58 வாக்குகளும் எதிராக 56 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
முதலாவது வாக்கெடுப்பில் வரவு ,செலவு திட்டத்திற்கு எதிராக வாக்களித்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசியப்பட்டியல் உறுப்பினர் பாத்திமா ஸுஹாரா இரண்டாம் வாக்கெடுப்பில் வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தார்.
அதேநேரம் முதலாம் வாக்கெடுப்பில் வரவு ,செலவு திட்டத்துக்கு எதிராக வாக்களித்த ஐக்கிய மக்கள் சக்தி தேசியப்பட்டியல் உறுப்பினர் சேன் டெனியால் ராம் மற்றும் சுயேட்சை குழு உறுப்பினர் இந்திக்க சன்ஜீவ ஆகியோர் சபைக்கு சமூகமளிக்கவில்லை. அத்துடன் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் மொஹமட் ஸுபைர் சபை நடவடிக்கையில் இருந்த நிலையில், அவரது மனைவிக்கு ஏற்பட்ட திடீர் சுகயீன நிலை காரணமாக அவரால் வாக்கெடுப்பில் கலந்துகொள்ள முடியவில்லை.
அதன் அதன் காரணமாக வரவு ,செலவு திட்டத்துக்கு ஆதரவாக 58 வாக்குகளும் எதிராக 56 வாக்குகளும் அளிக்கப்பட்டதுடன் 3பேர் வாக்களிபப்பில் கலந்துகொள்ளவில்லை. அதனடிப்படையில் 2மேலதிக வாக்குகளால் அடுத்த வருடத்துக்கான வரவு, செலவு திட்டம் சபையில் நிறைவேற்றப்பட்டது.





