தமிழகத்தில் முக்கிய பிரதிநிதிகளை சந்தித்த பிரதி அமைச்சர் பிரதீப்
சென்னையில் உள்ள இலங்கைக்கான உதவி உயர்ஸ்தானிகராலயத்தில் தென்னிந்திய திரைப்பட இயக்குனரும் தயாரிப்பாளரும், சூழலியல் செயல்பாட்டலருமான, தங்கர்பச்சானை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இந்தியா மற்றும் இலங்கைக்குமான உறவினை வலுப்படுத்தவும் அதனை மேலும் உறுதி செய்யும் முகமாகவும் தமிழ் நாட்டுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டுள்ள பெருந்தோட்ட மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் அங்கு பல்வேறு முக்கிய சந்திப்புக்களில் கலந்து கொண்டுள்ளார். அந்த வகையில் சென்னையில் உள்ள இலங்கைக்கான உதவி உயர்ஸ்தானிகராலயத்தில் தென்னிந்திய திரைப்பட இயக்குனரும் தயாரிப்பாளரும், சூழலியல் செயல்பாட்டலருமான, தங்கர்பச்சானை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இதன்போது இலங்கையில் தற்போது இடதுசாரி கொள்கையுடன் கூடிய ஆட்சி இடம் பெற்றுக் கொண்டிருக்கின்ற நிலையில் தானும் ஓர் இடதுசாரிக் கொள்கை உடையவர் என்ற ரீதியில் இலங்கை அரசாங்கத்திற்கு தன்னுடைய பாராட்டுகளை தெரிவித்து இருந்ததோடு அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படுகின்ற மக்கள் நலத்திட்ட பணிகள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது.
மேலும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மகளிர் அணி பொறுப்பாளர் காயத்ரி ரகுராமையும் பிரதி அமைச்சர் சந்தித்திருந்தார். இதன்போது இலங்கையில் உள்ள மகளிர் மற்றும் யுவதிகளுக்கான தலைமைத்துவ பயிற்சிகள், சுய தொழில் ஊக்குவிப்புகள், பெண்களுக்கான முன்னுரிமை வழங்குவது தொடர்பான விடயங்கள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது. இலங்கை பாராளுமன்றத்தில் அதிமான பெண் உறுப்பினர்கள் அங்கத்துவம் பெற்றுள்ளமை ஒர் வரவேற்கத்தக்க விடயம் என அவர் குறிப்பிட்டிருந்தார்.
அத்தோடு தென்னிந்திய பிரபல நடிகருமான சரத்குமாருடனும் நட்பு ரீதியான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது இலங்கையில் ஏற்பட்ட தித்வா புயல் பேரிடரால் மலையகத்தில் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கும் சுற்றுலாத் துறையினை மீண்டும் கட்டியெழுப்புவது தொடர்பாகவும் இந்திய திரைப்படத் துறையினர் இலங்கையில் படப்பிடிப்புகளை மேற்கொள்ளும்போது இந்திய தயாரிப்பு குழுவினர்களுக்கான தேவையான வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பது தொடர்பாகவும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.





