ஜூன் 17க்குள் மாகாணசபை தேர்தல் முடிவை எடுக்காவிடின் கூட்டுப் போராட்டம் - எதிர்க்கட்சிகள் எச்சரிக்கை
ஜே.வி.பி தற்போது தேர்தலைச் சந்திக்கப் பயப்படுகிறது. ஜனாதிபதி தேர்தலில் அவர்களுக்கு 43 சதவீதமும், உள்ளுராட்சித் தேர்தலில் 42 சதவீதமும் மட்டுமே கிடைத்தது.
மாகாண சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பான இறுதி முடிவை எதிர்வரும் ஜூன் மாதம் 17ஆம் திகதிக்குள் பாராளுமன்றத் தெரிவுக்குழு அறிவிக்கத் தவறினால், எதிர்க்கட்சியின் அனைத்துக் குழுக்களும் பதிவுசெய்யப்பட்ட அரசியல் கட்சிகளின் தலைவர்களும் ஒன்றிணைந்து அரசாங்கத்திற்கு எதிராகக் கடுமையான கூட்டுப் போராட்டங்களை முன்னெடுப்பார்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார எச்சரிக்கை விடுத்தார்.
மாகாண சபைத் தேர்தலை பழைய விருப்பு வாக்கு முறைமையின் கீழ் நடத்துவதற்கு எதிர்க்கட்சிகள் முழுமையான ஆதரவை வழங்கத் தயாராக உள்ள நிலையில், தேர்தலை எதிர்கொள்ளப் பயந்து அரசாங்கம் இதனைத் திட்டமிட்டுத் தள்ளிப்போட முயற்சிப்பதாகவும் குற்றம் சாட்டினார்.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் 11-05-2026அன்று 'மக்களுக்கான எதிர்க்கட்சி' என்ற தொனிப்பொருளில் விசேட ஊடகவியலாளர் மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இலங்கை தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்ரஸ் சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் நிசாம் காரியப்பர் ஆகியோரும் இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டிருந்தனர். இதன் போதே ரஞ்சித் மத்தும பண்டார இவ்வாறு எச்சரிக்கை விடுத்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,
இந்த நாட்டின் இனப்பிரச்சினைக்கு தீர்வாகவே மாகாண சபை முறைமை அறிமுகப்படுத்தப்பட்டது என்பதை நாம் அறிவோம். இதன் மூலம் நாட்டின் அதிகாரம் பரவலாக்கப்பட்டு, அந்தந்தப் பகுதி மக்கள் தங்களுக்குப் பொருத்தமான பிரதிநிதிகளையும் அமைச்சர்களையும் தேர்ந்தெடுத்து தங்களின் செயல்பாடுகளை முன்னெடுக்க வழிவகை செய்யப்பட்டது. இதன் அடிப்படையில் வடக்கு, கிழக்கு மற்றும் நாட்டின் ஏனைய பகுதிகளில் உள்ள மக்கள் தங்களின் தனித்துவத்திற்கு ஏற்ப மாகாண சபைகளை அமைத்துக் கொள்வதை நாம் கண்டோம்.
ஆனால், கடந்த 2017ஆம் ஆண்டிலிருந்து மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதற்கு அன்றிலிருந்து இன்றுவரை இருந்த எந்தவொரு அரசாங்கமும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனினும், 2024ஆம் ஆண்டு மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) ஆட்சிக்கு வரும்போது, தங்களின் முதலாம் ஆண்டு ஆட்சி காலத்துக்குள் மாகாணசபை தேர்தலை நடத்துவோம் என்று கூறினார்கள். ஆனால், தேர்தலை நடத்துவது ஒருபுறமிருக்க, அதற்கான எந்தவொரு அறிகுறியும் தென்படவில்லை.
இது தொடர்பாக பாராளுமன்றக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் மாகாண சபைகளின் அதிகாரங்கள் பரவலாக்கப்படுவதற்குப் பதிலாக, அவை அனைத்தும் ஜனாதிபதி வசம் குவிக்கப்பட்டுள்ளன. ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட ஒன்பது ஆளுநர்களே தற்போது மாகாணங்களை ஆட்சி செய்து வருகிறார்கள். அதாவது, மறைமுகமாக ஜனாதிபதியே இதனை ஆட்சி செய்கிறார்.
இந்த நாட்டின் கல்வித் துறையில் 90 சதவீதமும், சுகாதாரத் துறையில் 90 சதவீதமும், விவசாயத் துறையின் பெரும்பகுதியும் மாகாண சபைகளின் கீழேயே வருகின்றன. ஆனால், இன்று மக்கள் பிரதிநிதிகளுக்குப் பதிலாக இவை அனைத்தும் ஜனாதிபதியின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு செல்லப்பட்டுள்ளன. பாராளுமன்றத்தில் நாம் தொடர்ச்சியாக இந்த கோரிக்கைகளை முன்வைத்து வருகிறோம்.
மாகாண சபை முறைமையானது 1988ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. ஜே.வி.பி இந்த மாகாண சபை முறைமை எங்களுக்கு வேண்டாம் என்று கூறி, எமது கட்சியின் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்களையும், பாராளுமன்ற உறுப்பினர்களையும், வாக்களிக்கச் சென்ற மக்களையும், கட்சியின் தலைவர்களையும் படுகொலை செய்தது. நாம் மிகவும் கடினமான முறையில், பல உயிர்களைத் தியாகம் செய்துதான் இந்த மாகாண சபை முறைமையைப் பாதுகாத்தோம்.
அன்று 88 இல் செய்த அதே செயற்பாடுகளையே அவர்கள் இன்றும் செய்கிறார்கள். இன்று நாடு ஒரு சர்வாதிகார ஆட்சியை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதை எம்மால் காண முடிகிறது. நாட்டின் அரசியலும் நிர்வாகமும் முற்றிலுமாக அரசியல்மயமாக்கப்பட்டுள்ளது. நாட்டின் பிரதான மூன்று அமைச்சுகளின் செயலாளர்களாக இருப்பவர்கள் ஜே.வி.பி மேடைகளில் இருந்தவர்களே ஆவர்.
ஜனாதிபதியின் செயலாளர், பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் இந்த அரசாங்கத்தின் முன்னாள் பிரதி அமைச்சராவார். இவ்வாறு முழு நிர்வாகக் கட்டமைப்பும் அரசியல்மயமாக்கப்பட்டுள்ளது. கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையும் தற்போது அரசியல்மயமாக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் அவர்கள் ஒரு சர்வாதிகார ஆட்சியை நடத்தவே முயற்சிக்கிறார்கள். இது தொடர்பாக நாம் பாராளுமன்றத்தில் தொடர்ச்சியாகப் பேசியதன் விளைவாக, கடந்த மார்ச் 17ஆம் திகதி வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தலைமையில் பாராளுமன்றக் குழுவொன்று நியமிக்கப்பட்டது. மூன்று மாதங்களுக்குள் இது தொடர்பான அறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும் என்பதே இதன் முதன்மையான நிபந்தனையாக இருந்தது. தற்போது இரண்டு மாதங்கள் கடக்கவுள்ள நிலையில், இக்குழு மூன்று முறை கூடிவிட்ட போதிலும் சாதகமான பதில் எதுவும் கிடைக்கவில்லை. பல்வேறு அதிகாரிகளை வரவழைத்து வீணாகக் காலத்தைக் கடத்துகிறார்கள்.
2017ஆம் ஆண்டு சட்டத்திருத்தத்தின்படி, மாகாண சபைத் தேர்தலானது தொகுதி மற்றும் விகிதாசார முறைகள் கலந்த கலப்பு தேர்தல் முறையிலேயே நடத்தப்பட வேண்டும். இது தொடர்பாக எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட போதிலும், அதனை இந்த அரசாங்கம் நிராகரித்துவிட்டது. தற்போதுள்ள மிக எளிமையான வழிமுறையும், நாட்டு மக்களின் கோரிக்கையும், எதிர்க்கட்சியில் இருக்கும் எமது குழுவினரினதும் அரசாங்கத்தின் ஒரு பகுதியினரினதும் கோரிக்கையாக இருப்பது என்னவென்றால், பழைய விருப்பு வாக்கு முறைமையிலேயே இந்தத் தேர்தலை நடத்துவதாகும்.
ஒரு சிறிய சட்டத்திருத்தத்தின் மூலம், பாராளுமன்றத்தில் உள்ள எளிய பெரும்பான்மையைக் கொண்டு இதனைச் செய்ய முடியும். அரசாங்கத்திற்கு இருக்கும் 159 பெரும்பான்மையைக் கொண்டு இதனை மிக எளிதாக நிறைவேற்ற முடியும். அதற்கு எதிர்க்கட்சியாகிய நாமும் ஆதரவளிக்கத் தயாராக இருக்கிறோம். அன்று பல வருடங்கள் போராடி, பல விவாதங்களை நடத்திப் பெற்றுக்கொண்ட இந்த மாகாண சபைகளின் அதிகாரங்களை வடக்கு, கிழக்கு உட்பட நாட்டின் ஏனைய மாகாணங்களுக்கும் வழங்குமாறு நாம் கோருகிறோம். ஆனால், விஜித ஹேரத் தலைமையிலான குழு இதற்குச் சாதகமாக இல்லை என்றே எனக்குத் தோன்றுகிறது. அவர்கள் இதனைக் காலம் தாழ்த்தவே முயற்சிக்கிறார்கள்.
ஏனெனில், ஜே.வி.பி தற்போது தேர்தலைச் சந்திக்கப் பயப்படுகிறது. ஜனாதிபதி தேர்தலில் அவர்களுக்கு 43 சதவீதமும், உள்ளுராட்சித் தேர்தலில் 42 சதவீதமும் மட்டுமே கிடைத்தது. இன்று மாகாண சபை தேர்தலுக்குச் சென்றால் அரசாங்கம் தோல்வியடையும் என்பதை அவர்கள் அறிவார்கள். இதனால்தான் அரசாங்கம் ஜனநாயகத்திற்குப் புறம்பாக மாகாண சபைகளின் அதிகாரங்களை அந்தந்தப் பிரதேசங்களுக்கு வழங்குவதைத் தடுத்து நிறுத்தியுள்ளது.
நாம் அரசாங்கத்துக்கு சவால் விடுகிறோம், தயவுசெய்து மாகாண சபை தேர்தலை நடத்துங்கள். இல்லையெனில், எதிர்க்கட்சியில் உள்ள அனைத்துக் குழுக்களும், நாட்டின் பதிவுசெய்யப்பட்ட அனைத்துக் கட்சிகளின் செயலாளர்களும், தலைவர்களும் ஒன்றிணைந்து இதற்கு எதிராகப் போராடுவோம். வரும் ஜூன் 17ஆம் திகதி வரை மட்டுமே இதற்கு அவகாசம் உள்ளது. எனவே, பாராளுமன்றக் குழுவிற்குள் மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கான முடிவை உடனடியாக எடுக்குமாறு அரசாங்கத்தை நாம் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம் என்றார்.





