பிரதமர் ஹரிணியுடன் சுவிட்சர்லாந்து தூதுவர் சந்திப்பு
சுவிட்சர்லாந்தின் தொழிற்கல்வி மற்றும் பயிற்சிதுறை குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டதுடன், ஒத்துழைப்பு மற்றும் அறிவைப் பகிர்ந்துகொள்வதற்கான வாய்ப்புகளை ஆராய்வதில் ஆர்வம் காட்டப்பட்டது.
இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதுவர் கலாநிதி சிறிவோல்ட், அலரிமாளிகையில் வைத்துப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை சந்தித்தார்.
இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதுவர் கலாநிதி சிறிவோல்டிடத்தில் உலகப் பொருளாதார மன்றத்தின் வருடாந்தக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காகத் தாம் டாவோஸ் நகருக்கு மேற்கொண்ட உத்தியோகபூர்வ விஜயத்தின் அனுபவங்களை பிரதமர் பகிர்ந்துகொண்டார்.
அத்துடன் உலகப் பொருளாதார மன்றத்திற்கு இணைவாக இடம்பெற்ற உயர்மட்ட இருதரப்புப் பேச்சுவார்த்தைகள் மற்றும் தொழிற்சாலைகளுக்கான விஜயங்கள் இலங்கையின் பொருளாதார நடவடிக்கைகளைப் பலப்படுத்துவதற்குப் பெரும் உந்துசக்தியாக அமைந்ததாகத் தெரிவித்தார்.
இக்கலந்துரையாடலின்போது சுவிட்சர்லாந்தின் தொழிற்கல்வி மற்றும் பயிற்சிதுறை குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டதுடன், ஒத்துழைப்பு மற்றும் அறிவைப் பகிர்ந்துகொள்வதற்கான வாய்ப்புகளை ஆராய்வதில் ஆர்வம் காட்டப்பட்டது.
தித்வா சூறாவளியைத் தொடர்ந்து நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்காகச் சுவிட்சர்லாந்து அரசாங்கம் வழங்கிய உதவிகளைப் பாராட்டிய பிரதமர், தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் மீளக் கட்டியெழுப்பும் பணிகளின்போது, குறிப்பாகப் பாலங்கள் மற்றும் புகையிரத உட்கட்டமைப்பு வசதிகளைப் புனரமைப்பதில் இலங்கைக்குத் தொழில்நுட்ப உதவிகள் தேவைப்படுவதை வலியுறுத்தினார்.
இலங்கைக்கும் சுவிட்சர்லாந்துக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் பலப்படுத்துவதற்கும், பரஸ்பர நலன் சார்ந்த துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கும் இரு தரப்பினரும் தமது கவனத்தைச் செலுத்தினர்.





