அரசியல் காழ்புணர்ச்சியே எம்மீது பழிபோடுவதற்கு காரணம் - சீ.வீ.கே.சிவஞானம்
நாங்கள் சிலை வைத்தமைக்கு எதிரானவர்கள் என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் முன்வைத்த விடயத்தை நான் தெளிவுபடுத்த விரும்புகின்றேன்.
தியாக தீபம் திலீபனின் சிலை அகற்றப்பட்ட விடயத்தில் அரசியல் காழ்புணர்ச்சி காரணமாகவே எமது கட்சி மீதும் எம்மீதும் பழிபோடுகிறார்களென தெரிவித்த இலங்கை தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம், சிலை அகற்றப்பட்டமைக்கும் அரசாங்கத்துக்கும் தொடர்பில்லை என்றால் அகற்றிய சிலையை மீண்டும் அவ்விடத்தில் நிறுவ வேண்டுமெனவும் வலியுறுத்தினார்.
நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபத்தின் நினைவாலயத்தில் காணப்பட்ட தியாக தீபத்தின் சிலை 28-09-2026 அன்று பொலிஸாரால் அகற்றப்பட்டிந்தது. குறித்த சிலையை அகற்றவதற்கு, தமிழரசு கட்சியும் அதன் தலைமையும் காரணம் என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் குற்றம் சாட்டியிருந்தார். அது தொடர்பில் தமிழரசு கட்சியின் பதில் தலைவர் ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பொன்று நேற்றையதினம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு அவர் கருhத்து வெளியிடுகையில்,
நானும் தமிழ் அரசு கட்சியும் சிலை வைப்பிற்கு எதிரானவர்களாகவும், பொலிஸாரின் நடவடிக்கைகளுக்கு நாங்கள் துணை போனதாகவும், எங்களுடைய கோரிக்கையின் அடிப்படையில் தான் பொலிஸார் நடவடிக்கை எடுத்ததாக அபாண்டமான குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது,
அவ்வாறாக நாங்கள் சிலை வைத்தமைக்கு எதிரானவர்கள் என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் முன்வைத்த விடயத்தை நான் தெளிவுபடுத்த விரும்புகின்றேன்.
என்னுடைய கோரிக்கையின் பெயரிலோ, அல்லது தூண்டுதலின் பெயரிலோ சிலை அகற்றப்பட்டது என்பது அபாண்டமான பொய்யாகும். அதுவொரு அரசியல் காழ்ப்புணர்ச்சியின் வெளிப்பாடாகும்.
நினைவேந்தல் விடயங்களில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர், தாங்கள் எல்லாம் செய்யலாம், தங்களுக்கு தான் நினைவேந்தல்கள் குத்தகை தரப்பட்டது போன்று, தாங்கள் தான் எல்லாமென தாமாகவே பிரகடனப்படுத்தி, நினைவேந்தல் குழுக்களை உருவாக்கி நினைவேந்தல்களை செய்கிறார்கள்
தமிழ் தேசிய கட்சி என்று கூறக்கூடிய தமிழரசு கட்சி, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப். ரொலோ போன்ற கட்சிகள் இல்லாமல். தனியே தமது கட்சி ஏகபோகம் என்று, ஏனையவர்களை களங்கப்படுத்தி, செயற்படுவது ஒரு அரசியல் காழ்ப்புணர்ச்சியின் வெளிப்பாடு. இதனை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
தியாகி திலீபனின் அஞ்சலியை வைத்து நாங்கள் யாரும் அரசியல் செய்கிறது நாகரிகமான விஷயம் அல்ல என்பதும், அப்படி நடக்கிறது என்ற கவலையையும் நான் பதிவு செய்ய விரும்புகின்றேன். இதற்கு மேல ஒன்றும் நான் சொல்ல விரும்பவில்லை.
நானோ அல்லது எங்கள் கட்சியோ பொலிஸாருக்கு சொல்லி தான் இந்த சிலையை அகற்றினார்கள் என்று சொல்கிறார்கள். அவ்வளவு சக்தி வாய்ந்தவர்களா நாம் ? எனவே மக்கள் இவர்களின் அரசியல் காழ்ப்புணர்ச்சியை புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.





