இலங்கை நீதிமன்ற வரலாற்றில் முதல் முறையாக முழுமையான டிஜிட்டல் முறையிலான வழக்கு விசாரணை
நீதிமன்ற வரலாற்றில் இடம்பெற்ற முக்கியத்துவம் வாய்ந்த இந்த வழக்கு விசாரணையின் போது, டிஜிட்டல் முறையில் பிரதிவாதிக்கு எதிராக குற்றப்பத்திரிகையும் கையளிக்கப்பட்டது.
2024 ஆம் ஆண்டு ஐந்தாம் வகுப்பு புலமைப்பரிசில் தேர்வு வினாத்தாள் கசிவு தொடர்பாக அரசாங்கம் விதித்த ரூ. 3 மில்லியன் அபராதத்தை பிரதிவாதி செலுத்தத் தவறியமை தொடர்பான விசாரணைகள் கடந்த 26 ஆம் திகதி அன்று உயர் நீதிமன்றத்தினால் டிஜிட்டல் முறையில் இடம்பெற்றது.
நீதிமன்ற வரலாற்றில் இடம்பெற்ற முக்கியத்துவம் வாய்ந்த இந்த வழக்கு விசாரணையின் போது, டிஜிட்டல் முறையில் பிரதிவாதிக்கு எதிராக குற்றப்பத்திரிகையும் கையளிக்கப்பட்டது.
இலங்கை நீதித்துறையை டிஜிட்டல் மயமாக்கும் நோக்கில் எடுக்கப்பட்ட ஒரு பாரிய நடவடிக்கையாக, கடந்த மார்ச் 26 ஆம் திகதி உயர் நீதிமன்றம் எந்தவிதமான காகிதப் பயன்பாடுகளும் இன்றி இந்த வரலாற்று சிறப்புமிக்க விசாரணையை முன்னெடுத்தது. பிரதம நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேன தலைமையில், அர்ஜுன ஒபேசேகர மற்றும் சோபித ராஜகருண உள்ளிட்ட மூவர் அடங்கிய நீதியரசர்கள் அமர்வு முன்னிலையில் நீதிமன்ற அவமதிப்பு தொடர்பான இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இலங்கை நீதிமன்ற வரலாற்றில் முதல் முறையாக பாரம்பரிய காகித ஆவணங்களுக்குப் பதிலாக முழுமையான டிஜிட்டல் வழக்கு கோப்பு பயன்படுத்தப்பட்டது. இதன்போது, பிரதிவாதிக்கு எதிரான குற்றப்பத்திரிகை திறந்த நீதிமன்றத்தில் மின்-தாக்கல் முறைமையின் ஊடாக சமர்ப்பிக்கப்பட்டதுடன், பிரதிவாதியினால் அதற்கான டிஜிட்டல் கையொப்பமும் இடப்பட்டது. இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை மே மாதம் 14 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த டிஜிட்டல் மாற்றமானது, பிரதம நீதியரசர் சூரசேனவினால் ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் ஆரம்பிக்கப்பட்ட "ஈ-கோர்ட்" திட்டத்தின் ஒரு அங்கமாகும். இத்திட்டத்தின் மூலம் சட்டத்தரணிகள் வழக்குகளை இணையவழியில் தாக்கல் செய்ய முடியும். இது காகிதங்களுக்காக செலவிடப்படும் செலவை மீதப்படுத்துவதோடு, நீதித்துறையின் வினைத்திறனையும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் கூற்றுப்படி, இந்த சோதனை முயற்சி வெற்றியளித்துள்ளதால், இதனை நாடு முழுவதும் உள்ள ஏனைய நீதிமன்றங்களுக்கும் விரிவுபடுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மின்-தாக்கல் முறைமை கடந்த பெப்ரவரி 10 ஆம் திகதி முதல் சட்டத்தரணிகளுக்குக் கையளிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.





