மத்திய வங்கிக்கும், திறைசேரிக்கும் இடையில் முரண்பாடு
தற்போதைய தேசிய சைபர் பாதுகாப்பு அடிப்படையில் நிறுவப்பட்ட 2023 ஆம் ஆண்டிலிருந்து நிதி அமைச்சின் தகவல் தொழில்நுட்ப அமைப்புகளின் 3 மதிப்பீடுகள் மற்றும் ஆய்வு அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டன.
திறைசேரியால் அவுஸ்திரேலிய கடன் வழங்குநருக்கு செலுத்தப்பட்ட 2.5 மில்லியன் டொலர் மூன்றாம் தரப்பினால் மோசடி செய்யப்பட்டமை ஒரு சைபர் குற்றமாகும். இது நிர்வாக கட்டமைப்பின் பலவீனத்தை வெளிப்படுத்துகிறது. வெளிநாட்டு கடன் மீள் செலுத்தல் விடயத்தில் ஒருசில பொறுப்புக்களில் இலங்கை மத்திய வங்கிக்கும்,திறைசேரிக்கும் இடையில் முரண்பாடுகள் காணப்படுவதை அவதானிக்க முடிந்துள்ளது என அரசாங்க நிதி் பற்றிய குழு சுட்டிக்காட்டியுள்ளது.
திறைசேரியால் செலுத்தப்பட்ட 2.5 மில்லியன் டொலர் மூன்றாம் தரப்பினால் மோசடி செய்யப்பட்டமை குறித்து அரசாங்க நிதி பற்றிய குழு பாராளுமன்றத்துக்கு அவதானிப்பு அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளது.
அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: பாராளுமன்றத்தின் நிலையியற் கட்டளை 121 பிரகாரம், பொது நிதியின் எந்தவொரு அம்சம் குறித்தும் ஆராய்வதே அரசாங்க நிதிப் பற்றிய குழுவின் அதிகாரப் வரம்பாகும்.
நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார மேம்பாட்டு அமைச்சு மற்றும் பிற தொடர்புடைய அரசு நிறுவனங்கள், நிறுவப்பட்ட சட்டக் கட்டமைப்புகள் மற்றும் வருடாந்த ஒதுக்கீட்டுச் சட்டத்திற்கு இணங்க, தொடர்புடைய சட்ட விதிகள், நிதி விதிமுறைகள் மற்றும் செயல்முறைகளைப் பின்பற்றுகின்றனவா என்பதை உறுதிசெய்வது இதன் நோக்கமாகும்.
பொதுநிதியை மேற்பார்வையிடுவதே அரசாங்க நிதி பற்றிய குழுவின் பங்காகும். இதில் கடன் முகாமைத்துவம் மற்றும் கடன் சேவை ஆகியவை அடங்கும். எனவே, வெளிநாட்டுக் கடன் மீள் செலுத்தலின் மோசடி செய்யப்பட்ட 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் பற்றிய பிரச்சினை இக்குழுவின் அதிகார வரம்பிற்குள் வருகிறது.
குற்றவியல் விசாரணைகளை மேற்கொள்வதோ அல்லது சட்டப்பூர்வப் பொறுப்பு குறித்து தீர்ப்பு வழங்குவதோ குழுவின் அதிகார வரம்பிற்குற்குள் உட்படாது.
இந்த மோசடி குறித்து அரசாங்க நிதி பற்றிய குழு அறிக்கை சமர்ப்பித்ததை தொடர்ந்து் நிதி அமைச்சு கடந்த ஜூன் மாத தொடக்கத்தில் சைபர் குற்றத்துடன் தொடர்புடைய மோசடி குறித்த விரிவான அறிக்கையை வழங்கியது. அந்த அறிக்கை, இந்த மோசடி கண்டுபிடிக்கப்படுவதற்கு வழிவகுத்த நிகழ்வுகள் மற்றும் அதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் ஆகியவற்றை உள்ளடக்கியிருந்தது. இதனுடன் தொடர்புடைய ஆவணங்கள் மற்றும் மின்னஞ்சல் பரிமாற்றங்கள் அடங்கிய இணைப்புகளும் வழங்கப்பட்டிருந்தன.
கடந்த ஜூன் மாதம் 8 ஆம் திகதியன்று நடைபெற்ற நிதி அமைச்சின் அறிக்கை மீதான விவாதத்தின் போது, இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர், நிதி அமைச்சின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்த சில விடயங்களை எதிர்த்தார் மற்றும் மத்திய வங்கியின் சார்பாக ஒரு அறிக்கையைச் சமர்ப்பிக்க அவகாசம் கோரினார்.
குறிப்பாக, நிதிப் பரிவர்த்தனை அறிக்கைச் சட்டத்தின் கீழ் பணமோசடி தடுப்பு பிரச்சினைகள் தொடர்பாக, கடன் மீள் செலுத்தல் செயல்பாட்டில் பொருத்தமான நடைமுறைகள் மற்றும் பொறுப்புகள் குறித்து நிதி அமைச்சுக்கு ஆலோசனை வழங்கவில்லை என மத்திய வங்கி மீது குற்றம் சாட்டப்பட்டதே முக்கிய முரண்பாடாக இருந்தது.
இந்த கலந்துரையாடலைத் தொடர்ந்து மத்திய வங்கியின் இரண்டு அறிக்கைகள் குழுவுக்கு சமர்ப்பிக்கப்பட்டன.ஒன்று நிகழ்வுகள் குறித்த மத்திய வங்கியின் பார்வையை விவரிக்கும் அறிக்கை, மற்றொன்று நிதி அமைச்சின் அறிக்கைக்கு குறிப்பிட்ட மறுப்புப் பதில்களை வழங்கும் அறிக்கையாகும்.
இவற்றுடன் தொடர்புடைய ஆவணங்கள் மற்றும் மின்னஞ்சல் பரிமாற்றங்கள் அடங்கிய விரிவான இணைப்புகளும் சமர்ப்பிக்கப்பட்டன. இலங்கை கணினி அவசர தயார்நிலை குழுவின் பதில் அறிக்கை, இது பொது நிறுவனங்களுக்கான தற்போதைய இணையப் பாதுகாப்பு கொள்கை மற்றும் அதன் அமலாக்கம் குறித்து விவரிக்கிறது.
தற்போதைய தேசிய சைபர் பாதுகாப்பு அடிப்படையில் நிறுவப்பட்ட 2023 ஆம் ஆண்டிலிருந்து நிதி அமைச்சின் தகவல் தொழில்நுட்ப அமைப்புகளின் 3 மதிப்பீடுகள் மற்றும் ஆய்வு அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டன.
இந்த சமர்ப்பிப்புகள் 2026 ஜூன் 23 ஆம. திகதி கலந்துரையாடப்பட்டன. இது சம்பந்தப்பட்ட நிறுவனங்களால் வழங்கப்பட்ட கணக்குகள் மற்றும் விவரங்களை ஒப்பிட்டுப் பார்க்கவும் மதிப்பிடவும் குழுவுக்கு வாய்ப்பளித்தது.
இக்கூட்டத்தில், கடந்த ஆண்டு் டிசம்பர் 31ஆம் திகதியன்று இலங்கை மத்திய வங்கியின் பொதுக் கடன் திணைக்களம் மூடப்படுவதற்கு முன்னரும், பொதுக் கடன் முகாமைத்துவம் மத்திய வங்கியின் பங்கை உத்தியோகபூர்வமாக முடிவுக்குக் கொண்டு வந்து 2026.05.26 ஆம் திகதியன்று வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பு வரையிலும், மத்திய வங்கிச் சட்டத்தின் 132 ஆவது பிரிவு எவ்வாறு பயன்படுத்தப்பட்டது என்பது குறித்து சட்டமா அதிபரிடம் இருந்து கூடுதல் விளக்கம் கோரப்பட்டது.
சைபர் குற்றத்துடன் தொடர்புடைய மோசடி நிகழ்ந்த நிறுவனச் சூழலின் வகிபாகம்,சம்பந்தப்பட்ட நிகழ்வுகள் மற்றும் சைபர் குற்றத்துடன் தொடர்புடைய மோசடி கண்டறியப்பட்டமை பற்றிய ஒரு விரிவான தெளிவுப்படுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
சில அம்சங்கள் மற்றும் நிகழ்வுகள் குறித்து மத்திய வங்கிக்கும் நிதி அமைச்சுக்கும் இடையே உள்ள கருத்து வேறுபாடுகள் காணப்படுகின்றன என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.





