தொடரும் நீதிக்கான தேடல்
ஒட்டுமொத்தத்தில், இப்போரானது தமிழ் மக்களின் கூட்டு உளவியலை உடைக்கும் ஒரு 'உளவியல் போராக' மாற்றப்பட்டுள்ளது.
முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பதினேழாவது ஆண்டு நினைவேந்தல் தருணத்தில், வடக்கு-கிழக்கு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக் கட்டமைப்பினால் வெளியிடப்பட்டுள்ள 'முள்ளிவாய்க்கால் பிரகடனம் 2026' என்பது வெறும் உணர்வுபூர்வமான நினைவுகூரல் ஆவணம் மட்டுமல்ல.
அது, உலகளாவிய அதிகாரப் போட்டி, உள்நாட்டு அடக்குமுறையின் புதிய வடிவங்கள் மற்றும் தமிழ்த் தேசியத்தின் தப்பிப்பிழைத்தலுக்கான உத்திகள் ஆகியவற்றை ஆழமாகப் பகுப்பாய்வு செய்யும் அரசியல் மற்றும் தத்துவார்த்த பிரகடனமாகும்.
2009ஆம் ஆண்டில் ஆயுதப் பரிமாணம் மௌனிக்கப்பட்டதன் மூலம் ஈழத் தமிழர்களின் கூட்டு அரசியல் வேணவா முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுவிட்டது என்ற சிங்கள பௌத்த பேரினவாதத்தின் மாயையை ஆண்டுதோறும் முள்ளிவாய்க்கால் திடலில் கூடும் மக்கள் திரள் தகர்த்தெறிந்து வருகின்றது.
இரத்தக் கறைகளும் கண்ணீரும் தோய்ந்த அந்த மண்ணில், எவ்வித நினைவு நடுகற்களும் இன்றி, ஆகாயத்தையே எல்லையாகக் கொண்டு மரணித்த உறவுகளின் நினைவுகளைச் சுமந்து நிற்கும் தமிழினம், தனது நீதிக்கான நீண்ட பயணத்தை ஒரு தேசமாகத் தொடர்வதற்கான புதிய உத்வேகத்தை இப்பிரகடனம் வழங்குகின்றது.
இன்றைய உலக அரசியல் சூழல் என்பது ஏக துருவ உலக ஒழுங்கிலிருந்து பல்துருவ உலக ஒழுங்கை நோக்கி வேகமாக நகர்ந்து கொண்டிருக்கின்றது. அமெரிக்காவும் அதன் மேற்கத்திய நேச நாடுகளும் தங்களின் உலகளாவிய மேலாதிக்கத்தைத் தக்கவைக்க முற்படும் அதேவேளையில், சீனா மற்றும் ரஷ்யா போன்ற நாடுகள் தத்தமது புவிசார் அரசியல் மற்றும் பொருளாதார நலன்களுக்காகப் புதிய பல்துருவக் கட்டமைப்புகளை உருவாக்கி வருகின்றன.
இத்தகைய பேரரசு நாடுகளின் வல்லாதிக்கப் போட்டிக்கு நடுவே, ஈழத் தமிழர்களைப் போன்ற பூர்வீகக் குடிகளின் இருப்பு நாளுக்கு நாள் கடுமையான கேள்விக்குறியாக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் தமிழர்களின் அரசியல் கோரிக்கைகளில் எவ்வித விட்டுக்கொடுப்புகளும் இன்றி, உலகளாவிய பூகோளப் போட்டிகளைக் கையாள்வதற்கான புதிய இராஜதந்திர உத்திகளை வகுப்பதே தற்போதைய நீதிக்கான தேடலின் முதற்படியாகும்.
தமிழ் தேசியத்தின் விழுமிய அடிப்படைகள் என்பவை மேற்கத்திய தாராளவாதக் கோட்பாடுகளுக்கோ அல்லது பேரரசு கட்டமைப்புகளின் விதிகளுக்கோ அப்பாற்பட்டவை. அவை தமிழ் மக்களின் வரலாற்றுப் பட்டறிதலில் இருந்தும், பூர்வீக நிலத்துடனான உறவில் இருந்தும் முளைத்தெழுந்தவை ஆகும்.
உலகம் முழுவதும் பூர்வீக மக்கள் தங்களின் நில மீட்பிற்காகப் பல்வேறு வடிவங்களில் கிளர்ந்தெழுந்து வரும் சூழலில், தமிழினம் உலகின் மூத்த பூர்வீகக் குடி என்ற தகுதியோடு தனது நிலத்துடனான கூட்டுச் சார்புத் தன்மையை உலகிற்கு முன்மொழிய வேண்டும்.
ஈழத் தமிழர்களின் நில மீட்புப் போராட்டம் என்பது வெறும் புவியியல் எல்லைகளுக்கான சண்டை அல்ல, அது தொன்மை வாய்ந்த ஒரு பண்பாட்டின் ஆத்மாவையும் அதன் திணைசார் வாழ்வியலையும் பாதுகாப்பதற்கான அறப்போராட்டமாகும்.
சிங்கள பௌத்த தேசிய பேரினவாதமும், சர்வதேசப் பேரரசுகளும் இணைந்து ஈழத் தமிழர்களின் தேசிய அடையாளங்களை முழுமையாக அழிப்பதற்கான பல்-பரிமாணப் போரை நாளாந்த வாழ்வியலாக மாற்றியுள்ளன. இதன் மிக ஆபத்தான வடிவம் என்னவெனில், இந்த ஒடுக்குமுறைகள் அனைத்தும் சாதாரணமானவையாக மாற்றப்பட்டு வருவதுதான்.
தமிழ் தாயகத்தின் நிலங்கள் தொடர்ச்சியாகப் பல்வேறு திணைக்களங்களின் ஊடாக அபகரிக்கப்பட்டு வருவதுடன், இராணுவமயமாக்கலின் செறிவு நாளுக்கு நாள் அதிகரிக்கப்பட்டு வருகின்றது. ஈழத் தமிழர்களின் மத அடையாளங்கள், குறிப்பாகச் சைவ சமய வழிபாட்டுத் தலங்கள் திட்டமிட்ட முறையில் இலக்கு வைக்கப்பட்டு பௌத்தமயமாக்கப்படுகின்றன.
ஒரு சமூகத்தின் வரலாற்றைச் சிதைத்து, அதன் பூர்வீகத் தன்மையை மாற்றுவதற்கான வரலாற்றுத் திரிபுகள் அரங்கேற்றப்பட்டு வருகின்றன. திராவிடப் பின்னணியைக் கொண்ட இராவணனைச் சிங்கள ஆரியனாக சித்தரிப்பதற்கான போலி வரலாற்று ஆய்வுகள் முன்னெடுக்கப்படுவது இதனொரு அங்கமே ஆகும்.
மேலும், கல்வியில் சிறந்து விளங்கிய ஒரு சமூகம் இன்று தனது கல்விப் பெருமையை இழக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. அனைத்தையும் விடக் கொடுமையாக, இளைய தலைமுறையைத் திட்டமிட்டு அழிப்பதற்காகப் போதைப்பொருள் பாவனையானது ஒரு 'போர் உத்தியாக' அரச அனுசரணையுடன் கட்டமைக்கப்பட்டு வருகின்றது.
வளரும் தலைமுறையை அடிமைப்படுத்துவதன் மூலம் தமிழினத்தின் எதிர்கால எழுச்சியை நிரந்தரமாக முடக்குவதே இதன் பின்னாலுள்ள திட்டமாகும். எனவே, போதைப்பொருளுக்கு எதிரான போராட்டம் என்பது வெறும் சமூகச் சீர்திருத்தம் அல்ல, அது ஒரு தீர்க்கமான அரசியல் யுத்தமாகும்.
இலங்கை அரசானது சர்வதேச சமூகத்தின் முன்னால் இனவாதத்திற்கு எதிராகப் பேசுவது போல் நடித்துக்கொண்டு, உள்நாட்டில் தமிழின அழிப்பிற்கான நீதிப் பொறிமுறைகளைத் தனக்குச் சாதகமாகவே பயன்படுத்தி வருகின்றது. சர்வதேசப் பொறுப்புக்கூறல் மற்றும் உள்நாட்டுப் பொறிமுறைகள் அனைத்தும் சிங்கள பௌத்த பேரினவாத அமைப்பைக் காப்பதற்கேற்றவாறு வடிவமைக்கப்பட்டுள்ளன.
தமிழினப் படுகொலைக்கான நீதி வேண்டிய நீண்ட போராட்டத்தைச் சிதைப்பதற்கும், நில மீட்புப் போராட்டங்களை வன்முறை மூலம் ஒடுக்குவதற்கும் அரசு சகல வழிகளையும் கையாண்டு வருகின்றது. ஒட்டுமொத்தத்தில், இப்போரானது தமிழ் மக்களின் கூட்டு உளவியலை உடைக்கும் ஒரு 'உளவியல் போராக' மாற்றப்பட்டுள்ளது.
இப்போர் தமிழ் ஈழத் தேசத்தின் நிலம் மற்றும் கடல் சார்ந்த கேந்திர முக்கியத்துவத்தை இல்லாமல் செய்ய முயல்கின்றது. தமிழர்களின் பிராந்திய அலகுகளை ஒற்றையாட்சிக்குள் கரைப்பதன் மூலம் தமிழ் தேசத்திற்கான தகுதியை நீர்த்துப்போகச் செய்ய அரசு முயல்கின்றது.
அதேநேரம், தமிழ் தேசத்தின் நெற்றிக்கண்ணாக விளங்கும் புலம்பெயர் தமிழ் சமூகத்தின் மீதும் அரசு புதிய வடிவிலான போரைத் தொடுத்துள்ளது. தொப்புள்கொடி உறவுகளுக்குள் பிரிவினைகளை ஏற்படுத்தி, தாயகத்திற்கும் புலம்பெயர் சமூகத்திற்கும் இடையிலான தொடர்பைத் துண்டிக்க அரசு முனைகின்றது. இத்தகைய கொடூரமான சூழலில், உறவுகளை மேலும் ஆழப்படுத்த வேண்டிய வரலாற்றுத் தேவை எழுகின்றது.
ஒட்டுமொத்தமாகத் தமிழ்த் தேசிய நம்பிக்கையின் மீது தொடுக்கப்பட்டுள்ள இப்போரை எதிர்கொள்ள, நம்மிடமுள்ள ஆகப்பெரும் ஆயுதம் 'கூட்டு நினைவு கூரல்' மட்டுமே ஆகும். ஒரு சமூகம் தனது வரலாற்றையும் நினைவுகளையும் நெஞ்சில் ஏந்தி நிற்கும்வரை, அதனை எந்தவொரு பேரரசாலும் அழித்துவிட முடியாது. தற்போதைய காலம் என்பது பண்பாட்டு மீளெழுச்சிக்கான காலமாகும். ஈழத் தமிழினம் தனது வரலாற்று வேர்களைத் தேடிப் பயணிக்க வேண்டும்.
முள்ளிவாய்க்கால் பிரகடனம் 2026 இன் அடிப்படையில், தமிழ் தேசம்
தாயகப் பாதுகாப்பு, சர்வதேச நீதிமன்றில் நீதி, சுயநிர்ணய உரிமை, கட்டமைப்புசார் இனவழிப்புத் தடுப்பு, மக்களாற்றல் மீதான நம்பிக்கை ஆகிய ஐந்து முக்கிய சபதங்களை உலகிற்கு முன்வைத்துள்ளது.
முள்ளிவாய்க்கால் என்பது வெறும் தோல்வியின் குறியீடு அல்ல அது தமிழ் மக்களின் தளராத எழுச்சியின் அடையாளம். மே 18 என்பது தமிழின அழிப்பிற்கு எதிரான தேசிய எழுச்சி நாளாகக் கொள்ளப்பட்டு, ஒடுக்குமுறைகளுக்கு எதிராகத் தமிழ் மக்கள் என்றும் சளைக்காமல் அணிதிரள்வார்கள் என்பதையே இப்பிரகடனம் உலகுக்கு பறைசாற்றுகின்றது.





