திஸ்ஸ விகாரை விவகாரத்தில் கையில் எடுக்கவில்லை என்கிறார் கஜேந்திரகுமார்
பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், இருப்பினும் அதனை மக்கள் திரண்டுசென்று இடிக்கவேண்டும் என்று அழைப்புவிடுக்கவோ அல்லது எவ்விதத்திலேனும் சட்டத்தை கையில் எடுத்துக்கொள்ளவோ நாம் முயலவில்லை எனத் தெரிவித்தார்.
தையிட்டில் தனியாருக்கு சொந்தமான காணியில் சட்டவிரோதமான முறையிலேயே திஸ்ஸ விகாரை நிர்மாணிக்கப்பட்டிருப்பதாகவும், அதற்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் எனவும் வலியுறுத்திய தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், இருப்பினும் அதனை மக்கள் திரண்டுசென்று இடிக்கவேண்டும் என்று அழைப்புவிடுக்கவோ அல்லது எவ்விதத்திலேனும் சட்டத்தைக் கையில் எடுத்துக்கொள்ளவோ நாம் முயலவில்லை எனத் தெரிவித்தார்.
தமிழ்த்தேசியப் பேரவை உறுப்பினர்கள் இம்மாத நடுப்பகுதியில் தமிழகத்துக்கு விஜயம் மேற்கொண்டு தமிழ்மக்களுக்கான சமஷ்டி அரசியல் தீர்வு குறித்து தமிழக அரசியல் தலைவர்களுடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தைகள் தொடர்பில் தெளிவுபடுத்தும் நோக்கிலான ஊடகவியலாளர் சந்திப்பொன்று 30-12-2025 கொழும்பிலுள்ள கஜேந்திரகுமாரின் இல்லத்தில் நடைபெற்றது.
இச்சந்திப்பின்போது எதிர்வரும் ஜனவரி 3 ஆம் திகதி திஸ்ஸ விகாரைக்குள் நுழைந்து அதனை சேதப்படுத்துமாறு மக்களை சிலர் தூண்டி விடுவதாகவும், பாராளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் மற்றும் சிறிதரன் ஆகியோர் இனவாத அரசியலிலேயே ஈடுபடுவதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கூறியிருப்பது பற்றி எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே கஜேந்திரகுமார் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தையிட்டில் தனியாருக்கு சொந்தமான காணியில் சட்டவிரோதமான முறையிலேயே திஸ்ஸ விகாரை நிர்மாணிக்கப்பட்டிருப்பதாகவும், அதில் எவ்வித சந்தேகமும் இல்லை எனவும் சுட்டிக்காட்டிய கஜேந்திரகுமார், இருப்பினும் அதனை மக்கள் திரண்டுசென்று இடிக்கவேண்டும் என்று அழைப்புவிடுக்கவோ அல்லது எவ்விதத்திலேனும் சட்டத்தை கையில் எடுத்துக்கொள்ளவோ இல்லை எனத் தெரிவித்தார்.
அதேவேளை திஸ்ஸ விகாரை நிர்மாணிக்கப்பட்டிருக்கும் காணியின் உரிமையாளர்களிடம் அதற்கான காணி உறுதிப்பத்திரம் இருப்பதாகவும், ஆகவே இவ்விகாரை சட்டவிரோதமான முறையில் நிர்மாணிக்கப்பட்டமை தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு, அவ்விகாரை அங்கிருந்து முறையாக அகற்றப்படவேண்டும் எனவும் கஜேந்திரகுமார் வலியுறுத்தினார்.





