எல்லை நிர்ணய பிரச்சினைக்கு தீர்வு தேர்தலை நடத்துவது சாத்தியமற்றது: அமைச்சர் சந்தன அபேரத்ன
மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு முன்னர் அதில் காணப்படும் அடிப்படை பிரச்சினைகள் மற்றும் சட்ட சிக்கல்களுக்கு தீர்வு காண வேண்டும்.
எல்லை நிர்ணயத்தை பூர்த்தி செய்து தேர்தலை நடத்துவதா? அல்லது 2017ஆம் ஆண்டின் 17ஆம் இலக்கச் சட்டத்தில் திருத்தங்களைக் கொண்டுவந்து தேர்தலை நடத்துவதா? என்பது குறித்துத் தற்போது ஆராயப்பட்டு வருகின்றது. எல்லை நிர்ணய பிரச்சினைக்கு தீர்வு காணாமல் மாகாணசபைத் தேர்தலை நடத்துவது சாத்தியமற்றது. ஆகவே எல்லை நிர்ணய அறிக்கைகள் மீளாய்வு செய்யப்படு மென பொதுநிர்வாகம் , மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சிமன்றங்கள் அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவித்தார்.
மாகாண சபைத் தேர்தல்கள் எந்த தேர்தல் முறைமையின் கீழ் நடத்தப்பட வேண்டும் என்பதை ஆராய்ந்து அறிக்கையிடுவதற்கும் அது தொடர்பான முன்மொழிவுகளையும் விதப்புரைகளையும் சமர்ப்பிப்பதற்குமான பாராளுமன்ற விசேட குழு' ஒன்றை நியமிப்பதற்கான பிரேரணையை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் முன்வைக்கவுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் ஆராய விசேட குழு ஒன்றை நியமிக்க எதிர்வரும் வாரம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள பிரேரணை குறித்து வினவிய போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், மாகாணசபைத் தேர்தலை தொடர்ந்து பிற்போடுவதற்கோ அல்லது அந்த முறைமையை இலர்லாதொழிக்கவோ வேண்டிய தேவை எமக்கு கிடையாது. மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு முன்னர் அதில் காணப்படும் அடிப்படை பிரச்சினைகள் மற்றும் சட்ட சிக்கல்களுக்கு தீர்வு காண வேண்டும்.
மாகாண சபைத் தேர்தல்களை மிக விரைவில் நடத்துவதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 2017ஆம் ஆண்டின் 17ஆம் இலக்க மாகாண சபைத் தேர்தல்கள் (திருத்தச்) சட்டத்தின் 3(ஆ) பிரிவின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள விதிகளின்படிஇ ஜனாதிபதியினால் நியமிக்கப்படும் எல்லை நிர்ணயக் குழுவினால் தேர்தல் தொகுதிகள் மற்றும் எல்லைகள் தொடர்பான அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும். அந்த அறிக்கை பாராளுமன்றத்தினால் அங்கீகரிக்கப்பட்ட பின்னரே தேர்தலை நடத்த முடியும்.
சட்ட விதிகளின் கீழ் எல்லை நிர்ணயப் பணிகள் நிறைவடையாமையே மாகாண சபைத் தேர்தலை இதுவரை நடத்த முடியாமல் போனதற்கான காரணமாகவுள்ளது. எனவே, எல்லை நிர்ணயத்தைப் பூர்த்தி செய்து தேர்தலை நடத்துவதா? அல்லது 2017ஆம் ஆண்டின் 17ஆம் இலக்கச் சட்டத்தில் திருத்தங்களைக் கொண்டுவந்து தேர்தலை நடத்துவதா? என்பது குறித்துத் தற்போது ஆராயப்பட்டு வருகின்றது. இந்த ஆய்வுகளுக்குப் பின்னர் மாகாண சபைத் தேர்தலை நடத்துவது குறித்த இறுதி முடிவு எடுக்கப்படும். எவ்வாறாயினும், இச்செயற்பாடுகளின் இறுதியில் தேர்தலை நடத்துவதற்காக 2026 வரவுசெலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மாகாணசபைத் தேர்தலை விரைவாக நடத்த வேண்டும் என்று தற்போது குரல் கொடுக்கும் எதிர்க்கட்சியினர் தான் மாகாணசபைத் தேர்தல் சட்டத்தை நெருக்கடிக்குள்ளாக்கினார்கள். சகல தரப்பினரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். குறுகிய அரசியல் நோக்கத்துக்காகவும், எதிர்ப்புக்களை சமாளிப்பதற்காகவும் முறையான தீர்வுகள் இல்லாமல் மாகாணசபைத் தேர்தலை நடத்தினால் பிரச்சினைகள் மாத்திரமே மிகுதியாகும்.
மாகாணசபைத் தேர்தலை பழைய தேர்தல் முறைமையில் நடத்தலாம் என்று ஒரு தரப்பினரும், புதிய முறைமையில் நடத்தலாம் என்று பிறிதொரு தரப்பினரும் குறிப்பிடுகிறார்கள். இதற்கமைய மாகாண சபைத் தேர்தல்கள் எந்த தேர்தல் முறைமையின் கீழ் நடத்தப்பட வேண்டும் என்பதை ஆராய்ந்து அறிக்கையிடுவதற்கும் அது தொடர்பான முன்மொழிவுகளையும் விதப்புரைகளையும் சமர்ப்பிப்பதற்குமான பாராளுமன்ற விசேட குழு' ஒன்றை நியமிப்பதற்கான பிரேரணை எதிர்வரும் வாரம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்.
மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவதாக மக்கள் மத்தியில் குறிப்பிடும் எதிர்க்கட்சியினர் தற்போது இந்த செயற்பாட்டுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கலாம். அனைவரும் ஒத்துழைப்பு வழங்கினால் மாகாணசபைத் தேர்தல் சட்டத்தில் காணப்படும் சிக்கலுக்கு உடன் தீர்வு காணலாம், மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்குரிய அதிகாரத்தை தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு வழங்கலாம் என்றார்.





