அனர்த்த முகாமைத்துவ மையத்தின் பணிப்பாளரின் விசேட கோரிக்கை
117 என்ற தொலைபேசி எண்ணிற்கு ஒரு இலட்சத்துக்கு அதிகமான தொலைபேசி அழைப்புக்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. நாங்கள் அந்த ஒவ்வொரு அழைப்புகளுக்கும் பதிலுரைத்து நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகிறோம்.
பேரிடரால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு செல்வது மிகவும் ஆபத்தானது ஆகவே அப்பகுதிகளுக்கு செல்வதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டுமென அனர்த்த முகாமைத்துவ மையத்தின் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி கோரிக்கை விடுத்துள்ளார்.
அனர்த்த முகாமைத்துவ அமைச்சில் 08-12-2025 அன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் தொடர்ந்து தெரிவித்ததாவது,
தற்போதைய நிலைமை சீராக காணப்பட்டாலும், தண்ணீர் அதிகமான நீரோட்டத்துடன் பாய்வதால், பொதுமக்கள் நீர் நிலைகளில் குளிப்பதையோ அல்லது வேடிக்கை பார்ப்பதையோ தவிர்க்குமாறு கேட்டுக் கொள்கின்றேன்.
அவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடும் போது நிவாரண பணிகளில் ஈடுபடுவோருக்கும் இடைஞ்சலாக காணப்படும். எனவே முடிந்த வரை அப்பிரதேசங்களுக்கு பிரவேசிப்பதை தவிர்த்துக் கொள்ளுங்கள்.
மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பணிகள் விநியோகிக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. அவை தொடர்பில் ஏதேனும் பிரச்சினைகள் இருந்தால் 117 என்ற தொலைப்பேசி எண்ணின் மூலம் பேரிடர் முகாமைத்துவ மையத்துக்கு தெரிவிக்க முடியும்.
இதுவரையில் 117 என்ற தொலைபேசி எண்ணிற்கு ஒரு இலட்சத்துக்கு அதிகமான தொலைபேசி அழைப்புக்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. நாங்கள் அந்த ஒவ்வொரு அழைப்புகளுக்கும் பதிலுரைத்து நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகிறோம்.
கனமழை காரணமாக பாதிப்படைந்த எல்லா இடங்களிலும் மண் நிரம்பியுள்ளது. எனவே எந்த நேரங்களிலும் விழிப்புடன் இருக்க வேண்டும், அதுமட்டுமன்றி சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட நேரங்களில் அவ்விடத்தை விட்டு உடனடியாக வெளியேறுமாறும், உங்கள் வீடுகளை அதிகாரிகள் பார்வையிட்டு தகுந்த முடிவுகளை மீண்டும் அளிக்கும் வரையில் பொதுமக்கள் அப் பிரதேசங்களுக்கு செல்ல வேண்டாம் என்றும் கோருகின்றேன் என்றார்.





