கடந்த காலங்களில் எதிர்த்த கொள்கைகளை இப்போது ஆதரித்து நடைமுறைப்படுத்துகின்றனர் - அலி சப்ரி
தற்போது நிலவும் நெருக்கடிகள், வெறுமனே அரசியல் கோஷங்களாகவோ அல்லது கட்சி சார்ந்த விவகாரங்களாகவோ சுருக்கிவிடக்கூடிய பிரச்சினைகள் அல்ல.
கடந்த காலங்களில் நெருக்கடியை சீரமைப்பதற்கான சில முக்கிய நடவடிக்கைகளை தீவிரமாக எதிர்த்த பலர், இன்று அதே கொள்கைகளை ஆதரிப்பதையும், நடைமுறைப்படுத்துவதையும் காணமுடிகிறது. யதார்த்தம் தன்னைத்தானே நிலைநிறுத்திக்கொள்ளும் என்பதற்கு இது ஒரு சான்றாகும் என முன்னாள் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து நடத்திய கூட்டுத்தாக்குதலை அடுத்து மத்திய கிழக்குப் பிராந்தியம் முழுவதும் மோதல்கள் தீவிரமடைந்துள்ள பின்னணியில், இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காக அரசாங்கம் மீண்டும் கியூ.ஆர் முறைமையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதுகுறித்து தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவொன்றைச் செய்திருக்கும் அலி சப்ரி, அதில் மேலும் கூறியிருப்பதாவது:
கடந்த 2022 ஆம் ஆண்டை திரும்பிப் பார்த்தால், கொவிட் - 19 பெருந்தொற்றினால் ஏற்பட்ட பின்விளைவுகளைத் தொடர்ந்து, ரஷ்ய - உக்ரைன் மோதலால் மேலும் தீவிரமடைந்த நெருக்கடிகளுக்கு மத்தியில் இலங்கை தத்தளித்துக் கொண்டிருந்தது. உலக சந்தையில் எண்ணெய், எரிவாயு, தானியங்கள், நிலக்கரி மற்றும் உரம் போன்றவற்றின் விலைகள் வெகுவாக உயர்வடைந்தன. இலங்கை போன்ற நாடுகளின் பொருளாதாரங்கள் இவ்வாறான வெளிப்புற அழுத்தங்களால் எளிதில் பாதிக்கப்படக்கூடியவையாகும்.
இவ்வாறானதொரு பின்னணியில் தற்போது நிலவும் நெருக்கடிகள், வெறுமனே அரசியல் கோஷங்களாகவோ அல்லது கட்சி சார்ந்த விவகாரங்களாகவோ சுருக்கிவிடக்கூடிய பிரச்சினைகள் அல்ல.
ஆனால் இங்கு நிலவும் முரண்பாடான விடயம் என்னவென்றால், கடந்த காலங்களில் நெருக்கடியை சீரமைப்பதற்கான சில முக்கிய நடவடிக்கைகளை தீவிரமாக எதிர்த்த பலர், இன்று அதே கொள்கைகளை ஆதரிப்பதையும், நடைமுறைப்படுத்துவதையும் காணமுடிகிறது. யதார்த்தம் தன்னைத்தானே நிலைநிறுத்திக்கொள்ளும் என்பதற்கு இது ஒரு சான்றாகும்.
அதேவேளை எதிர்த்தரப்பினரால் முன்வைக்கப்படும் பல விடயங்கள் எப்போதும் உண்மைகளை அடிப்படையாகக்கொண்டவை அல்ல அல்லது நடைமுறைக்கு சாத்தியமான தீர்வுகள் அல்ல என்பதை பொதுமக்கள் புரிந்துகொண்டு, அங்கீகரிக்கத் தொட்ஙகினால், அதுவே ஒரு முதிர்ச்சியடைந்த ஜனநாயகத்தின் பரிணாம வளர்ச்சியாகும்.
அரசியல் நாடகங்கள் அல்லது ஜனரஞ்சகக் கருத்துக்களின் ஊடாக அன்றி, உண்மைகள் மற்றும் பொறுப்புக்கூறலை அடிப்படையாகக்கொண்ட கொள்கைகளின் மூலமே இலங்கை முன்நோக்கி நகரும். சில சமயங்களில் யதார்த்தமே மிகச்சிறந்த ஆசிரியராக அமைகிறது எனக் குறிப்பிட்டுள்ளார்.





