இலங்கைக்கு விரைவில் 900 மில்லியன் டொலர் கிடைக்கும் - அரசாங்கம் நம்பிக்கை
அந்நிய செலாவணி இருப்பை தக்க வைத்துக் கொள்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
உலக யுத்த நிலைமை உள்ளிட்ட வெளிப்புறக் காரணிகளாலேயே நாட்டின் பொருளாதாரத்தில் தற்காலிக ஸ்திரமற்ற தன்மை ஏற்பட்டுள்ளது. எனினும், சர்வதேச நாணய நிதியம் மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி ஆகியவற்றின் ஊடாக விரைவில் சுமார் 900 மில்லியன் டொலர் நாட்டுக்குள் வரவுள்ளதால், இந்த நிலைமையை வெற்றிகரமாக முகாமைத்துவம் செய்ய முடியும் என பதில் அமைச்சரவை பேச்சாளர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு 19-05-2026 அன்று கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில், நிதி அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைவரம் தொடர்பில் அமைச்சரவைக்கு விளக்கமளித்தார். உலக யுத்த நிலைமை உள்ளிட்ட வெளிப்புற காரணிகளாலேயே பொருளாதாரத்தில் ஸ்திரமற்ற தன்மை ஏற்பட்டுள்ளது. மாறாக உள்ளகக் காரணிகளால் அல்ல.
அவற்றை எதிர்கொள்வதற்காக சில தீர்மானங்களை எடுக்க வேண்டியுள்ளது. அந்த வகையிலேயே மேலதிக புதிய வரி விதிப்பும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அந்நிய செலாவணி இருப்பை தக்க வைத்துக் கொள்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து விரைவில் 700 மில்லியன் டொலர் கிடைக்கவுள்ளது.
ஆசிய அபிவிருத்தி வங்கி 200 மில்லியன் டொலரை வழங்குவதாக தெரிவித்துள்ளது. அந்த வகையில் குறிப்பிட்டளவு டொலர் நாட்டுக்குள் வரவுள்ளது. இறக்குமதி மட்டுப்பாடுகள் ஊடாக டொலர் இருப்பு பேணப்படுகிறது. இதேவேளை ஏற்றுமதி வருமானமும் அதிகரித்துள்ளது. அதற்கமைய இந்த நிலைமையை முகாமைத்துவம் செய்ய முடியும் என்று நம்புகின்றோம் என்றார்.





