1.4 மில்லியன் டொலருக்கும் அதிக வரியை செலுத்த தவறியுள்ள இ-வீசா சேவை வழங்குநர்கள்
திணைக்களத்தால் அறவிடப்படும் விசா கட்டணத்துடன் மேலதிகமாக, புதிய முறைமையின் கீழ் விசா விண்ணப்பதாரர்கள் அனைவரும் விலக்குக்குத் தகுதியானவர்கள் உட்பட 18.50 டொலர் சேவை கட்டணம் செலுத்த வேண்டியிருந்தது என்று கணக்காய்வு அறிக்கை குறிப்பிட்டுள்ளது.
 
        
இலத்திரனியல் வீசா (இ-வீசா) திட்டத்துடன் தொடர்புடைய சேவை வழங்குநர்கள் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்குச் செலுத்த வேண்டிய 1.4 மில்லியன் டொலருக்கும் அதிகமான வரிகளைச் செலுத்தத் தவறியுள்ளதாக இ-விசா ஒப்பந்தம் குறித்த விசேட கணக்காய்வு அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
குறித்த அறிக்கைக்கமைய வி.எப்.எஸ். வேல்ட்வைட் ஹோல்டிங்ஸ் (VFS VF Worldwide Holdings Ltd)  நிறுவனத்தின் கீழ் இயங்கும் ஜி.பி.எஸ். தொழிநுட்ப சேவைகள் மற்றும் ஐ.வி.எஸ். க்ளோபல் நிறுவனமானது, 2024 ஏப்ரல் - ஆகஸ்ட்டுக்கு இடையில் விசா விண்ணப்பதாரர்களிடமிருந்து 2.5 சதவீத சமூகப் பாதுகாப்புப் பங்களிப்பு வரி (SSCL) மற்றும் 18 சதவீத பெறுமதி சேர் வரி (VAT) ஆகிய இரண்டையும் சேகரித்துள்ளது.
இருப்பினும், இந்த தொகைகள் சமூகப் பாதுகாப்புப் பங்களிப்பு வரியில் சுமார் 172,970 டொலர்களாகவும், பெறுமதி சேர் வரியில் 1,245,390 டொலர்களாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்துக்கு வரி செலுத்தாமையால் அரசாங்கத்தின் மொத்த வரி இழப்பு 1,418,360 டொலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த காலகட்டத்தில் நிறுவனங்கள் 373,991 விசா விண்ணப்பங்களைக் கையாண்டுள்ளன என்றும், குறைந்தபட்சம் 6.9 மில்லியன் டொலர் சேவை கட்டண வருவாயை ஈட்டியுள்ளன என்றும் அறிக்கை குறிப்பிடுகிறது.
மேலும், சுற்றுலாப் பயணிகள் விசா கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்களிக்கப்பட்டிருந்தாலும், அவர்களுக்குச் சேவை கட்டணங்கள் விதிக்கப்பட்ட விசா கட்டண விலக்கு நாடுகளிலிருந்து இந்த நிறுவனங்கள் மேலதிகமாக 1.8 மில்லியன் டொலர்களை ஈட்டியுள்ளன. இது முந்தைய இலத்திரனியல் பயண அனுமதி (ETA)  முறைமையின் கீழ் உருவாக்கப்பட்டிருக்காத வருமானம் ஆகும்.
திணைக்களத்தால் அறவிடப்படும் விசா கட்டணத்துடன் மேலதிகமாக, புதிய முறைமையின் கீழ் விசா விண்ணப்பதாரர்கள் அனைவரும் விலக்குக்குத் தகுதியானவர்கள் உட்பட 18.50 டொலர் சேவை கட்டணம் செலுத்த வேண்டியிருந்தது என்று கணக்காய்வு அறிக்கை குறிப்பிட்டுள்ளது.
வரி செலுத்தத் தவறியமை, விசேட கணக்காய்வு அறிக்கையில் அடையாளம் காணப்பட்ட பல முறைகேடுகளில் ஒன்றாகும். இது இ-விசா திட்டத்தை வழங்குவதிலும் அமல்படுத்துவதிலும் ஏற்பட்ட பாரிய நடைமுறைத் தவறுகள், வருவாய் இழப்புகள் மற்றும் வெளிப்படைத்தன்மை இல்லாமை ஆகியவற்றைக் குறிப்பிடுவதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 





 
  
