பணவீக்கம் அதிகரித்துச் செல்வதாக தவறான கருத்துக்கள் பகிரப்படுகின்றன: பிரதி அமைச்சர்
தற்போது பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் பொறிமுறைக்குள்ளேயே நாம் பயணித்துக் கொண்டிருக்கின்றோம் என நிதி திட்டமிடல் பிரதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்தார்.
பணவீக்கம் சற்று அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி ஆளுனர் தெரிவித்திருக்கின்றார். இது தொடர்பில் போதிய தெளிவின்றி சிலர் பணவீக்கம் அதிகரித்துச் செல்வதாக தவறான கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர். தற்போது பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் பொறிமுறைக்குள்ளேயே நாம் பயணித்துக் கொண்டிருக்கின்றோம் என நிதி திட்டமிடல் பிரதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெளிவுபடுத்துகையில், சிலர் பொருளாதாரம் தொடர்பான தரவுகளை தவறான முறையில் அர்த்தப்படுத்துகின்றனர். பணவீக்கம் சற்று அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி ஆளுனர் தெரிவித்திருக்கின்றார். அது தற்போது 5 சதவீதமாகக் காணப்படுகிறது. ஆனால் இலங்கையில் ஒரு கால கட்டத்தில் பணவீக்கமானது 70 சதவீதம் வரை உயர்வடைந்தது. 100 ரூபா பெறுமதியான பொருளொன்றைக் கொள்வனவு செய்வதற்காக 170 ரூபாவை செலவிட வேண்டியிருந்தது.
இவ்வாறு காணப்பட்ட அதியுயர் பணவீக்கம் குறைக்கப்பட்டு தற்போது கட்டுப்பாட்டுக்குள் காணப்படுகிறது. தற்போது பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் பொறிமுறைக்குள்ளேயே நாம் பயணித்துக் கொண்டிருக்கின்றோம். 2023 - 2026 என்ற மூன்று ஆண்டு காலப்பகுதிக்குள் நாட்டின் பணவீக்கம் 5 வீதத்துக்குள் நிர்வகிக்கப்படுகிறது. அது மோசமான நிலைமை இல்லையல்லவா? பணவீக்கம் எல்லையின்றி அதிகரித்துச் செல்வதை கட்டுப்படுத்துவதே சிறந்ததாகும்.
அதனையே தற்போது எமது அரசாங்கம் செய்து கொண்டிருக்கிறது. பணவீக்கம் முறையாக நிர்வகிக்கப்பட்டு வருகிறது. 2025இல் பணவீக்கமானது தசம் பூச்சியத்திலேயே சுற்றிக் கொண்டிருந்தது. ஒட்டுமொத்தமாக எந்த பொருட்களதும் விலைகள் அதிகரிக்கப்படவில்லை. எம்மால் திட்டமிடப்பட்டுள்ள பொறிமுறைக்குள்ளேயே அது காணப்படுகிறது. எனவே இது குறித்த போதிய தெளிவற்றவர்கள் பணவீக்கம் அதிகரித்துச் செல்வதாக தவறான கருத்துக்களை வெளியிட்டுக் கொண்டிருக்கின்றனர். பொருளாதார ஸ்திரத்தன்மை நாம் எதிர்பார்த்ததை விட சிறந்த நிலைமையை அடைந்துள்ளது என்றார்.





