புதிய அரசியல் நாடகத்தை அரசாங்கம் அரங்கேற்றுகிறது: பொதுஜன பெரமுன தெரிவிப்பு
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் விவகாரத்தில் அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஏப்ரல் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் நடைபெற்று 07 ஆண்டுகள் நிறைவடையவுள்ள நிலையில்,அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலேவை கைது செய்து அரசாங்கம் புதிய நாடகத்தை அரங்கேற்றியுள்ளது என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஊடகப்பேச்சாளர் சஞ்ஜீவ எதிரிமான்ன தெரிவித்தார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் 25-02-2026 அன்றுநடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது: பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் அரசியல் கலாசாரம் மற்றும் அரசியல் தனித்துவத்தை சர்வதேசம் ஏற்றுக்கொண்டுள்ளது. இதன் வெளிப்பாடாகவே பிரித்தானியாவின் கேம்பிரிஜ் மற்றும் ஒக்ஸ்போர்ட் ஆகிய புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களின் மாணவர் அமைப்பினர் சிறப்பு சொற்பொழிவாற்றுவதற்கு அவருக்கு அழைப்பு விடுத்தனர்.
புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் மற்றும் விடுதலை புலிகள் அமைப்பின் ஆதரவாளர்கள் விடுத்த கடும் அழுத்தம் மற்றும் எதிர்ப்புக்களினால் பிரித்தானியாவின் கேம்பிரிஜ் மற்றும் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகங்களின் மாணவர் அமைப்புக்கள் நாமல் ராஜபக்ஷவுக்கு விடுத்த அழைப்பை இரத்துச் செய்தன.
விடுதலைப் புலிகள் அமைப்பு இலங்கையில் இருந்து முற்றாக அழிக்கப்பட்டாலும், உலகளாவிய ரீதியில் வியாபித்து பலமாக செயற்படுகின்றன.இதனை நாங்கள் ஆரம்பத்தில் இருந்து குறிப்பிட்டு வருகிறோம். புலம்பெயர் தமிழ் அமைப்புக்களின் நோக்கங்ளுக்கு அமைய அரசாங்கம் செயற்பட கூடாது என்பதை இதனால்தான் குறிப்பிடுகிறோம்.
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் விவகாரத்தில் அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார். குண்டுத்தாக்குதலை மேற்கொண்ட இரண்டு தற்கொலை குண்டுதாரிகளின் தந்தை மக்கள் விடுதலை முன்னணியின் தரப்பில் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டார். அவரின் பெயரை அந்த கட்சி தேசியப் பட்டியல் உறுப்பினராக குறிப்பிட்டிருந்தது.
குண்டுத்தாக்குதல்கள் இடம்பெற்ற போது பாதுகாப்பு பிரிவுக்கு பொறுப்பாக இருந்த இரண்டு உயரதிகாரிகள் இன்றும் பதவியில் உள்ளார்கள். அவர்கள் தலைமையில் விசாரணைகள் இடம்பெறும் போது இவற்றை தவிர பிறிதொன்றை எதிர்பார்க்க முடியாது என்றார்.





