பௌத்த கோட்பாடு உள்ள நாட்டில் சிறுபான்மை குழுக்கள் இருக்க வாய்ப்பில்லை: திலித் ஜயவீர எம்.பி.
தீர்க்க வேண்டிய பிரச்சினைகள் பல உள்ளன. சகலரையும் ஒன்றாக பார்க்க வேண்டும், இனவாதத்தை முழுமையாக நிராகரிக்கும் கொள்கையை கொண்டதே எமது பௌத்தம்.
சிங்கள பௌத்த கோட்பாடு உள்ள நாட்டில் சிறுபான்மை என்ற குழுக்கள் இருக்க வாய்ப்பில்லை.பௌத்தம் இனவாதத்தை முழுமையாக நிராகரிக்கும் கொள்கையை கொண்டது. இந்த அரசாங்கம் இல்லாத இனவாதத்தை இருப்பதாக குறிப்பிட்டு இனங்களை வேறுப்படுத்தி, முரண்பாடுகளை ஏற்படுத்தியுள்ளது என சர்வஜன சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் 17-11-2025 அன்று நடைபெற்ற 2026 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தில் வெளிநாட்டலுவல்கள்,வெளிநாட்டு , வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு, நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சுக்கான குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, சிங்கள பௌத்த கோட்பாடு உள்ள நாட்டில் சிறுபான்மை என்ற குழுக்கள் இருக்க வாய்ப்பில்லை. அந்தக் கோட்பாட்டுக்கு பௌத்த தர்மமே வழிகாட்டுகின்றது. இந்த நாட்டில் இந்த கோட்பாடுகள் இணைந்த செயற்பாடுகள் உள்ளன. உருவ வழிபாடு என்பது அவசியமற்ற ஒன்று என அமைச்சர் ஒருவர் கூறியிருந்தார்.
இவ்வாறான நிலைப்பாட்டை கொண்டவர்கள் அரசாங்கத்தில் இருக்கையில் அவர்கள் விகாரைக்கு சென்று பிரச்சினையை தீர்க்குமாறு பொலிஸாருக்கு கூறுகையில் அவ்வாறு செல்லும் பொலிஸார் பிக்குகள் மீது தாக்குதல் நடத்துகிறார்கள். துறவிகள் மீது தாக்குதல் நடத்துகிறார்கள்.காவி உடையை கழற்றி அடித்துள்ளனர். ஏன் இவ்வாறு தாக்குதல் நடத்த வேண்டும்.
தீர்க்க வேண்டிய பிரச்சினைகள் பல உள்ளன. சகலரையும் ஒன்றாக பார்க்க வேண்டும், இனவாதத்தை முழுமையாக நிராகரிக்கும் கொள்கையை கொண்டதே எமது பௌத்தம். ஆனால் எவ்வேளையிலும் இந்த நாட்டில் இனவாதம் இருப்பது போன்று கூறுவது இந்த அரசாங்கமே. இல்லாத இனவாதத்தை இருக்கின்றது இருக்கின்றது என்று காலையிலும் மாலையிலும் இந்த அரசாங்கமே குறிப்பிட்டது.
இந்த நாட்டுக்கு உரித்தான கொள்கையை சவாலுக்கு உட்படுத்தும் போது மக்கள் அரசாங்கத்துக்கு எதிராக இனம், மதம் என்ற வேறுபாடின்றி ஒன்றிணைவார்கள். நீங்கள் உருவ வழிபாடு தொடர்பில் கூறுகின்றீர்கள் என்றால் அது இந்துக்களையும் அவமதிப்பதை போன்றதே. நீங்கள் எங்களின் கலாச்சாரத்திற்கு எதிராகவே சிரிக்கின்றீர்கள். ஆனால் இந்த நாட்டு மக்கள் அந்த கலாச்சாரத்துக்கு இணங்கவே வாழ்கின்றனர். அந்த கலாச்சாரத்துடன் மோத வேண்டாம் என்றார்.





