இலங்கைக்கு எப்போதும் நம்பத்தகுந்த நண்பனாக பாகிஸ்தான் உடன்நிற்கும்: பாகிஸ்தான் அமைச்சர்
இலங்கையைச்சேர்ந்த எமது சகோதர, சகோதரிகளுக்கு அவசிமான மனிதாபிமான மற்றும் தொழில்நுட்ப உதவிகளை இயன்றவரை வழங்குவதற்கு பாகிஸ்தான் தயாராக இருக்கின்றது' எனவும் இதன்போது அமைச்சர் மொஹமட் ஜுனைட் அன்வர் சௌத்ரி உறுதியளித்தார்.
பேரனர்த்தத்தை அடுத்து இலங்கை அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட உடனடி நடவடிக்கைகளையும், பாதிக்கப்பட்ட மக்கள் வெளிப்படுத்திய தைரியத்தையும் பெரிதும் பாராட்டும் அதேவேளை, இப்போதும், எப்போதும் பாகிஸ்தான் ஒரு நம்பத்தகுந்த நண்பனாக இலங்கை மக்களுடன் ஒன்றாக நிற்கும் என பாகிஸ்தான் கடற்பிராந்திய விவகாரங்களுக்கான அமைச்சர் மொஹமட் ஜுனைட் அன்வர் சௌத்ரி தெரிவித்துள்ளார்.
'தித்வா' சூறூவளி காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு அனர்த்தங்களில் பல நூற்றுக்கணக்கானோர் பலியாகியிருப்பதுடன் இலட்சக்கணக்கானோர் தமது இருப்பிடங்கள் மற்றும் வாழ்வாதாரத்தை இழந்து வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நெருக்கடி மிகுந்த இத்தருணத்தில் சர்வதேச நாடுகள் பலவும் இலங்கைக்கு உதவிகளை வழங்கிவரும் நிலையில், பாகிஸ்தானும் பல்வேறு நிவாரண மற்றும் மனிதாபிமான உதவிகளைக் கட்டம் கட்டமாக வழங்கிவருகிறது.
இவ்வாறானதொரு பின்னணியில் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அவசியமான நிவாரணப்பொருட்களைப் பகிர்ந்தளிக்கும் நிகழ்வொன்று 09-12-2025 அன்று கொழும்பிலுள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகரகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வருகைதந்துள்ள பாகிஸ்தான் கடற்பிராந்திய விவகாரங்களுக்கான அமைச்சர் மொஹமட் ஜுனைட் அன்வர் சௌத்ரி இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டிருந்தார்.
நிகழ்வில் உரையாற்றிய அவர், பாகிஸ்தான் பிரதமர் மொஹமட் ஷெபாஸ் ஷரீப், பாகிஸ்தான் அரசாங்கம் மற்றம் மக்களின் சார்பில் இலங்கையில் 'தித்வா' சூறாவளியினால் மிகமோசமான இழப்புக்களுக்கும் பாதிப்புக்களுக்கும் முகங்கொடுத்திருக்கும் மக்களுக்குத் தனது ஆழ்ந்த அனுதாபத்தை வெளிப்படுத்தினார்.
'இந்த கடினமான வேளையில் பாகிஸ்தான் இலங்கையுடன் தோளோடு தோளாக நிற்கின்றது. பேரனர்த்தத்தை அடுத்து இலங்கை அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட உடனடி நடவடிக்கைகளையும், பாதிக்கப்பட்ட மக்கள் வெளிப்படுத்திய தைரியத்தையும் நாம் பெரிதும் பாராட்டுகின்றோம்.
இலங்கையைச்சேர்ந்த எமது சகோதர, சகோதரிகளுக்கு அவசிமான மனிதாபிமான மற்றும் தொழில்நுட்ப உதவிகளை இயன்றவரை வழங்குவதற்கு பாகிஸ்தான் தயாராக இருக்கின்றது' எனவும் இதன்போது அமைச்சர் மொஹமட் ஜுனைட் அன்வர் சௌத்ரி உறுதியளித்தார்.
இலங்கையில் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட உயிர்களைக் காப்பதற்காகவும், அவசியமான நிவாரண உதவிகளை வழங்குவதற்காகவும் பாகிஸ்தான் மீட்பு மற்றும் உதவிக்குழுக்கள் ஏற்கனவே இங்கு வருகைதந்திருப்பதாக சுட்டிக்காட்டிய அவர், பிரதமர் ஷெபாஸ் ஷரீப்பின் விசேட அறிவுறுத்தல்களுக்கு அமைய முக்கிய மனிதாபிமான உதவிகள் ஏற்கனவே இலங்கைக்கு அனுப்பிவைக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.





