கல்வி சீர்திருத்த விடயத்தில் ஜனாதிபதி தலையிட வேண்டும்: பல்கலைக்கழக ஆசிரியர்களின் சங்கம்
சத்தியாக்கிரகம் செய்யும் அரசியல்வாதிகளிடம், இதனைத் தங்களது அரசியல் எழுச்சிக்கான ஒரு திட்டமாக மாற்ற வேண்டாம் என அவர் கேட்டுக்கொள்கின்றோம்.
முறைசாரா கல்விச் சீர்திருத்தச் செயற்பாடுகளை உடனடியாக நிறுத்தி, அனைத்துத் தரப்பினருடனும் கலந்துரையாடி நாட்டுக்குப் பொருத்தமான புதிய சீர்திருத்தத்தை உருவாக்க வேண்டும். இந்த விவகாரத்தில் ஜனாதிபதி நேரடியாகத் தலையிட வேண்டும். அவ்வாறில்லை எனில் அடுத்த வாரம் தாமும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என பல்கலைக்கழக ஆசிரியர்களின் சங்கத்தின் செயலாளர் சிரேஷ்ட பேராசிரியர் சாருதத்த இலங்கசிங்க தெரிவித்தார்.
கொழும்பில் 12-01-2026 அன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், தற்போது முன்மொழியப்பட்டுள்ள கல்விச் சீர்திருத்தங்கள் முறைசாராதவை என்பதோடு, குறைபாடுகள் நிறைந்தவையாகும். இதற்கான பாடத்திட்ட அலகுகள், தேசிய கல்வி நிறுவனத்தின் சில குழுக்களினால் மிகவும் பொறுப்பற்ற முறையில் தயாரிக்கப்பட்டுள்ளன. அவற்றின் உள்ளடக்கம் மற்றும் விடயப்பரப்புகள் சிக்கலானவையாகும்.
உதாரணமாக, தொழில்முனைவு மற்றும் நிதி அறிவு போன்ற அலகுகளின் அட்டைப்படத்தில் உள்ள தலைப்புக்கும், உள்ளே இருக்கும் விடயங்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. அரசாங்கமும் எதிர்க்கட்சியின் சில பிரிவினரும் இந்த தீவிரமான கல்விப் பிரச்சினையைத் தங்களது அரசியல் இலாபத்துக்காக பயன்படுத்தி வருகின்றனர்.
அரசாங்கம் இதனை அரசியலாக்குகிறது. எதிர்க்கட்சியினர் ஓரினச்சேர்க்கை போன்ற விடயங்களைக் கையில் எடுத்து அரசியல் பிரச்சாரங்களை முன்னெடுக்கின்றனர். சத்தியாக்கிரகம் செய்யும் அரசியல்வாதிகளிடம், இதனைத் தங்களது அரசியல் எழுச்சிக்கான ஒரு திட்டமாக மாற்ற வேண்டாம் என அவர் கேட்டுக்கொள்கின்றோம்.
இந்த முறைசாரா கல்விச் சீர்திருத்தச் செயற்பாடுகளை உடனடியாக நிறுத்தி, அனைத்துத் தரப்பினருடனும் கலந்துரையாடி நாட்டுக்குப் பொருத்தமான புதிய சீர்திருத்தத்தை உருவாக்க வேண்டும். இது தொடர்பில் தலையிடுவதற்கு ஜனாதிபதிக்கு அதிகாரம் இருப்பதால், அவர் உடனடியாக இதில் தலையிட வேண்டும்.
அரசாங்கம் இது தொடர்பில் முறையான முடிவை எடுக்காவிட்டால், அடுத்த வாரம் முதல் ஆசிரியர்கள், அதிபர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்களுடன் இணைந்து தொடர்ச்சியான போராட்டத்தை முன்னெடுப்போம் என்றார்.





