மாகாணசபை தேர்தல் குறித்து பா.ஜ.க.அலட்டிக் கொள்ளவில்லை: விக்கி
இன ரீதியாக இந்த நாட்டை ஆள நினைக்கும் ஒரு மனித அலகு தமது அதிகாரத்தை குறைக்கும் அளவுக்கு நடந்து கொள்வார்களா என்று நாம் சிந்திக்க வேண்டும்.
மாகாண சபைகளுக்கான தேர்தல் தொடர்பில் இலங்கையின் தமிழ்க் கட்சிகள் குறித்த தேர்தல்கள் வேண்டும் என்று சேர்ந்து கோரிக்கை விடுக்காத போது நாம் ஏன் அது பற்றி அலட்டிக் கொள்ள வேண்டும் என்று பாரதீய ஜனதாக் கட்சியின் அரசாங்கம் வாளாதிருப்பதாகத் தெரிகிறது என்று தமிழ் மக்கள் கூட்டணி செயலாளர் நாயகம் நீதியரசர் க.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்தார்.
மாகாணசபை முறைமையை பெரும்பான்மை சிங்களவர்களும் தமிழர்களில் ஒரு சாராரும் எதிர்க்கின்றனர். 2018ல் இருந்து மாகாணசபைத் தேர்தல்கள் நடத்தப்படவில்லை. 13வது திருத்தச் சட்டத்தை இலங்கை அரசியல் யாப்பில் உள்ளடக்க உதவி புரிந்த இந்தியாவும் அநேகமாக அது பற்றி தற்போது எதுவும் பேசுவதில்லை. மாகாணசபைத் தேர்தல்கள் வைக்கப்படாமலே போய்விடுவனவா? அத் தேர்தல்கள் நடைபெறுவதால் தமிழர்களுக்கு நன்மை பயக்குமா? என்று எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தியாவில் தற்போது நடைபெறுவது காங்கிரஸ் ஆட்சி அல்ல. 13ஆவது திருத்தச்சட்டம் காங்கிரஸார் ஆண்ட காலத்திலேயே இங்கு அமுலுக்கு வந்தது. இலங்கையின் தமிழ்க் கட்சிகள் குறித்த தேர்தல்கள் வேண்டும் என்று சேர்ந்து கோரிக்கை விடுக்காத போது நாம் ஏன் அது பற்றி அலட்டிக் கொள்ள வேண்டும் என்று பாரதீய ஜனதாக் கட்சியின் அரசாங்கம் வாளாதிருப்பதாகத் தெரிகிறது. மாகாணசபைத் தேர்தல்கள் வேண்டுமா இல்லையா என்று முதலில் முடிவெடுக்க வேண்டியவர்கள் தமிழ்த் தேசியக் கட்சிகளே. அவர்களுள் ஒற்றுமை இல்லாத போது இந்தியா அது பற்றிப் பேசாதிருப்பதை நாம் பிழையென்று கூறமுடியாது.
எங்களுக்காக இந்தியா இறங்கி வந்தால் கூட 13ஆவது திருத்தச் சட்டத்தையும் மாகாணசபை முறைமையையும் கரிச்சுக் கொட்ட எங்களுள் பலர் இருக்கின்றார்கள். அவர்கள் சீனர்களின் கட்டுப்பாட்டில் இருக்கின்றார்களோ நான் அறியேன். அதிகாரங்கள் இல்லாத மாகாணசபைகளை நிறுவ தேர்தல்களைக் கொண்டு வர வேண்டும் என்று நீங்கள் ஏன் வலியுறுத்துகின்றீர்கள் என்று இந்தியாவைக் கேள்வி கேட்கக் கூடியவர்கள் எமது இலங்கைத் தமிழ்ப் பேசும் மக்களிடையே இருக்கத்தான் செய்கின்றார்கள்.
ஆனால் அவர்களின் இந்தக் குறுகிய பார்வை கொண்ட முடிவு இலங்கைத் தமிழ் மக்களின் வருங்காலத்தை வெகுவாகப் பாதிக்கப் போகின்றது. முதலில் தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒன்று சேர்ந்து தற்போதைக்கு மாகாணசபைத் தேர்தல்கள் உடனே நடத்தப்பட வேண்டும் என்ற முடிவை எடுக்க வேண்டும்.
தற்போதைக்கு எமது இரு தமிழ்ப் பேசும் மாகாணங்களை, தமிழர் பாரம்பரியமாக வாழ்;ந்து வரும் மாகாணங்களாக வலியுறுத்தும் சட்ட வலுவுள்ள ஒரே ஆவணம் 1987ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட இந்திய இலங்கை உடன்படிக்கையாகும். குறித்த உடன்படிக்கையில் இலங்கையின் வடகிழக்கு மாகாணங்கள் பாரம்பரியமாக இலங்கையின் தமிழ்ப் பேசும் மக்கள் வாழ்ந்து வந்த இடங்கள் என்பதை இரு நாடுகளும் உத்தியோகபூர்வமாக ஏற்றுக் கொண்டுள்ளன.
அந்த அடிப்படையில் எமக்குரிய சிறப்பம்சத்தை வலியுறுத்தி தற்போதிருக்கும் அதிகாரங்களை விரிவடையச் செய்ய வேண்டும். நாம் எமது அரசியல் குறிக்கோள்களை நிர்ணயிப்பது ஒன்று அதே நேரத்தில் மாறிவரும் அரசியல் சூழல்களின் மத்தியில் அவற்றை நாம் அடைவோமா என்று ஆராய்வது இன்னொன்று. எமது குறிக்கோள்களை நாம் நிர்ணயிப்பதில் தப்பெதுவும் இல்லை. ஆனால் கையில் ஒன்று காட்டில் இரண்டுக்கு சமம் என்பதை நாம் மறக்கக்கூடாது. எமது கையில் இருப்பது மாகாணசபை முறைமை, காட்டில் இருப்பது எமது அரசியல் குறிக்கோள்கள்!
இன ரீதியாக இந்த நாட்டை ஆள நினைக்கும் ஒரு மனித அலகு தமது அதிகாரத்தை குறைக்கும் அளவுக்கு நடந்து கொள்வார்களா என்று நாம் சிந்திக்க வேண்டும். காத்திராப் பிரகாரமாக இந்திய - இலங்கை உடன்பாடு 1987ம் ஆண்டில் கைச்சாத்திடப்பட்டது. அப்படி இருந்தும் அந்த உடன்பாட்டில் காணப்பட்ட வட கிழக்கு இணைப்பை மக்கள் விடுதலை முன்னணி உச்ச நீதிமன்றமூடாக இல்லாதாக்கியது. தரப்பட்ட சொற்ப காணி பொலிஸ் அதிகாரங்கள் எம்மை வந்தடையாமல் தொடர்ந்து வந்த அரசாங்கங்களால் தடைசெய்யப்பட்டது.
வடகிழக்கு மாகாணங்களுக்கென தீர்மானிக்கப்பட்ட மாகாணசபை முறைமை மற்றைய 7 மாகாணங்களுக்கும் ஏற்புடையதாக மாற்றப்பட்டது. ஆகவே இனி ஒரு சாதகமான அரசியல் யாப்பு சிங்களத் தலைவர்களிடம் இருந்து எமக்குக் கிடைக்கும் என்று நாம் எதிர்பார்ப்பது முட்டாள்தனம். சிலர் அமெரிக்கா எமக்குப் பெற்றுத்தரும் சீனா பெற்றுத் தரும் என்று கனவு காண்கின்றார்கள். நவீன இந்தியா இதற்கு இடமளிக்குமா என்று இவர்கள் சிந்திப்பதில்லை.
இருப்பதை நாம் கையேற்று அரசியல் ரீதியாக முன்னேற எத்தனிக்க வேண்டும்! மாகாணசபைகள் கலைக்கப்பட்டு ஏழு வருடங்கள் ஆகிவிட்டன. ஒரு ஜனநாயக நாடு எனப்படும் இந்த நாட்டில், மாகாணசபைத் தேர்தல் முறைமை எவ்வாறு அமைய வேண்டும் என்ற கேள்வியை எழுப்பி, தேர்தல்கள் ஏழு வருடங்கள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன. இதே போன்று பாராளுமன்றத் தேர்தலை வேளைக்கு நடத்தாது காலம் தாழ்த்த சிங்கள மக்கள் இடம் அளிப்பார்களா?
ஆனால் மாகாணசபைத் தேர்தல்கள் பற்றி சிங்கள மக்கள் பொறுமை காக்கின்றார்கள் என்றால் அவர்களுக்கு மாகாணசபைகள் தேவையற்ற ஒரு முறைமை என்பதே காரணம். வட கிழக்கு மாகாணங்களுக்கென தயாரிக்கப்பட்ட மாகாணசபை முறைமை ஜே.ஆர்.ஜயவர்;தனாவின் விருப்பத்தின் பேரில் மற்றைய ஏழு மாகாணங்களுக்கும் ஏற்புடையதாக சட்டம் மாற்றி தயாரிக்கப்பட்டது.
இப்பொழுது கூட எமது தமிழ்த் தலைவர்கள் மாகாணசபைத் தேர்தல்கள் வேண்டும் என்று முடிவெடுத்தால் நாங்கள் அரசாங்கத்திடம் வடகிழக்கு மாகாணசபைத் தேர்தல்களை மட்டும் முதலில் வைக்குமாறு கேட்கலாம். சிங்கள மக்களின் மனோநிலையில் தமக்குப் பாதகமாக எந்தவித மாற்றங்களும் ஏற்படவில்லை என்ற விம்பத்தை ஏற்படுத்த வடகிழக்கு மாகாணசபைத் தேர்தல்களை மட்டும் தற்போதைக்கு நடத்த அரசாங்கம் முன்வரலாம். ஆகவே நாம் கேட்காமல் இருந்தால் மாகாணசபைத் தேர்தல்கள் தொடர்ந்து வைக்கப்படாமலே இருக்க வாய்ப்புண்டு.
உங்கள் இரண்டாவது கேள்வி பற்றி இதுவரையில் நான் கூறியவற்றில் இருந்து எனது பதிலை உயர்த்துணர்ந்திருப்பீர்கள். அதாவது மாகாணசபைத் தேர்தல்கள் நடைபெற்று எமது தனித்துவம் வலியுறுத்தப்படாவிட்டால் நாம் சிங்கள மேலாதிக்கத்தின் கீழ் தொடர்ந்திருக்க நேரிடும். காலக்கிரமத்தில் எமது தனித்துவம் அழிந்து போய்விடும் என்றார்.





