சர்வதேச ஆதரவு அதிகரிக்கப்பட வேண்டும் - அமைச்சர் தம்மிக்க படபெந்தி
நிலச்சீரழிவை தடுப்பது, நிலத்தை நிலையான முறையில் பயன்படுத்துவது மற்றும் வறட்சியை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகளை மக்கள் பங்களிப்புடன் வலுப்படுத்த இலங்கை உறுதியாக இருக்கின்றது.
வறட்சி நிலைமை நெருக்கடியாக மாறுவதற்கு முன்னரே அதனை எதிர்கொள்வதற்கான தயார்நிலையை வலுப்படுத்த வேண்டுமெனவும் அதற்காக வளர்ந்து வரும் நாடுகளுக்கு சர்வதேச ஆதரவு அதிகரிக்கப்பட வேண்டும் எனவும் இலங்கை கோரியுள்ளது.
மொங்கோலியாவின் உலான்பாதரில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் பாலைவனமாதல் எதிர்ப்பு மாநாட்டின் நீர் மற்றும் வரட்சி மீள்திறன் தொடர்பான உயர்மட்ட அமைச்சர்கள் கலந்துரையாடலில் பங்கேற்று உரையாற்றும் போதே சுற்றாடல் அமைச்சர் கலாநிதி தம்மிக்க படபெந்தி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், காலநிலை மாற்றம் காரணமாக வரட்சி அபாயம் அதிகரித்து வருவதால், வரட்சி கடுமையாக ஏற்பட்ட பின்னர் நடவடிக்கை எடுப்பதை விட முன்கூட்டியே அதனை எதிர்கொள்ள தயாராக இருப்பது அவசியமாகும்.
இதற்காக வளர்ந்து வரும் நாடுகளுக்கு காலநிலை தொடர்பான தகவல்கள், முன்கூட்டிய எச்சரிக்கை முறைமைகள், தொழில்நுட்பம், திறன் மேம்பாடு மற்றும் போதுமான நிதி வசதிகள் கிடைக்க வேண்டும்;.
நிலச்சீரழிவை தடுப்பது, நிலத்தை நிலையான முறையில் பயன்படுத்துவது மற்றும் வறட்சியை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகளை மக்கள் பங்களிப்புடன் வலுப்படுத்த இலங்கை உறுதியாக இருக்கின்றது.
பாரம்பரிய குளங்களை அடிப்படையாகக் கொண்ட கிராமங்களை மீளமைத்தல், 'வனஸ்பதி' தேசிய வனப் பாதுகாப்புத் திட்டம் மற்றும் ஈரநிலங்களைப் பாதுகாத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மூலம் நிலம், நீர், காலநிலை மற்றும் உயிர்ப்பல்வகைமை தொடர்பான பிரச்சினைகளை இலங்கை ஒருங்கிணைந்த முறையில் எதிர்கொண்டு வருகின்றது.
நில மறுசீரமைப்பு, நீர்ப் பாதுகாப்பு மற்றும் வறட்சியை எதிர்கொள்ளும் நடவடிக்கைகளை வலுப்படுத்துவதற்காக சர்வதேச சமூகத்துடன் இணைந்து செயற்பட இலங்கை தயாராக இருக்கிறது என்றார்.





