சுரேஷ் சலே வைத்தியசாலையில் தொடர்ந்து தங்கி சிகிச்சை பெற வேண்டுமா? இல்லையா?
மேலதிக விசாரணைகளுக்கு தடை ஏற்பட்டுள்ளதாகவும் அரச சட்டத்தரணி நீதிமன்றத்திற்குத் தெரிவித்தார்.
பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்து, தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேவின் சுகாதார நிலைமை குறித்தும், அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தொடர்ந்து தங்கிச் சிகிச்சை பெற வேண்டுமா? இல்லையா? என்பது தொடர்பிலும் அறிக்கை சமர்ப்பிக்குமாறு கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் நேற்று புதன்கிழமை கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளருக்கு உத்தரவிட்டது.
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளை திசை திருப்பியமை உட்பட பல குற்றச்சாட்டுகளின் கீழ், முன்னாள் தேசிய புலனாய்வுத் பிரிவின் பிரதானி சுரேஷ் சலே உள்ளிட்ட இரு சந்தேகநபர்களுக்கு எதிரான வழக்கு நேற்று கொழும்பு கோட்டை நீதிவான் பஸன் அமரசேன முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் சார்பில் மன்றில் முன்னிலையான அரச சட்டத்தரணி ஒஸ்வால்ட் பெரேரா, விசாரணைகளின் முன்னேற்றம் குறித்த அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் 3 ஆவது சந்தேகநபரான சுரேஷ் சலேவின் சுகாதார நிலைமை குறித்தும், அவர் மேலும் தேசிய வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற வேண்டுமா இல்லையா என்பது தொடர்பிலும் கொழும்பு தேசிய வைத்தியசாலை பணிப்பாளரிடமிருந்து அறிக்கை ஒன்றைக் கோருமாறு அரச சட்டத்தரணி நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தார்.
சந்தேகநபர் சுமார் மூன்று மாதங்களாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்ததாகவும், அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யக்கூட முடியவில்லையெனவும், இதனால் மேலதிக விசாரணைகளுக்கு தடை ஏற்பட்டுள்ளதாகவும் அரச சட்டத்தரணி நீதிமன்றத்திற்குத் தெரிவித்தார்.
இதன்போது சந்தேகநபர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி ஷவீந்திர பெர்னாண்டோ, சுகாதார நிலைமை தொடர்பான அறிக்கையைக் கோருவதற்கு தமது ஆட்சேபனை இல்லை எனக் குறிப்பிட்டார். இருப்பினும், சந்தேகநபர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தபோதிலும், அவரிடம் வாக்குமூலம் பெறக்கூடிய நிலையில் அவர் இருப்பதாக மருத்துவர்கள் கூறிய போதிலும்,புலனாய்வு அதிகாரிகள் அவரிடம் வாக்குமூலங்களை பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் விடயங்களை முன்வைத்தார்.
முன்வைக்கப்பட்ட விடயங்களை ஆராய்ந்த நீதிவான், தேசிய வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்று வரும் சுரேஷ் சலேவின் சுகாதார நிலைமை குறித்தும், அவரைத் தொடர்ந்து வைத்தியசாலையில் அனுமதித்து சிகிச்சை அளிக்க வேண்டுமா? இல்லையா? என்பது தொடர்பில் அறிக்கை அளிக்குமாறு கொழும்பு தேசிய வைத்தியசாலை பணிப்பாளருக்கு உத்தரவிட்டார்.
இதனிடையே, விமானப்படையின் லெப்டினன்ட் என குறிப்பிடப்படும் அஜித் சாந்த குமார ஜயதிலக்க என்பவர் கடந்த வழக்கு விசாரணையின் போது பாதிக்கப்பட்ட தரப்பாக இவ்வழக்கில் தலையிடச் செய்த கோரிக்கையையும் கோட்டை நீதிவான் நிராகரித்தார்.இவ்வழக்கு செப்டம்பர் 15 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.





