ஷேக் ஹசீனா நாடு திரும்புவதற்கு இந்தியா நிபந்தனை விதிக்க முடியாது: வங்கதேசம் திட்டவட்டம்
இந்த விவகாரத்தில் இந்தியாவோ அல்லது வேறு எந்த நாடோ நிபந்தனைகளை விதிக்க முடியாது.
பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா வங்கதேசத்துக்குத் திரும்புவது தொடர்பாக இந்தியாவோ அல்லது வேறு எந்த நாடோ நிபந்தனைகளை விதிக்க முடியாது என்று வங்கதேசப் பிரதமர் தாரிக் ரஹ்மானின் ஆலோசகர் ஜாஹித் உர் ரஹ்மான் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
மாணவர்கள் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தைத் தொடர்ந்து, 2024 ஆகஸ்ட் மாதம் ஹசீனாவின் ஆட்சி கவிழ்ந்தது. இதையடுத்து அவர் வங்கதேசத்தை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்தார். அவரை வங்கதேசத்திடம் ஒப்படைப்பதற்கு புதுடெல்லி இரண்டு நிபந்தனைகளை முன்வைத்துள்ளதாக வெளியான தகவல்களுக்குப் பதிலளிக்கும் வகையில் ஜாஹித் இவ்வாறு தெரிவித்தார்.
“இந்த விவகாரத்தில் இந்தியாவோ அல்லது வேறு எந்த நாடோ நிபந்தனைகளை விதிக்க முடியாது. வங்கதேசம் தற்போது உறுதியான சட்ட அடிப்படையைக் கொண்ட சுதந்திரமான இறையாண்மை மிக்க நாடாக உள்ளது. எனவே, நியாயமற்ற எந்த நிபந்தனையையும் வங்கதேசம் ஏற்காது” என்று வங்கதேசச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறினார்.
இருப்பினும், ஹசீனாவை நாடு திரும்பச் செய்வதில் இந்தியா எந்த நிபந்தனையையும் விதிக்கும் என்று தாம் கருதவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.





