120 ஆண்டு பழமையான தேவாலய மணி திருட்டு
வின்னிபெக் நகருக்கு வடக்கே சுமார் 80 கிலோமீட்டர் தொலைவில், ஃப்ரேசர்வுட் அருகே அமைந்துள்ள சேக்ரட் ஹார்ட் ஆஃப் ஜீசஸ் உக்ரைனிய கத்தோலிக்க தேவாலயத்தில் இந்தத் திருட்டு நடந்துள்ளது.
கனடாவின் மனிடோபா மாகாணத்தில், சுமார் 120 ஆண்டுகள் பழமையானதும், 136 கிலோகிராம் எடை கொண்டதுமான தேவாலய மணி ஒன்று திருடப்பட்டுள்ளது. இவ்வளவு எடையுள்ள மணியை மரத்தால் கட்டப்பட்ட மணிக்கூண்டிலிருந்து திருடர்கள் எவ்வாறு அகற்றிச் சென்றனர் என்பது காவல்துறையினரையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
வின்னிபெக் நகருக்கு வடக்கே சுமார் 80 கிலோமீட்டர் தொலைவில், ஃப்ரேசர்வுட் அருகே அமைந்துள்ள சேக்ரட் ஹார்ட் ஆஃப் ஜீசஸ் உக்ரைனிய கத்தோலிக்க தேவாலயத்தில் இந்தத் திருட்டு நடந்துள்ளது.
மணி எப்போது, எவ்வாறு அகற்றப்பட்டது என்பது குறித்து இதுவரை எந்தத் தகவலும் கிடைக்கவில்லை என்று கனடாவின் அரசக் காவல்துறை (RCMP) தெரிவித்துள்ளது. இந்தத் திருட்டு தொடர்பாகச் சனிக்கிழமை புகார் அளிக்கப்பட்டதாகத் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் காவல்துறை தெரிவித்துள்ளது.
தேவாலயத்தின் பின்புறத்தில் தனியாக அமைந்துள்ள மரத்தால் மூடப்பட்ட மணிக்கூண்டு சுமார் ஒன்றரை மாடி உயரம் கொண்டது. மனிடோபாவின் இன்டர்லேக் பகுதியில், ஜிம்லி நகருக்கு வடமேற்கே சுமார் 12 கிலோமீட்டர் தொலைவில் இந்தத் தேவாலயம் அமைந்துள்ளது.
திருட்டுக் குறித்து விசாரணை நடத்திய காவல்துறையினர், மணிக்கூண்டின் மேற்பகுதியில் கணிசமான சேதம் ஏற்பட்டிருப்பதைக் கண்டறிந்துள்ளனர்.
இந்த மணியை யாராவது எதற்காகத் திருடியிருப்பார்கள் என்பது குறித்து ஊகிக்க விரும்பவில்லை என்று கனடாவின் அரசக் காவல்துறை (RCMP) தெரிவித்துள்ளது. இருப்பினும், அந்த மணியை உலோகக் கழிவாக விற்றுப் பணம் சம்பாதிக்கும் நோக்கில் யாராவது திருடியிருக்கலாம் என்பதே காவல்துறையினரின் தற்போதைய சந்தேகமாக உள்ளது.





