இனப்படுகொலை குற்றச்சாட்டில் இருந்து தப்பிக்கவே முடியாது - கஜேந்திரகுமார் எம்.பி.தெரிவிப்பு
நல்லிணக்கத்தை பேசும் போது உண்மையை கண்டறிவதில் எந்தத் தவறும் கிடையாது.
மியன்மாரில் ரோஹிங்யா மக்கள் மீது இனப்படுகொலையை இராணுவம் செய்தது என்ற தீர்ப்பு இலங்கை முன்னாள் இராணுவத் தளபதிகள் ஏற்கனவே இருந்த வெளிநாட்டு தடை விதிக்கப்பட்டுள்ள இராணுவ அதிகாரிகளுக்கு நடுக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பயங்கரவாதத்திற்கு எதிராக நீங்கள் செயற்படுகின்றீர்கள் என்று கூறி இனப்படுகொலை குற்றச்சாட்டில் இருந்து தப்ப முடியாது அதனால் குற்றம் செய்தவர்களுக்கு எதிராக தூக்குக் கயிறு இப்போது இறுகிக்கொண்டு வருகின்றதென தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ் மாவட்ட எம்.பி.யுமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் 28-11-2026 அன்று இடம்பெற்ற வரவு செலவுத் திட்டத்தில் பாதுகாப்பு அமைச்சு மற்றும் பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீட்டு குழு நிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், போர் முடிவுக்கு வந்து 18 வருடங்களாகின்ற போதும் தொடர்ச்சியாக இந்த இரண்டு அமைச்சுக்குமான நிதி ஒதுக்கீடு கணிசமாக அதிகரிக்கின்றது. தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திலும் இந்த நிதி அதிகரிக்கப்பட்டுள்ளது. முதலாவது வரவு செலவுத் திட்டத்தில் ஜனாதிபதி வாசிக்கும் போது முப்படைகளை தாம் குறைக்கப் போவதாக கூறினார். இரண்டு இலட்சத்து ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட இராணுவத்தினரின் எண்ணிக்கையை ஒரு இலட்சமாக குறைப்பதாகவும், கடற்படைகளை 40ஆயிரத்திற்கு குறைப்பதாகவும், விமானப் படையை 18ஆயிரமாக குறைப்பதாகவும் கூறியிருந்தார். இந்த பின்னணியிலும் தேசிய மக்கள் சக்தியின் மூன்றாவது வரவு செலவுத் திட்டத்தில் முப்படைகளுக்கான ஒதுக்கீடுகள் அதிகரித்துள்ளதென்றால் அதனை நாங்கள் கேள்விகளாக எழுப்புகின்றோம். அதில் கொள்கை முரண்பாடு உள்ளது.
அரசாங்கத்தின் பல மூத்த உறுப்பினர்களின் பேச்சுகளை கேட்கும் போது வரவேற்கத்தக்கதாக இருந்தாலும் நடைமுறையில் அரசாங்கத்தின் கருத்துக்களை தாண்டி அரசாங்கத்தின் செயற்பாட்டில் இடைவெளி உள்ளதா? என்ற கேள்விகள் எழுகின்றன. இன்று வரையில் வாயால் பேசும் வார்த்தைகளை தவிர இந்த அரசாங்கத்தின் நடவடிக்கைகளை எடுத்துப்பார்த்தால் இதற்கு முன்னர் இனவாதம் என்று குற்றச்சாட்டப்பட்ட அரசாங்கத்தின் அதே செயற்பாடுகளே இப்போதும் தொடர்கின்றதை போன்றே உள்ளது.
மஹிந்த ராஜபக்ஷ காலத்தில் போர் நடத்தப்பட்ட விதம் தமிழ் மக்களை பொறுத்தவரையில் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. நடைபெற்றது இனவழிப்பு என்றே முழுமையாக நம்புகின்றனர். அந்த இனவழிப்புக்கான ஆதாரங்களை நீதிமன்றத்திற்கு முன்னால் நிரூபிப்பதற்கு தமிழ் மக்கள் தயாராகவும் இருக்கின்றனர். அந்த குற்றத்தை செய்யும் சூழலை ஏற்படுத்திய அரசாங்கம் அதனை நிச்சயமாக விரும்பாது. தன்னுடைய செயற்பாடும் அதில் நிரூபிக்கப்படும். அவ்வாறான அரசாங்கம் தன்னுடன் செயற்பட்ட இராணுவ அதிகாரிகளை ஏதொவொரு வகையில் பாதுகாப்பதற்கே விரும்பும். இவ்வாறான உள்ளக ரீதியிலான நீதிமன்ற விசாரணை உண்மையை கண்டறியவும், நீதியை நிலைநாட்டவும் சந்தர்ப்பமாக இருக்க முடியாது. இதை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளராக இருந்த செயிட் கூறியுள்ளார்.
இலங்கையில் 35 வருடங்களுக்கு மேலாக நடந்த இனப்பிரச்சினை காரணமாக இலங்கை அரசின் கட்டுமானங்கள் பக்கச்சார்பற்ற வகையில் செயற்படும் பண்புகளை இழந்துவிட்டதாக கூறியுள்ளார். ஆகவே உள்ளக விசாரணை பொருத்தமற்றது என்றும், கலப்பு பொறிமுறையே சரியானது என்றும் கூறியுள்ளார். ஆனால் இந்த அரசாங்கத்தின் நிலைப்பாடும் முன்னர் இருந்த அரசாங்கத்தின் நிலைப்பாட்டில் ஒத்துப்போவதாகவே இருக்கின்றது.
மியன்மாரில் இந்த மாதத்தில் தீர்ப்பொன்று வழங்கப்பட்டுள்ளது. அந்த தீர்ப்பை எடுத்துப்பார்த்தால் இப்போதுள்ள இலங்கை முன்னாள் இராணுவத் தளபதிகள் ஏற்கனவே இருந்த வெளிநாட்டு தடை விதிக்கப்பட்டுள்ள இராணுவ அதிகாரிகளுக்கும் நடுக்கம் ஏற்படும் வகையிலேயே தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மியன்மாரில் ரோஹிங்யா மக்கள் மீது இனப்படுகொலையை இராணுவம் செய்தது என்ற தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனால் பயங்கரவாதத்திற்கு எதிராக நீங்கள் செயற்படுகின்றீர்கள் என்று கூறி இனப்படுகொலை குற்றச்சாட்டில் இருந்து தப்ப முடியாது என்ற தீர்ப்பை வழங்கியுள்ளது. ஆகவே இப்போது குற்றம் செய்தவர்களுக்கு எதிராக தூக்குக் கயிறு இறுகிக்கொண்டு வருகின்றது என்பதே உண்மை
இதேவேளை இராணுவத்தில் அனைவரையும் தவறானவர்கள் என்று எவரும் கூற மாட்டார்கள். ஆனால் இந்த அரசாங்கம், இந்த நாடு, குற்றம் செய்தவர்களை காப்பாற்றி வைத்திருப்பதால், யார் தவறு செய்தது என்று கண்டறிய மறுப்பதால் நாங்கள் இராணுவத்தில் உள்ள அனைவரையும் சந்தேகிக்க வேண்டியுள்ளது. சர்வதேச மட்டத்தில் ஒட்டுமொத்த இலங்கை இராணுவம் மீது சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது , குற்றப் பார்வையை ஏற்படுத்தும் வகையிலேயே உங்களுடைய அரசாங்கமும் செயற்படுகின்றது.
நல்லிணக்கத்தை பேசும் போது உண்மையை கண்டறிவதில் எந்தத் தவறும் கிடையாது. விடுதலைப் புலிகளின் உரிமைப் போராட்டத்தை உங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது என்று நீங்கள் கூறினாலும் இராணுவ ரீதியில் போராடும் போது சட்டங்கள் உள்ளன. ஒட்டுமொத்தமாக அந்த செயற்பாடுகள் எதனையும் விசாரணை செய்யாமல் இருந்தால் நீங்கள் பயப்படுவது உண்மை.இனவழிப்பு நிரூபிக்கப்பட்டால் அதன் அரசியல் விளைவுகள் உங்களுடைய அரசியல் நிலைப்பாட்டுக்கு ஒத்துப்போகாத காரணத்தினால் கடந்த அரசாங்கங்களைப்போன்று நீங்களும் அதனை மறைத்து, சாட்சியங்களை மறைப்பது போன்ற செயற்பாடுகளையே செய்கின்றீர்கள் என்றார்.





