அது என்ன முக்கியமா?: பெண் சிங்கத்திற்கு 'சீதை' பெயர் சூட்டுவது குறித்துக் கொல்கத்தா உயர்நீதிமன்றம் கேள்வி
திரிபுராவில் உள்ள ஒரு மிருகக்காட்சிசாலையில் இருந்து இரண்டு சிங்கங்களும் மேற்கு வங்கத்திற்கு கொண்டு வரப்பட்டதாகவும், மாநில அதிகாரிகளால் 'சீதை' மற்றும் 'அக்பர்' என்று பெயரிடப்பட்டதாகவும் விஸ்வ இந்து பரிஷத் கூறியது.

சஃபாரியில் பெண் சிங்கத்திற்கு 'சீதை' என்று பெயர் சூட்டுவதை எதிர்த்து விஸ்வ இந்து பரிஷத் தாக்கல் செய்த மனுவை விசாரித்த கொல்கத்தா உயர் நீதிமன்றம், ஒருவரின் பாசத்தின் காரணமாக பெயரிட முடியும் என்றும், அது என்ன முக்கியமான பிரச்சனையா என்றும் கேள்வி எழுப்பியது.
சிலிகுரியின் சஃபாரி பூங்காவில் 'சீதை' என்ற பெண் சிங்கத்துடன் 'அக்பர்' என்ற சிங்கத்தை ஒரே அடைப்பில் வைத்திருக்க மேற்கு வங்க வனத்துறை மேற்கொண்ட நடவடிக்கையை எதிர்த்து விஸ்வ இந்து பரிஷத் நீதிமன்றத்தை அணுகியிருந்தது.
"அதெல்லாம் எப்படி? பாசத்தின் காரணமாக பெயரிடப்பட்டிருக்கலாம். இது அவதூறு என்று நீங்கள் நினைக்கலாம், ஆனால் சிலருக்கு அது பாசத்தால் இருக்கும். ஒரு பெண் சிங்கத்திற்கு சீதை என்று பெயர் வைத்தால் என்ன சிரமம்?" என்று நீதிபதி சவுகதா பட்டாச்சாரியா தலைமையிலான ஒற்றை பெஞ்ச் கேள்வி எழுப்பியது.
"இது பெண் சிங்கத்தின் பெயரை வைத்த நபரின் மனநிலையைப் பொறுத்தது" என்று நீதிபதி கூறினார்.
பெண் சிங்கத்திற்குச் சீதை என்று பெயர் சூட்டுவது இந்துக்களின் மத உணர்வுகளை புண்படுத்துவதாகவும், அவர்களின் மத உரிமையை மீறுவதாகவும் விஸ்வ இந்து பரிஷத் கூறியுள்ளது.
"நாளைக்கு, ஒரு கழுதைக்கு ஏதாவது ஒரு தெய்வத்தின் பெயரைச் சூட்டலாம்... சீதையை வணங்குகிறோம். அவள் கோவிலில் இருக்கட்டும், காட்டில் அல்ல" என்று விஸ்வ இந்து பரிஷத் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறினார்.
துர்கா தேவியின் காலடியில் உள்ள சிங்கம் அனைவராலும் வணங்கப்படுவதையும் நீதிபதி சவுகதா பட்டாச்சாரியா குறிப்பிட்டார்.
"துர்க்கை தேவியின் காலடியில் சிங்கத்தைக் காணவில்லையா? துர்கா பூஜையின் போது சிங்கத்தை நாம் அனைவரும் வணங்குகிறோம் அல்லவா?" என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
விஸ்வ இந்து பரிஷத்தின் வழக்கறிஞர், எல்லா பக்கங்களிலிருந்தும் தீமையைத் தடுக்க துர்கா தேவியின் காலடியில் சிங்கம் இருப்பதாகவும், அதற்கு எந்தப் பெயரும் வழங்கப்படவில்லை என்றும் கூறினார்.
"இல்லை, நாங்கள் சிங்கத்தை வணங்குவதில்லை. தெய்வத்தை மட்டுமே வணங்குகிறோம். சிங்கத்தை வணங்குவதற்கு எந்த மந்திரமும் இல்லை" என்று விஸ்வ இந்து பரிஷத் வழக்கறிஞர் கூறினார்.
இருப்பினும், நீதிபதி சவுகதா பட்டாச்சாரியா, "ஆனால் சிங்கம் முழுப் (துர்கா) பூஜை விழாவின் ஒரு பகுதியாகும்" என்று பதிலளித்தார்.
திரிபுராவில் உள்ள ஒரு மிருகக்காட்சிசாலையில் இருந்து இரண்டு சிங்கங்களும் மேற்கு வங்கத்திற்கு கொண்டு வரப்பட்டதாகவும், மாநில அதிகாரிகளால் 'சீதை' மற்றும் 'அக்பர்' என்று பெயரிடப்பட்டதாகவும் விஸ்வ இந்து பரிஷத் கூறியது.
கூடுதல் அட்வகேட் ஜெனரல் தேப்ஜோதி சவுத்ரி நீதிமன்றத்தில், விலங்குகளுக்கு அரசு எந்தப் பெயரையும் கொடுக்கவில்லை என்று கூறினார்.
எவ்வாறாயினும், இரண்டு சிங்கங்களுக்குப் பெயர்களைக் கொடுத்ததா என்பதை பதிவு செய்யுமாறு உயர் நீதிமன்றம் மேற்கு வங்க அரசைக் கேட்டுக் கொண்டு இந்த விஷயத்தை வியாழக்கிழமைக்கு ஒத்திவைத்தது.