ஆளுநர்களால் பரிந்துரைக்கப்படும் சட்டமூலங்கள் மீது 3 மாதங்களில் குடியரசுத் தலைவர் முடிவெடுக்க வேண்டும்: உச்ச நீதிமன்றம்
மூன்று மாத காலத்திற்கு அப்பால் தாமதம் ஏற்பட்டால், பொருத்தமான காரணங்களைப் பதிவு செய்து சம்பந்தப்பட்ட மாநிலத்திற்கு தெரிவிக்க வேண்டும் என்று இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு கூறியது.

ஆளுநர்கள் பரிந்துரைக்கும் சட்டமூலங்களின் மீது மூன்று மாதங்களுக்குள் குடியரசுத் தலைவர் முடிவெடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் முதல் முறையாக கூறியுள்ளது. நிலுவையில் உள்ள சட்டமூலங்களுக்கு ஒப்புதல் அளிப்பதை நிறுத்தி வைக்கும் தமிழக ஆளுநரின் முடிவை செவ்வாய்க்கிழமை ரத்து செய்த நிலையில் உச்ச நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. இந்த உத்தரவு வெள்ளிக்கிழமை பொதுவெளியில் வெளியானது.
தமிழக வழக்கில் தீர்ப்பு வழங்கியபோது, நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா மற்றும் ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு, அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 201 இன் கீழ் குடியரசுத் தலைவரின் செயல்பாடுகளை நிறைவேற்றுவது நீதித்துறை மறுஆய்வுக்கு உட்பட்டது என்று கூறியது.
அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 201 இன் படி, ஒரு சட்டமூலம் ஆளுநரால் ஒதுக்கப்படும்போது, குடியரசுத் தலைவர், தான் சட்டமூலத்திற்கு ஒப்புதல் அளிப்பதாக அல்லது அதற்கு ஒப்புதல் அளிக்கவில்லை என்று அறிவிக்க வேண்டும். எனினும், அரசியலமைப்பில் அதற்குக் காலக்கெடு எதுவும் குறிப்பிடப்படவில்லை.
குடியரசுத்தலைவருக்குக் கையெழுத்துப் போடமாட்டேன் என்று கூறும் பாக்கெட் வீட்டோ இல்லை என்றும், ஒப்புதல் வழங்க வேண்டும் அல்லது நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் அடிக்கோடிட்டுக் காட்டியது.
"ஒரு சட்டத்தின் கீழ் எந்தவொரு அதிகாரத்தையும் பயன்படுத்துவதற்கு காலக்கெடு எதுவும் பரிந்துரைக்கப்படவில்லை என்றாலும், அது ஒரு நியாயமான காலத்திற்குள் பயன்படுத்தப்பட வேண்டும் என்பது சட்டத்தின் நிலைப்பாடு. அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 201 இன் கீழ் குடியரசுத் தலைவர் அதிகாரங்களைப் பயன்படுத்துவது இந்தப் பொதுவான சட்டத்தின் கொள்கைக்கு விலக்கு அளிக்கிறது என்று கூற முடியாது" என்று உச்ச நீதிமன்றம் கூறியது.
மூன்று மாத காலத்திற்கு அப்பால் தாமதம் ஏற்பட்டால், பொருத்தமான காரணங்களைப் பதிவு செய்து சம்பந்தப்பட்ட மாநிலத்திற்கு தெரிவிக்க வேண்டும் என்று இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு கூறியது.
"ஆளுநரால் தனது பரிசீலனைக்காக ஒதுக்கப்பட்ட சட்டமூலங்கள் குறித்து அத்தகைய குறிப்பு பெறப்பட்ட தேதியிலிருந்து மூன்று மாதக் காலத்திற்குள் குடியரசுத்தலைவர் ஒரு முடிவை எடுக்க வேண்டும் என்று நாங்கள் பரிந்துரைக்கிறோம்" என்று உச்ச நீதிமன்றம் கூறியது.