கேரளாவின் பெயரை 'கேரளம்' என மாற்ற சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றம்
கேரளாவின் பெயரை அரசியல் அமைப்புச் சட்டத்தில் ‘கேரளம்’ மாநிலம் என மாற்ற வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி முதல்வர் பினராயி விஜயன் தீர்மானம் கொண்டு வந்தார்.

கேரளாவின் பெயரை கேரளம் என மாற்றுவதற்கான தீர்மானம் அம்மாநிலச் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. இந்தத் தீர்மானத்தை எதிர்க்கட்சியான காங்கிரஸ் தலைமையிலான யு.டி.எஃப் மற்றும் ஆளுங்கட்சி தரப்பினர் ஒருமனதாக ஏற்றுக்கொண்டனர்.
கேரளாவின் பெயரை அரசியல் அமைப்புச் சட்டத்தில் ‘கேரளம்’ மாநிலம் என மாற்ற வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி முதல்வர் பினராயி விஜயன் தீர்மானம் கொண்டு வந்தார்.
இதே தீர்மானம் ஆகஸ்ட் 2023 இல் கேரள சட்டமன்றத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆனால் தொழில்நுட்ப காரணங்களால், அது மீண்டும் சமர்ப்பிக்கப்பட வேண்டியிருந்தது.
இந்த மாநிலத்தின் பெயர் மலையாளத்தில் 'கேரளம்' என்று முதல்வர் பினராயி விஜயன் காரணம் கூறினார்.
"நவம்பர் 1, 1956 அன்று மொழியின் அடிப்படையில் மாநிலங்கள் உருவாக்கப்பட்டன. கேரளாவின் பிறந்த நாளும் நவம்பர் 1 ஆம் தேதி ஆகும். மலையாள மொழி பேசும் சமூகங்களுக்காக ஒன்றுபட்ட கேரளாவை உருவாக்க வேண்டிய தேவை தேசிய சுதந்திரப் போராட்ட காலத்திலிருந்தே வலுவாக எழுந்தது. ஆனால், நமது மாநிலத்தின் பெயர் அரசியல் அரசியலமைப்பின் முதல் அட்டவணையில் கேரளா என்று எழுதப்பட்டுள்ளது.
அரசியலமைப்பின் 3 வது பிரிவின் கீழ் மாநிலத்தின் பெயரைத் திருத்தவும், அரசியலமைப்பின் எட்டாவது அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து மொழிகளிலும் 'கேரளம்' என்று மாற்றவும் சட்டமன்றம் ஒருமனதாக மத்திய அரசைக் கேட்டுக்கொள்கிறது என்று அவர் கூறினார்.