சிவகங்கையில் தமிழக பாஜக தொண்டர் வெட்டிக் கொலை
செல்வகுமாரின் உடலை காவல்துறையினர் மீட்டு அரசு மருதுவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சிவகங்கையில் பாஜக தொண்டர் ஒருவர் சனிக்கிழமை இரவு ஒரு கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமைக்கு ஆளும் திமுக அரசாங்கத்தை மாநில பாஜக தலைவர் கே அண்ணாமலை குறை கூறினாலும், சிவகங்கை எம்.பி கார்த்தி பி சிதம்பரம் இந்த கொலையில் எந்த அரசியல் கோணமும் இல்லை என்று கூறினார்.
சிவகங்கை மாவட்டச் செயலாளராக இருந்த செல்வகுமார், தனக்குச் சொந்தமான செங்கல் சூளையில் இருந்து இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது தாக்கப்பட்டார். ஒரு கும்பல் அவரை சுற்றி வளைத்து வெட்டிக் கொலை செய்து சாலையோரத்தில் விட்டுச் சென்றது.
செல்வகுமார் ரத்த வெள்ளத்தில் கிடப்பதை பார்த்த அந்த வழியாகச் சென்றவர்கள் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தபோது செல்வகுமார் இறந்து கிடந்தார். செல்வகுமாரின் உடலை காவல்துறையினர் மீட்டு அரசு மருதுவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அவரது கொலையைக் கண்டித்து கிராம மக்களும், செல்வகுமாரின் ஆதரவாளர்களும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என்று கோரி பாஜகவினர் சாலை மறித்து அவரது உடலை வாங்க மறுத்தனர். சட்டம் மற்றும் ஒழுங்கை நிலைநாட்ட அப்பகுதியில் ஏராளமான காவல்துறையினர் நிறுத்தப்பட்டுள்ளனர்.