தமிழர்களின் வரலாற்று கடமை

இலங்கையினுடைய ஜனாதிபதி தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் சில சொற்ப நாட்களே இருக்கின்றன. இந்த நிலையில் தமிழர் தரப்பு பெரும் குழப்பத்தை இந்த தேர்தலில் சந்தித்துக்கொண்டிருக்கிறது. அடிப்படையில் இம்முறை தேர்தலில் எவராலும் பெரும்பான்மைபலத்தை நிரூபிக்க முடியாத ஒரு சூழ்நிலை ஏற்பட்டிருக்கும் நிலையில், தமிழ் மக்களுடைய வாக்குகள் மிக முக்கியமான வாக்குகளாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தான் தமிழ் மக்கள் சார்பில் அதாவது வடக்கு - கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தி பொது வேட்பாளராக அரியநேத்திரன் களமிறக்கப்பட்டிருக்கிறார். அவருக்கான ஆதரவும் தமிழர் தாயகத்தில் தொடர்ந்தும் அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியவண்ணம் இருக்கிறது. இந்த சூழ்நிலையில்தான் இலங்கை தமிழரசுக்கட்சியின் சுமந்திரன் அணி பொது வேட்பாளருக்கு எதிர்ப்பு வெளியிட்டு வரும் அதேவேளை, சிறீதரன் அணி ஆதரவு தெரிவித்திருக்கிறது. ஒட்டுமொத்த தமிழர் தேசமும் ஒருமித்த கொள்கையில் இருக்கும்போது சுமந்திரன் அணியும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அணியும் மாத்திரம் எதிர்த்துக்கொண்டு இருப்பது தமிழர் தேசத்தின் சாபக்கேடாக அமைந்திருக்கிறது.
அதுவும் தமிழரசு கட்சியின் சுமந்திரன் அணி தென்னிலங்கையின் வேட்பாளர் சஜித் தரப்புக்கு ஆதரவு வழங்க முடிவெடுத்து அதற்கான தீர்மானத்தை அறிவித்திருக்கிறது. இவ்வாறானதொரு சூழ்நிலையில் தமிழ் மக்கள் எந்த தெரிவை முன்னெடுக்கப்போகிறார்கள் என்ற கேள்வி தற்சமயம் எழுந்திருக்கிறது. 1978 இல் கொண்டுவரப்பட்ட இலங்கையின் இரண்டாவது குடியரசு அரசியலமைப்புக்கிணங்க இதுவரை எட்டு ஜனாதிபதித் தேர்தல்கள் இடம்பெற்றுள்ளன. இந்த எட்டுத் தேர்தல்களிலும் தென்னிலங்கைச் சிங்கள வேட்பாளர்களுக்கே தமிழ் மக்கள் வாக்களித்துள்ளனர். கடந்த காலங்களில் தமிழ் மக்களாலும் தலைவர்களாலும் முன்னெடுக்கப்பட்ட இணக்கப்பாடுகளுக்கு இறுதியில் என்ன நடந்தது? என்பவை தமிழ் மக்களுக்கு முன்னால் வரலாறாக இருக்கின்றன. பண்டா - செல்வா, டட்லி - செல்வா ஒப்பந்தங்கள் தொடங்கி இடையில் இடைக்காலத் தன்னாட்சி அதிகார சபை, இறுதியாக நல்லாட்சி அரசின் புதிய அரசியலமைப்பு போன்ற எல்லாவற்றுக்கும் நடந்தது என்ன என்பதைத் தமிழ் மக்கள் நன்கு அறிவார்கள். ஆகவே தொடர்ந்தும் ஏமாற்றப்படும் ஒரு இனமாக தமிழினம் இருக்க முடியாது. யுத்தத்துக்கு பின்னரான 15 வருடங்களாக எத்தனையோ வாக்குறுதிகளை நம்பி தமிழர்கள் சிங்களவர்களுக்கு ஆதரவளித்தும் அவை அனைத்தும் காற்றோடு காற்றாக பறக்கவிடப்பட்டிருக்கின்றன.
இந்நிலையில்தான் பொறுமையிழந்த தமிழர் தேசம் புதிய ஒரு ஆயுதத்தை இந்த தேர்தலில் கையில் எடுத்திருக்கிறது. ஈழத்தமிழர்கள் இன்றும் தங்களுடைய அபிலாஷைகளில் உறுதியாக இருக்கிறார்கள் என்பதை சர்வதேசத்துக்கும் தென்னிலங்கையின் சிங்கள மக்களுக்கும் தெளிவான ஒரு செய்தியை வழங்குவதற்கு தமிழர் தாயகம் ஒருமித்த நிலைப்பாட்டில் எதிர்வரும் தேர்தலை அணுகுவது காலத்தின் தேவையாகும். இதனூடாக பல நகர்வுகளை முன்னகர்த்த முடியும் என்பது நிதர்சனம். அந்த அடிப்படையில் சிங்களவர்களின் கைக்கூலிகளாக செயற்படும் சுமந்திரன் சாணக்கியன் போன்றவர்களின் நரிவலைக்குள் ஈழத்தமிழர்கள் சிக்கிவிடக்கூடாது. நீண்டகாலத்துக்கு பின்னர் தமிழர் தேசம் ஒருமித்து ஒரு நிலைப்பாட்டை எடுத்திருக்கும் ஒரு சூழ்நிலையில், அதனை குழப்புவதற்கு பல குழுக்கள் களத்தில் இறங்கியிருக்கின்றன. குறிப்பாக இம்முறை தேர்தல் விஞ்ஞாபனங்களில் கூட பிச்சையிடுவது போல தருவோம் என்று கூறுகிறார்களே அன்றிப் பகிர்வோம் என்று கூறவில்லை. யார் வந்தாலும் தமிழர்கள் தமது உரிமைகளைப் பெற ஒத்துழைப்போம் என்று கூறாது நான் வந்தால் தருவேன் என்றுதான் கூறுகிறார்கள். இவர்களை தமிழ் மக்கள் எவ்வாறு நம்புவது? ஆகவே ஈழத்தமிழறிகள் ஒருமித்து சிந்தித்து காலம்கடத்தும் துச்சமாக விடயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் எங்களுடைய உரிமைகளுக்காக நாங்களே போராடி பெற வேண்டுமென்ற படிப்பினையையும் கடந்த கால வரலாற்று நிகழ்வுகளை நினைவில் வைத்து ஒரு தெளிவான இனியும் எங்களை ஏமாற்றமுடியாது என்ற செய்தியை சர்வதேசத்துக்கு சிங்கள தரப்புகளுக்கும் உரத்துக்கூறும் செய்தியை எதிர்வரும் 21 இல் மாற்றத்துக்கான ஒரு களமாக பயன்படுத்த முன்வரவேண்டுமென வேண்டிநிற்கிறோம்.
“நீதிக்கான குரல்” இதழின் வாயிலாக வாசகர்கள் அனைவருக்கும் எமது வேண்டுகோள் என்னவென்றால், நாம் அனைவரும் ஒன்றுபட்டு நீதிக்காக போராட முன்வரவேண்டும். மேலும் இந்த இதழை உங்களது நண்பர்கள்;, உறவினர்கள் அனைவரிடமும் கொண்டு சேர்க்கவேண்டும் என்று வேண்டுகிறோம்.
ஒன்றிணைந்து! இச்சமூகத்தை மாற்ற நம்மால் இயலும். அடுத்த பதிப்பில் யாம் உங்களை சந்திப்போம், அதுவரை அன்புடன்,
உங்கள்
சதீஸ்சன் குமாரசாமி
தலைமை ஆசிரியர்