தமிழ் அரசியல் தலைமைகளும் புதிய ஆட்சியாளர்களும்

இலங்கையில் புதியதொரு மாற்றம் அண்மையில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலூடாக ஏற்பட்டிருக்கிறது. இந்த மாற்றம் என்பது இலங்கைக்கு எவ்வாறான சாதக-பாதக நிலைமைகளை ஏற்படுத்தும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டியிருக்கிறது. காரணம் ஆட்சிக்கு வந்திருப்பவர்கள் புதியவர்கள். அதிலும் புதிய ஆட்சியாளர்கள் இடதுசாரிக்கொள்கை மற்றும் தேசியவாதம் சார்ந்த கொள்கைகளைப் பின்பற்றி வரும் ஒரு அணி. அதனை விட மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராக இரண்டு தடவைகள் ஆயுதக் கிளர்ச்சியில் ஈடுபட்டிருந்த கறைபடிந்த அரசியல் வரலாற்றை கொண்டதொரு அணி. இலங்கைக் கம்யூனிஸ்ட் (சீன சார்பு) கட்சியில் இருந்து பிரிந்து சென்ற ரோகண வீஜயவீர 1965 மே 14 அன்று மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) என்ற கட்சியை நிறுவினார். சோசலிச சமத்துவத்திற்குப் பாடுபடப் போவதாக அறிவித்த அந்த கட்சி அது தொடர்பாக அரசியல் வகுப்புக்கள் பலவற்றை நடத்தினர். இவற்றால் கவரப்பட்ட படித்த கிராமப்புற இளைஞர்கள், மாணவர்கள், தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்கள் பெருமளவாக ஜே.வி.பி.யில் இணைந்தனர். இரகசியமான முறையில் ஆயுதப் புரட்சிக்கு வேண்டிய ஆயத்தங்களையும் செய்து வந்தனர்.
1971 மார்ச்சில் ஜே.வி.பி.யின் இரகசிய ஆயுதக்கிடங்கு பற்றி ஆளும் சிறிமாவோ பண்டாரநாயக்கா அரசிற்குத் தெரியவந்தது. இதனை அடுத்து ஜே.வி.பி.யின் தலைவர் ரோகண வீஜயவீர கைது செய்யப்பட்டார். பின்னர் யாழ்.சிறைச்சாலைக்குக் கொண்டு செல்லப்பட்டார். தலைவர் சிறைக்குள் இருக்கும்பொழுதே 1971 ஏப்ரல் 5ம் திகதி இலங்கை அரசிற்கு எதிராக ஜேவிபியினர் நாட்டின் பல பாகங்களில் ஆயுதக் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். பல பொலிஸ் நிலையங்கள் தாக்கப்பட்டன. தெற்கின் பல பாகங்கள் ஜேவிபியின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. கிளர்ச்சியினை முறியடிக்க இலங்கை அரசாங்கம் சர்வதேச உதவியினைக் கோரியது. உதவிக்கு விரைந்த இந்தியா, சீனா நாடுகளின் உதவியுடன் ஆயுதக் கிளர்ச்சி இரண்டு வார காலத்தினுள் அடக்கப்பட்டது. ஜேவிபி உறுப்பினர்கள் உட்பட பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். முடிவில் ஜே.வி.பி.யினை இலங்கை அரசு தடை செய்தது. 1977 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் வென்ற ஜே. ஆர். ஜெயவர்த்தனா தலைமையிலான ஐதேக அரசு ரோகண வீஜயவீரவை விடுதலை செய்ததுடன் ஜேவிபி மீதான தடையினையும் நீக்கியது. அதனைத் தொடர்ந்து கொழும்பில் 1983 ஜூலையில் இடம்பெற்ற இனக்கலவரத்தினை அடுத்து அக் கலவரத்திற்கு ஜேவிபியினரே காரணமெனக் கூறி இலங்கை அரசால் மீண்டும் இவ்வமைப்பு தடை செய்யப்பட்டது. இதன் பின்னர் ஜேவிபியினர் தலைமறைவாக இயங்கத் தொடங்கினர். அதேபோல், 1987-1989 ஆம் ஆண்டு கிளர்ச்சிக்கும் இவர்களே காரணமாக இருந்தனர். இந்த கிளர்ச்சியிலும் பல ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர் என்பது வரலாறு.
இவ்வாறான ரத்தம் கறைந்த வரலாற்றை கொண்ட ஒரு இயக்கம் தற்சமயம் இலங்கையின் ஆட்சி கதிரையில் அமரவைக்கப்பட்டிருக்கிறார்கள். இது இலங்கையின் அண்மைய நாடான இந்தியாவுக்கு பெரும் தலையிடியை கொடுத்திருப்பதுடன், அமெரிக்கா மற்றும் மேற்குலக நாடுகளுக்கும் சற்று அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருக்கிறது. காரணம் தற்போதைய ஆட்சியாளர்கள் சீன சார்பு கொள்கையை கொண்ட அணி என்பதுடன் இந்திய மற்றும் மேற்குலக நாடுகளின் கொள்கைகளுக்கு எதிரான ஒரு அணி. இதனூடாக தங்களுடைய காய்நகர்த்தல்களை இலங்கையில் மேற்கொள்ள முடியாது என்ற ஒரு அச்சம் இவர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. அதேபோல், ஈழத்தமிழருக்கும் ஈழத்தமிழ் போராட்டத்துக்கும் இந்த ஜே.வி.பி. கடந்த காலங்களில் பல்வேறு இடையூறுகளை விளைவித்திருக்கிறது என்பது வரலாறு. வடக்கு-கிழக்கு பிரிப்புக்கு முக்கிய காரணமாக இருந்தது இன்றைய ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவே. அதேபோல், ஈழத்தமிழரின் போரை அழிப்பதற்கும் இந்த கட்சி முன்னணியில் நின்று இனவாத சிங்கள மக்களுக்கு விஷத்தை கக்கியதும் இந்த ஜே.வி.பி.யினரே. அந்த அடிப்படையில் பார்த்தால் தங்களிடம் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது அந்த இயக்கம் வெளியில் காண்பித்தாலும் அவர்கள் தங்களுடைய கொள்கைகளில் இருந்து எந்தளவுக்கு மாறியிருக்கிறார்கள், தமிழர் விரோத எண்ணங்களிலிருந்து எந்தளவுக்கு மாறியிருக்கிறார்கள் என்பவை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டியவை. ஆனால், இனியும் இந்த நாட்டில் இனவாதம் பேசிக்கொண்டும் சிறுபான்மை இனங்களை அடக்கி ஆளும் தைரியம் எவருக்கும் இருக்காது என்பது கடந்த நான்கு வருடங்கள் இலங்கை அனுபவித்த வரலாற்றுப்பாடம் புகட்டியிருக்கிறது. எனவே புதிய ஆட்சியாளர்களும் தங்களை மாற்றிக்கொள்வார்கள் என்ற நம்பிக்கை இலங்கையர்களுக்கு இருக்கிறது. காரணம் சிங்கள மக்கள் இன்று விழிப்படைந்திருக்கிறார்கள். போரை வென்றுகொடுத்த ராஜபக்சக்களையும் பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை காப்பாற்றினாலும் நரிவேசம் போடும் ரணில் விக்ரமசிங்கவையும் சிங்கள மக்கள் இன்று தூக்கி வீசியிருக்கிறார்கள். எனவே இந்த பாடங்கள் இனிவரும் அரசியல்வாதிகளுக்கு முன் பெரும் பாடங்களாக இருக்கின்றன. எனவே மக்களை ஏமாற்றி அரசியல் செய்யும் யுகத்துக்கு இலங்கையர்கள் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்கள். அதேபோல் புதிய ஆட்சியாளர்கள் அந்த தவறுகளை செய்யமாட்டார்கள் என நம்புகிறோம்.
“நீதிக்கான குரல்” இதழின் வாயிலாக வாசகர்கள் அனைவருக்கும் எமது வேண்டுகோள் என்னவென்றால், நாம் அனைவரும் ஒன்றுபட்டு நீதிக்காக போராட முன்வரவேண்டும். மேலும் இந்த இதழை உங்களது நண்பர்கள்;, உறவினர்கள் அனைவரிடமும் கொண்டு சேர்க்கவேண்டும் என்று வேண்டுகிறோம்.
ஒன்றிணைந்து! இச்சமூகத்தை மாற்ற நம்மால் இயலும். அடுத்த பதிப்பில் யாம் உங்களை சந்திப்போம், அதுவரை அன்புடன்,
உங்கள்
சதீஸ்சன் குமாரசாமி
தலைமை ஆசிரியர்