பிரதமர் தலைமையிலான நிதி ஆயோக் கூட்டத்தில் ஒலிவாங்கி அணைத்து வைப்பு: மம்தா பானர்ஜி
"மேற்கு வங்கத்திற்கு மத்திய நிதி வழங்கப்படவில்லை என்று நான் பேசிக்கொண்டிருந்தேன், அப்போதுதான் அவர்கள் எனது ஒலிவாங்கியை முடக்கினர்" என்று மம்தா பானர்ஜி கூறினார்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் சனிக்கிழமை நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்திலிருந்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வெளிநடப்பு செய்தார். தனது ஒலிவாங்கி (மைக்) முடக்கப்பட்டதாகவும், ஐந்து நிமிடங்களுக்கு மேல் பேச அனுமதிக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார்.
தில்லியில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்ட எதிர்க்கட்சி ஆளும் மாநிலத்திலிருந்து ஒரே முதல்வராக இருந்த மம்தா பானர்ஜி, மேற்கு வங்கத்திற்கு மத்திய நிதி மறுக்கப்பட்ட பிரச்சினையை கொண்டு வந்தபோது தனது ஒலிவாங்கி முடக்கப்பட்டதாகக் கூறினார்.
"நான் ஐந்து நிமிடங்கள் மட்டுமே பேச அனுமதிக்கப்பட்டேன். சந்திரபாபு நாயுடு பேச 20 நிமிடம் அவகாசம் வழங்கப்பட்டது. அசாம், கோவா, சத்தீஸ்கர் முதல்வர்கள் 10-12 நிமிடங்கள் பேசினர். நான் எனது எதிர்ப்பைப் பதிவு செய்து வெளியே வந்தேன்" என்று திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் கூறினார்.
"மேற்கு வங்கத்திற்கு மத்திய நிதி வழங்கப்படவில்லை என்று நான் பேசிக்கொண்டிருந்தேன், அப்போதுதான் அவர்கள் எனது ஒலிவாங்கியை முடக்கினர்" என்று மம்தா பானர்ஜி கூறினார்.
இந்த நடவடிக்கை வங்காளம் மற்றும் அனைத்து பிராந்திய கட்சிகளுக்கும் அவமானம் என்று கூறிய மம்தா பானர்ஜி, என்.டி.ஏ கூட்டாளிகளுக்குச் சார்பானது என்று குற்றம் சாட்டினார்.
"என்னை ஏன் தடுத்தீர்கள், ஏன் பாரபட்சம் காட்டுகிறீர்கள் என்று கேட்டேன். எதிர்க்கட்சி தரப்பில் இருந்து, நான் மட்டுமே இங்கு பிரதிநிதித்துவப்படுத்துகிறேன். கூட்டுறவுக் கூட்டாட்சியை வலுப்படுத்த வேண்டும் என்ற அதிக ஆர்வத்தின் காரணமாக இந்த கூட்டத்தில் கலந்து கொள்கிறேன், "என்று அவர் முழங்கினார்.