இலங்கையில் மனித வள அபிவிருத்தியில் முதலீடு; சவூதி அரேபியா
பல்கலைக்கழகங்களை கட்டுதல், அபிவிருத்தி செய்தல் என்பது வெறும் கட்டடங்களை நிர்மாணிப்பது மட்டுமல்ல, மாறாக அது ஒரு பிரகாசமான எதிர்காலத்துக்கான அடித்தளமாகவும், மக்களுக்கு இடையேயான புரிதலையும் அறிவையும் இணைக்கும் பாலமாகவும் அமைகிறது.

இலங்கையில் மனித வள அபிவிருத்தியில் முதலீடு செய்வதும், இலங்கையின் கல்வித்துறையின் எதிர்காலத்தை அபிவிருத்தி செய்வதும் முக்கியமானவை என்பதில் சவூதி அரேபியா நம்பிக்கை கொண்டுள்ளதாக இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் காலித் ஹமூத் அல்கஹ்தானி தெரிவித்தார்.
வயம்ப பல்கலைக்கழக நகரமைப்புத் திட்டத்தின் திறப்பு விழாவில் பங்கேற்றமை தொடர்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
வயம்ப பல்கலைக்கழக நகரமைப்புத் திட்டத்தின் திறப்பு விழாவில் பங்கேற்பதில் மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன். இந்த கல்வி மற்றும் வளர்ச்சித் திட்டம், சவூதி அரேபியா மற்றும் இலங்கை ஆகிய இரு நாடுகளுக்கும் இடையேயான ஆழமான உறவுகளை பிரதிபலிக்கிறது.
சவூதி அபிவிருத்தி நிதியம், இலங்கை குடியரசில் சுமார் 425 மில்லியன் அமெரிக்க டொலருக்கும் மேற்பட்ட பெறுமதி கொண்ட 15 முக்கிய திட்டங்களுக்கு நிதி அளித்துள்ளது. இந்த வயம்ப பல்கலைக்கழக திட்டமும் சவூதியின் முக்கிய திட்டங்களில் ஒன்றாகும்.
இலங்கையில் மனித வள அபிவிருத்தியில் முதலீடு செய்வதும், இலங்கையின் கல்வித்துறையின் எதிர்காலத்தை அபிவிருத்தி செய்வதும் முக்கியமானவை என்பதில் சவூதி அரேபியா கொண்டுள்ள நம்பிக்கையே இந்த திட்டங்களை செயற்படுத்த காரணமாக அமைந்துள்ளன.
பல்கலைக்கழகங்களை கட்டுதல், அபிவிருத்தி செய்தல் என்பது வெறும் கட்டடங்களை நிர்மாணிப்பது மட்டுமல்ல, மாறாக அது ஒரு பிரகாசமான எதிர்காலத்துக்கான அடித்தளமாகவும், மக்களுக்கு இடையேயான புரிதலையும் அறிவையும் இணைக்கும் பாலமாகவும் அமைகிறது.
இந்த திட்டம், எவ்வித உட்புற நோக்கங்களோ அல்லது நிபந்தனைகளோ இல்லாமல், பரஸ்பர மரியாதை மற்றும் ஒத்துழைப்பை அடிப்படையாகக் கொண்ட உண்மையான அபிவிருத்திக் கூட்டுறவுகள் என்னவெல்லாம் சாதிக்கலாம் என்பதற்கான ஒரு முன்னுதாரணமாக உள்ளது.
1975ஆம் ஆண்டில் நிறுவப்பட்டதிலிருந்து, சவூதி அபிவிருத்தி நிதியம், உலகம் முழுவதும் அபிவிருத்தி மற்றும் அமைதிக்காக சேவையாற்றும் சவூதியின் கொள்கையின் அடிப்படையில், 90க்கும் மேற்பட்ட நாடுகளில் நிலைத்த பயனுடைய திட்டங்களை செயற்படுத்த மிகுந்த முயற்சியுடன் செயற்பட்டு வருகிறது.
மேலும், இரு புனித மஸ்ஜித்களின் பாதுகாவலர் மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ் அவர்களுக்கும் மற்றும் பிரதமர் மற்றும் பட்டத்து இளவரசர் முஹம்மத் பின் சல்மான் அவர்களுக்கும், மேலும் இந்தத் திட்டத்தின் வெற்றிக்கு பங்களித்த அனைத்து செயற்குழுக்கள், இலங்கையின் கல்வி அமைச்சில் உள்ள எமது நண்பர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
இறுதியாக, வயம்ப பல்கலைக்கழகம் அறிவின் கலங்கரை விளக்கமாகவும் நம்பிக்கையின் இல்லமாகவும் இருப்பதையும், மேலும் செழிப்பான மற்றும் பாதுகாப்பான இலங்கையை கட்டியெழுப்ப உதவும் புதிய தலைமுறைகளை உருவாக்கும் தளமாகவும் அமையும் என நான் எதிர்பார்க்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.