இலங்கை விஜயம் சம்பந்தமாக மனம் திறந்த ஐ.நா.மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர்
மோதல்கள் மற்றும் வன்முறைகளின் விளைவாக உருவான குழப்பங்களுக்கு மத்தியில் மனித உரிமைகளால் எம்மைத் தெளிவாக வழிநடத்தமுடியும்.

இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கான எனது அண்மைய விஜயங்களின்போது மிகமோசமான மீறல்களுக்கான பொறுப்புக்கூறல் மற்றும் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கான உண்மை மற்றும் நீதி என்பவற்றை உறுதிசெய்வதற்கு முன்னுரிமை அளிக்கப்படவேண்டியதன் அவசியம் உணரப்பட்டது என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேநேரம் சமூகங்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகள் கவனத்திற்கொள்ளப்படாதபோது, கருத்துக்களை வெளிப்படுத்துவதற்கான சிவில் இடைவெளி முடக்கப்படும்போது அங்கு மோதல்கள் உருவாவதை எமது கடந்தகாலப் பணிகள் காண்பித்துள்ளன எனவும் அவர் குறிப்பிட்டார்.
கிரீஸில் நடைபெற்ற 27 ஆவது சிமி கருத்தரங்கில் கலந்துகொண்டு மனித உரிமைகள் மீதான நம்பிக்கை மற்றும் எதிர்பார்க்கைகள் தொடர்பில் உரையாற்றுகையிலேயே உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
சிமி கருத்தரங்கு என்பது உலகநாடுகளின் தலைவர்கள், கொள்கை வகுப்பாளர்கள், புத்திஜீவிகள், சர்வதேச விவகாரங்களில் தேர்ச்சிபெற்ற நிபுணர்கள் உள்ளடங்கலாகப் பல்வேறு தரப்பினரையும் ஒன்றிணைக்கும் வகையில் கிரீஸில் உள்ள சிமி தீவில் அன்ட்ரியஸ் பபன்ரியோ பவுன்டேஷன் வருடாந்தம் ஒழுங்குசெய்து நடத்தும் உயர்மட்ட மாநாடாகும்.
இம்மாநாட்டில் உரையாற்றிய உயர்ஸ்தானிகர், இன்றளவிலே நாம் நாடுகளுக்கு இடையிலான மோதல்கள், அதிகரித்துவரும் பிரிவினைகள், காலநிலைமாற்ற அச்சுறுத்தல்கள் மற்றும் சமத்துவமின்மை என்பன உள்ளடங்கலாகப் பல்வேறு சவால்களுக்கு முகங்கொடுத்துவரும் நிலையில், நம்பிக்கையின் ஊடாகவே மனித உரிமைகளில் ஒரு வலுவான நங்கூரத்தைக் கண்டறியமுடியும் எனச் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதேபோன்று 'மனித உரிமைகள் சகல மனிதர்களுக்கும், சகல இடங்களுக்கும் பொருந்தக்கூடியவாறான இயல்பான, சட்டத்துக்குக் கட்டுப்பட்ட செயற்திட்டமொன்றைப் பிரதிபலிக்கிறது. மோதல்கள் மற்றும் வன்முறைகளின் விளைவாக உருவான குழப்பங்களுக்கு மத்தியில் மனித உரிமைகளால் எம்மைத் தெளிவாக வழிநடத்தமுடியும். அவை தீவிரமடைந்துவரும் காலநிலைமாற்ற நெருக்கடிகள் மற்றும் புதிய தொழில்நுட்பங்களால் உருவாகியிருக்கும் அச்சுறுத்தல்கள் என்பவற்றிலிருந்து எம்மை மீட்டு சீராகப் பயணிப்பதற்கு வழிகாட்டும்' என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
உலகளாவிய ரீதியில் சூடான், காஸா, உக்ரைன் மற்றும் மியன்மார் உள்ளடங்கலாக சுமார் 120 க்கும் மேற்பட்ட நாடுகளில் மோதல்கள் இடம்பெற்றுவருவதாகவும், அதன் விளைவாக பொதுமக்கள் பலர் கொல்லப்பட்டிருப்பதாகவும், பாலியல் வன்முறைகளுக்கு உள்ளாக்கப்பட்டிருப்பதாகவும், இடம்பெயர்ந்திருப்பதாகவும், பசியால் வாடிக்கொண்டிருப்பதாகவும், உயிர்காக்கும் மனிதாபிமான உதவிகளைப் பெறமுடியாத நிலையில் இருப்பதாகவும் வோல்கர் டேர்க் கவலை வெளியிட்டுள்ளார்.
அத்தோடு போர் என்பது முற்றுமுழுதான மனித உரிமை மீறல் எனக் குறிப்பிட்டுள்ள அவர், இருப்பினும் பொறுப்புக்கூறலை வலியுறுத்தல், மத்தியஸ்த்தம் கோரல் மற்றும் சமாதானத்தைக் கட்டியெழுப்பல் என்பவற்றின் ஊடாக அந்தப் போரில் இருந்து வெளிவருவதற்கு மனித உரிமைகள் வழிகாட்டுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் 'பங்களாதேஷ், இலங்கை, சேர்பியா மற்றும் சிரியா உள்ளிட்ட நாடுகளுக்கான எனது அண்மைய விஜயங்களின்போது மிகமோசமான மீறல்களுக்கான பொறுப்புக்கூறல் மற்றும் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கான உண்மை மற்றும் நீதி என்பவற்றை உறுதிசெய்வதற்கு முன்னுரிமை அளிக்கப்படவேண்டியதன் அவசியம் உணரப்பட்டது. மனித உரிமைகள் மோதல்கள் ஏற்படுவதைத் தடுப்பதற்கும் உதவும். சமூகங்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகள் கவனத்திற்கொள்ளப்படாதபோது, கருத்துக்களை வெளிப்படுத்துவதற்கான சிவில் இடைவெளி முடக்கப்படும்போது அங்கு மோதல்கள் உருவாவதை எமது கடந்தகாலப் பணிகள் காண்பித்துள்ளன. எனவே மோதல்கள், வன்முறைகளைத் தடுப்பதிலும், அமைதியைக் கட்டியெழுப்புவதிலும் நாம் அதிகளவில் முதலீடு செய்யவேண்டும்' என்றும் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் வலியுறுத்தியுள்ளார்.