எல்லை நிர்ணய பிரச்சினைகளுக்கு தீர்வு கண்ட பின் மாகாண சபை தேர்தல்: அமைச்சர் சந்தன
உள்ளூராட்சிமன்ற சபைகளை நியமிக்கும் பணிகள் நிறைவடைந்ததும்,மாகாண சபைத் தேர்தலுக்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.

மாகாண சபைத் தேர்தல்களின் எல்லை நிர்ணயம் குறித்து அமைச்சுக்களின் ஆலோசனைக் குழு கூட்டத்தில் விரைவாக கலந்துரையாடப்படும். எல்லை நிர்ணய பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டு மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உறுதியாகவுள்ளோமென மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சிமன்றங்கள், பொதுநிர்வாக அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவித்தார்.
மாகாண சபைத் தேர்தல் குறித்து வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
உள்ளூராட்சிமன்ற சபைகளை நியமிக்கும் பணிகள் நிறைவடைந்ததும்,மாகாண சபைத் தேர்தலுக்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது. மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உறுதியாகவுள்ளோம்.
நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் அப்போதைய மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சிமன்றங்கள் அமைச்சர் பைசர் முஸ்தபா சமர்ப்பித்த 2017 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க மாகாண சபைத் தேர்தல்கள் (திருத்தச்) சட்டமூலம் தோற்கடிக்கப்பட்டது.இந்த சட்டமூலம் தோற்கடிக்கப்பட்டதைத் தொடர்ந்து மாகாண சபைத் தேர்தல் காலவரையறையின்றி பிற்போடப்பட்டது.
மாகாணசபைத் தேர்தலை புதிய தேர்தல் முறைமையில் நடத்துவதா அல்லது பழைய தேர்தல் முறைமையில் நடத்துவதா என்பதில் பாரிய சிக்கல் காணப்படுகிறது. மாகாண சபைத் தேர்தலை நடத்துவதாயின் எல்லை நிர்ணய பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்.
இவ்விடயத்தில் முரண்பாடற்ற வகையில் தீர்வு காண்பது அத்தியாவசியமானது. மாகாண சபைத் தேர்தல்களின் எல்லை நிர்ணயம் குறித்து அமைச்சுக்களின் ஆலோசனைக் குழு கூட்டத்தில் விரைவாக கலந்துரையாடப்படும்.
அதற்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளன.மாகாண சபைத் தேர்தல் குறித்து பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சித் தலைவர்களுடன் வெகுவிரைவில் கலந்துரையாடலில் ஈடுபடுவோம்.
மாகாண சபைத் தேர்தல் குறித்து பாராளுமன்றத்தின் ஊடாக பொதுவானதொரு இணக்கப்பாடு எட்டப்பட வேண்டும்.அப்போது தான் சட்டசிக்கலுக்கு தீர்வு காண முடியும். மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல் மாகாண சபைகள் தொடர்ந்து இயங்குவது ஜனநாயக முறைமைக்கு பொறுத்தமானதாக அமையாது.
ஆகவே மாகாண சபைத் தேர்தல் விவகாரத்தில் எதிர்கட்சியினர் முழுமையான ஒத்துழைப்பு வழங்குவார்கள் என்று எதிர்பார்க்கிறோம் என்றார்.