கொழும்புத்திட்டம் குறித்து கலந்துரையாடல்
இச்சந்திப்பில் கருத்து வெளியிட்ட வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத், 'கொழும்புத்திட்டத்தின் ஸ்தாபக உறுப்பினராகவும், சுமார் ஏழு தசாப்தங்களாக அதன் செயலகத்தை நிர்வகிக்கும் நாடாகவும் இருப்பதனையிட்டு இலங்கை பெருமையடைகிறது.

கொழும்புத்திட்டத்தின் உறுப்புநாடுகள் மத்தியில் நிலைமாற்றமடைந்துவரும் தேவைப்பாடுகளை ஈடுசெய்யக்கூடியவகையில் அத்திட்டத்தின் ஊடாக மேற்கொள்வதற்கு முன்னுரிமை அளிக்கப்படவேண்டிய விடயங்கள் குறித்து வெளிவிவகார அமைச்சரும் கொழும்புத்திட்டத்தின் செயலாளர் நாயகமும் கலந்துரையாடியுள்ளனர்.
வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் மற்றும் கொழும்புத்திட்டத்தின் செயலாளர் நாயகம் கலாநிதி பெஞ்சமின் பி.ரேய்ஸ் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு 14-07-2025 அன்று வெளிவிவகார அமைச்சில் நடைபெற்றது.
இச்சந்திப்பின்போது கொழும்புத்திட்டத்தின் உறுப்புநாடுகள் மத்தியில் நிலைமாற்றமடைந்துவரும் தேவைப்பாடுகளை ஈடுசெய்யக்கூடியவகையில் கொழும்புத்திட்டத்தின் ஊடாக முன்னுரிமை வழங்கப்படவேண்டிய விடயங்கள் குறித்துக் கலந்துரையாடப்பட்டது.
அத்தோடு கொழும்புத்திட்டத்தின்கீழ் தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் செயற்திட்டங்கள் தொடர்பிலும் இதன்போது கருத்துக்கள் பரிமாறப்பட்டன.
அதேவேளை இச்சந்திப்பில் கருத்து வெளியிட்ட வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத், 'கொழும்புத்திட்டத்தின் ஸ்தாபக உறுப்பினராகவும், சுமார் ஏழு தசாப்தங்களாக அதன் செயலகத்தை நிர்வகிக்கும் நாடாகவும் இருப்பதனையிட்டு இலங்கை பெருமையடைகிறது. இது சகலரையும் உள்ளடக்கிய அபிவிருத்தி, பிராந்திய ஒத்துழைப்பு மற்றும் சுபீட்சம் என்பவற்றை அடைந்துகொள்வதில் நாம் கொண்டிருக்கும் ஆழமான கடப்பாட்டைக் காண்பிக்கிறது' எனத் தெரிவித்தார்.
அத்தோடு இலங்கை உள்ளடங்கலாக சகல உறுப்புநாடுகளும் பயனடையக்கூடியவகையில் கொழும்புத்திட்டத்தின் ஆதரவுடன் முன்னெடுக்கப்பட்டுவரும் இயலுமை மேம்பாடு, போதைப்பொருள் ஒழிப்பு ஆலோசனை சேவை மற்றும் ஏனைய அபிவிருத்தித்திட்டங்கள் தொடர்பில் அமைச்சர் விஜித்த ஹேரத் தனது பாராட்டையும் வெளிப்படுத்தினார்.