சபாநாயகருடன் இந்தோனேசியத் தூதுவர் சந்திப்பு
இந்த சந்திப்பில் இலங்கை – இந்தோனேசிய பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தை விரைவில் அமைப்பது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

இலங்கை – இந்தோனேசிய பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தை விரைவில் அமைப்பது குறித்து இலங்கைக்கான இந்தோனேசியத் தூதுவர் திவி குஸ்டினா டொபிங் மற்றும் சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன ஆகியோருக்கு இடையிலான சந்திப்பில் கலந்துரையாடப்பட்டது.
பாராளுமன்றத்தில் கடந்த 9ஆம் திகதி இடம்பெற்ற இச்சந்திப்பில் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர, அமைச்சு ஆலோசகரும், இந்தோனேசிய தூதரகத்தின் பிரதித் தூதுவருமான Fiki Oktanio மற்றும் இந்தோனேசிய தூதுரகத்தின் அமைச்சு ஆலோசகர் Lailal Khairiyah Yuniarti ஆகியோரும் கலந்துகொண்டனர்.
விவசாயம், வர்த்தகம், சுற்றுலா மற்றும் மக்களுக்கு இடையேயான உறவுகள் ஆகிய துறைகளில் இலங்கைக்கும் இந்தோனேசியாவிற்கும் இடையிலான நீண்டகால இருதரப்பு உறவுகளை இச்சந்திப்பில் பாராட்டிய சபாநாயகர், அவற்றை மேலும் வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார்.
இங்கு போக்குவரத்துத் துறை பற்றியும் கலந்துரையாடப்பட்டதுடன், இந்தோனேசியாவின் ஜகார்த்தா நகருக்கு அருகில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள பனோரமிக் ரயிலை இலங்கையின் போக்குவரத்துத் துறையின் மேம்பாட்டுக்குப் பயன்படுத்தக்கூடியதன் வாய்ப்புக்கள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.
அத்துடன், நாட்டில் இயங்கிவரும் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான பத்திக் (Batik) தொழில்துறை குறித்த அறிவைப் பரிமாறிக்கொள்ள வேண்டியதன் அவசியம் இருப்பதாக சபாநாயகர் இங்கு குறிப்பிட்டார்.
இந்தோனேசிய பாரம்பரிய இசைக்கருவியான ‘Angklung’ சமூக நல்லிணக்கம் மற்றும் சமூக சகவாழ்வின் கருத்தை எவ்வாறு பிரதிபலிக்கிறது என்பது குறித்தும் சபாநாயகர் கருத்துத் தெரிவித்தார்.
தற்போதைய அரசாங்கம் எவ்வாறு மக்களுக்கு பொறுப்புக்கூறக்கூடியதாகவும், ஊழல் மற்றும் முறைகேடுகளுக்கு எதிராக செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது என்பது பற்றியும் சபாநாயகர் எடுத்துக் கூறினார். அத்துடன், தற்போது முதலீட்டுத் திட்டங்களை மேற்கொள்வதற்கு இலங்கை பொருத்தமான நிலையில் உள்ளது என்பதையும் அவர் வலியுறுத்தினார். இலங்கை அரசாங்கம் முன்னெடுத்திருக்கும் திட்டங்களைப் பாராட்டிய இந்தோனேசியத் தூதுவர், இரு நாடுகளுக்கும் இடையிலான நல்லுறவை மேலும் வலுப்படுத்தும் வகையில் இணைந்து செயற்பட ஆவலுடன் இருப்பதாகவும் தெரிவித்தார்.
இந்த சந்திப்பில் இலங்கை – இந்தோனேசிய பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தை விரைவில் அமைப்பது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
இதேவேளை, இலங்கைக்கான இந்தோனேசியத் தூதுவர் திவி குஸ்டினா டொபிங் (Dewi Gustina Tobing) பிரதி சபாநாயகர் (வைத்தியர்) ரிஸ்வி சாலியையும் பாராளுமன்றத்தில் சந்தித்திருந்தார். இச்சந்திப்பில், விவசாயம், போக்குவரத்து, சுற்றுலா மற்றும் கலாசாரம் உள்ளிட்ட துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான தொடர்புகளை வலுப்படுத்துவது கலந்துரையாடப்பட்டது.